5 முதல் 11 வயது குழந்தைகளுக்கு பலனளிக்கும் ‘பைசர்’ தடுப்பூசி அமெரிக்க அரசின் அங்கீகாரம் கிடைக்குமா?

வாஷிங்டன்,

5 வயது முதல் 11 வயது வரையிலான குழந்தைகளுக்கு ‘பைசர்’ தடுப்பூசி பலனளிப்பதாகவும், இம்மாதம் அமெரிக்க அரசின் அங்கீகாரத்துக்காக விண்ணப்பிக்கப்படும் என்றும் ‘பைசர்’ நிறுவனம் கூறியுள்ளது.

அமெரிக்காவில் 12 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையவர்களுக்கு ‘பைசர்’ நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. பெரும்பாலான மேலை நாடுகளில் 12 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடப்படவில்லை.

கியூபா நாட்டில் மட்டும் 2 வயது குழந்தைகளுக்கு தடுப்பூசி போடும் பணி கடந்த வாரம் தொடங்கியது. அமெரிக்காவில், பள்ளிகள் திறந்து விட்டதால், 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கும் தடுப்பூசி வேண்டும் என்று பெற்றோர் கோரி வருகிறார்கள்.

இதற்கிடையே, அமெரிக்காவின் ‘பைசர்’ நிறுவனமும், ஜெர்மன் நாட்டை சேர்ந்த பயோஎன்டெக் நிறுவனமும் இணைந்து உருவாக்கிய தடுப்பூசியை 5 முதல் 11 வயது குழந்தைகள் 2 ஆயிரத்துக்கு மேற்பட்டோருக்கு பரிசோதித்து பார்க்கப்பட்டது.

பெரியவர்களுக்கு கொடுப்பதில் மூன்றில் ஒரு பங்கு மருந்து மட்டுமே கொடுத்து பார்க்கப்பட்டது. ஆனால், அந்த அளவு மருந்தை 2 டோஸ் போட்டதற்கே குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி கிடைத்தது. 12 வயதுக்கு மேற்பட்டவர்களைப்போல் வலிமையுடன் காணப்பட்டனர். அதே சமயத்தில் மற்ற இளம் வயதினரைப்போல், அவர்களுக்கும் காய்ச்சல், உடல் வலி போன்ற தற்காலிக பக்கவிளைவுகள் ஏற்பட்டன.

இந்தநிலையில், இந்த தடுப்பூசிக்கு அங்கீகாரம் கோரப்போவதாக ‘பைசர்’ நிறுவனம் அறிவித்துள்ளது. அந்த நிறுவனத்தின் மூத்த உதவித்தலைவர் டாக்டர் பில் கிருபர் நேற்று கூறியதாவது:-

‘பைசர்’ தடுப்பூசி, 5 முதல் 11 வயது குழந்தைகளுக்கு சிறப்பாக செயல்படுகிறது. எனவே, அமெரிக்க அரசின் உணவு மற்றும் மருந்து நிர்வாக அமைப்பின் அங்கீகாரம் கோரி இம்மாதம் விண்ணப்பிக்க உள்ளோம். அதன்பிறகு ஐரோப்பா, இங்கிலாந்து ஆகிய நாடுகளிலும் அங்கீகாரம் கோரி விண்ணப்பிப்போம்.

இந்த வயது குழந்தைகள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப தடுப்பூசி வேண்டும் என்று பெற்றோர் வலியுறுத்தி வருகிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதுபோல், மற்றொரு அமெரிக்க நிறுவனமான மாடர்னா, தொடக்கப்பள்ளி வயது குழந்தைகளுக்கு தனது தடுப்பூசியை செலுத்தி பரிசோதனை நடத்தி வருகிறது.

மேலும், பைசர் நிறுவனம், 6 மாத குழந்தைகளுக்கு தனியாக பரிசோதனை நடத்தி வருகிறது. அதன் முடிவுகள் இந்த ஆண்டு இறுதியில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

(நன்றி DAILY THANTHI)