ஜெர்மனியில் பொதுத்தேர்தல் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றுக் கொண்டிருக்கிறு. 16 ஆண்டுகளுக்குப் பிறகு அந்த நாட்டின் வாக்காளர்கள், தங்களுடைய ஆட்சித்துறைத் தலைவரை தேர்வு செய்ய இன்று வாக்குச்சாவடிகளுக்குச் செல்கின்றனர். யார் அடுத்த ஆட்சித்துறைத் தலைவர், யாருக்கு வெற்றி வாய்ப்பு, யாருடைய கூட்டணி ஆட்சியமைக்கும் என எதுவும் தெளிவில்லாத நிலையில் இன்றைய வாக்குப்பதிவு நடைபெறுவுள்ளது.
ஜெர்மன் தேர்தலில் மத்திய-வலதுசாரி வேட்பாளரான ஆர்மீன் லேஷெட்டுக்கு தமது ஆதரவைத் தெரிவித்துள்ளார் தற்போதைய ஆட்சித்துறைத் தலைவர் (சான்சலர்) ஏங்கலா மெர்க்கல். சிடியு கட்சியின் சனிக்கிழமை பொதுக்கூடத்தில் பேசிய ஏங்கலா, ஆர்மீன் லேஷெட்டை மக்களுக்கும் அரசுக்கும் இடையிலான பாலத்தை கட்டியெழுப்பியவர் என்றும் அவர் மக்களின் நம்பிக்கையைப் பெற்று பணியாற்றுவார் என்றும் கூறி தமது ஆதரவை அவருக்கு வெளிப்படையாக தெரிவித்தார்.
இந்த நிலையில், ஜெர்மன் ஆட்சித்துறைத் தலைவராக ஏங்கலா மெர்க்கெலுக்குப் பிறகு யார் வரப்போகிறார்கள் என்பதை இப்போது உறுதியாக சொல்ல முடியாது. ஆனால் போட்டியாளர்கள் அனைவரும் ஒரே போன்ற கடினமான சவாலை எதிர்கொண்டுள்ளனர். இத்தகைய ஒரு அரசியல் ஜாம்பவான் இருக்கும்போது, எப்படி தங்கள் தனித்தன்மையை காட்டுவது? என்ற குழப்பத்துடன் அங்குள்ள தலைவர்கள் தேர்தல் களம் காண்கிறார்கள்.
மெர்க்கல், ஜெர்மனியின் ஆட்சித்துறை தலைவராக 16 ஆண்டுகள் இருந்தார். அவருக்கு அடுத்து வருபவர்கள், செப்டம்பர் கூட்டாட்சி தேர்தலுக்கு முன் தங்கள் முத்திரையை பதிக்க வேண்டும்.
அவர்கள் யார், அவர்களது வாய்ப்புகள் என்ன என்பதை, பெர்லினில் உள்ள பிபிசி செய்தியாளர் டேமியன் மெக்கின்னஸின் மதிப்பீடு தெரிவிக்கிறது.
ஆர்மீன் லேஷெட், மத்திய வலதுசாரி சிடியு/ சிஎஸ்யு
அவர் முன்னிலையில் இருந்தார், ஆனால் பின்னர் அவரது பிரச்சாரம் தனது சொந்த பிழைகளின் விளைவாக பெரும்பாலும் தத்தளித்தது. இருப்பினும், அவர் இப்போதும் போட்டியில் உள்ளார்.
லேஷெட் (60), ஏங்கலா மெர்க்கலின் மைய-வலது கிறிஸ்துவ ஜனநாயகக் கட்சியின் (CDU) தலைவர். ஜெர்மனியின் அதிக மக்கள் தொகை கொண்ட மாகாணமான நார்த் ரைன்-வெஸ்ட்பாலியாவின் (NRW) முதல்வராகவும் உள்ளார்.
கட்சித் தலைமை அவருக்குப் பின்னால் அணிதிரண்ட பிறகு, அவர் தனது பவேரிய போட்டியாளரான மார்கஸ் சோடரை தோற்கடித்து, ஆட்சித்துறைத் தலைவர் வேட்பாளருக்கான வேட்புமனுவை சிரமப்பட்டுப் பெற்றார்.
கொரோனா தொற்றுநோய் காரணமாக, CDU மற்றும் அதன் பவேரிய சகோதர கட்சியான CSU க்கான ஆதரவு ஏற்கனவே குறைந்து வந்தது. NRW-வில் கோவிட் -19 நெருக்கடியின்போது, அவரது செயல்பாடு சீராக இருக்கவில்லை, என்றும் அவரது மோசமான மேலாண்மை குறித்தும் லேஷெட் மீது குற்றம் சாட்டப்பட்டது.
பின்னர் ஜூலை மாதம் ஜெர்மனியின் ஆட்சித்துறைத் தலைவர், பேரழிவுகரமான வெள்ளத்தால் பெரிதும் அழிக்கப்பட்ட ஒரு நகரத்தில் உரையாற்றியபோது லேஷெட் சிரித்தது கேமராவில் சிக்கியது. அந்த நிகழ்வால், அவரது நற்பெயர் மோசமாக பாதிக்கப்பட்டது. கருத்துக் கணிப்பில் தனது நிலையை மீட்க அவர் போராடினார்.
ஜெர்மானியர்கள் வாக்களிக்கத் தயாராகும் நிலையில் வெளிவந்த சமீபத்திய கருத்துக் கணிப்புகள், அவரது CDU/CSU பழமைவாதிகளுக்கு (conservatives) 23%ஐ அளித்துள்ளது. இது மைய-இடது SPD ஐ விட இரண்டு புள்ளிகள் குறைவு. அவரின் சொந்த கருத்துக்கணிப்பு மதிப்பீடும் பிரச்னையாக உள்ளது. ஐந்தில் ஒருவர் தான் அவரை அதிபர் பதவிக்கு சரியான வேட்பாளராகப் பார்க்கின்றனர்.
ஒரு சுரங்கத் தொழிலாளியின் மகனும், பல ஆண்டுகளாக வழக்கறிஞராகவும் பணியாற்றிய லாஷெட், ஜெர்மனியின் சக்திவாய்ந்த நிலக்கரித்துறைக்கு சாதகமாக வாதாடி வருகிறார். 2038 முதல் நிலக்கரியை எரிசக்திக்கு பயன்படுத்துவதை நிறுத்தக் கூடாது என்கிற முடிவில் அவர் உறுதியாக இருக்கிறார்.
அவர் சர்வதேச அளவில் நல்ல தொடர்புகளை உடையவர். அவர் ஒரு உறுதியான ஐரோப்பிய ஒன்றிய ஆதரவாளர். அவர் யூரோ எம்.பி யாக இருந்தார். அவரது சொந்த ஊர், பிரான்ஸுடன் வலுவான உறவுகள் கொண்டுள்ள எல்லை நகரமான ஏஷன்.
2005 இல் அவர் தனது சொந்த பிராந்தியத்தில் ஒருங்கிணைப்பு அமைச்சரானார். ஜெர்மனியில் இது போன்ற முதல் பதவி அது. அதன் பெரிய துருக்கிய சமூகத்துடன் வலுவான உறவுகளை ஏற்படுத்தினார். 2015 ஆம் ஆண்டில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான புலம்பெயர்ந்தோர் ஜெர்மனியை அடைந்தபோது, அவர் மெர்க்கலின் மென்மையான ஆனால் சர்ச்சைக்குரிய குடியேற்றக் கொள்கையை உறுதியாக ஆதரித்தார்.
அவர் சிறுவனாக இருந்தபோது பக்தியுள்ள பெற்றோர் மூலமாக கத்தோலிக்க திருச்சபையும், தேவாலயத்தால் நடத்தப்படும் பள்ளியும் அவர் மீது வலுவான தாக்கத்தை ஏற்படுத்தியது. அவருக்கு திருமணமாகி, மூன்று வயது வந்த குழந்தைகள் உள்ளனர்.
அவருடைய வெற்றி வாய்ப்புகள் என்ன?
ஆர்மீன் லேஷெட், ‘மெர்க்கல் பாணி மையவாதி’ என்ற பாசாங்கை திடீரென கைவிட்டு, ஒரு பாரம்பரிய வலதுசாரி போட்டியாளராகியுள்ளார் என பெர்லினில் இருக்கும் பிபிசியின் டேமியன் மெக்கின்ஸ் எழுதுகிறார்.
இதனால் அவரது பழமைவாத கூட்டாளிகள் பரவசமடைந்துள்ளனர். ஆனால் அவரது பிரசாரம் எவ்வளவு மோசமாக உள்ளது என்பதற்கான அறிகுறி இது.
சமீப காலம் வரை CDU/CSU, ஜெர்மனியின் நடுநிலைவாதிகளை தன்பக்கம் ஈர்க்கமுடியும் என்றும் 30 சதவிகிதத்திற்கும் மேல் வாக்குகளைப்பெறமுடியும் என்றும் நம்பியிருந்தது. அது இப்போது சாத்தியமற்றதாகத் தெரிகிறது. எனவே ஆர்மின் லாஷெட் திடீரென வலதுபுறம் சாய்ந்து, முக்கிய பழமைவாதிகளை திருப்திப்படுத்துகிறார்.
இது ஒரு ஆபத்தான தந்திரம். தேர்தல்களில் பொதுவாக மைய கொள்கையினரே வெற்றி பெறுவார்கள். இருப்பினும் இப்போதும் லாஷெட் ஜெர்மனியின் அடுத்த அதிபராக வரக்கூடும்.
அனலேனா பேர்பாக், க்ரீன்ஸ்
ஏங்கலா மெர்க்கலின் இடத்திற்குப் போட்டியிடும் ஒரே பெண் இவர். க்ரீன்ஸ் கட்சி அதிபர் பதவிக்கு நிறுத்தியுள்ள முதல் வேட்பாளர் இவர்தான்.
ஹானோவர் நகருக்கு வெளியே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த முன்னாள் டிராம்போலியன் சாம்பியனான, 40 வயதான பேர்பாக், ஹாம்பர்க் மற்றும் லண்டனில் சட்டம் மற்றும் அரசியலைப் படித்து, ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் க்ரீன்ஸுக்காக பணியாற்றினார்.
இந்த ஆண்டின் தொடக்கத்தில், க்ரீன்ஸின் ஆதரவு கருத்துவாக்கெடுப்பில் 25% க்கு மேல் உயர்ந்தபோது பேர்பாக் மீது கவனம் திரும்பியது. இருப்பினும், எழுத்து திருட்டு மற்றும் தனது சுயவிவரங்களை மிகைப்படுத்திக்காட்டியதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டபோது அவருடைய நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டது.
2013 முதல் நாடாளுமன்றத்தில் (புன்டெஸ்டெக்) எம்.பி., யாக இருந்து வருகிறார். மேலும் இரண்டு இளம் மகள்களின் தாயான அவர் குடும்ப பிரச்னைகள் மற்றும் சுற்றுச்சூழல் குறித்து தீவிரமாக பிரசாரம் செய்தார். சிடியு/சிஎஸ்யு அல்லது சமூக ஜனநாயகக் கட்சியினரை விட சீனா மற்றும் ரஷ்யா இரண்டு குறித்தும் கடுமையான நிலைப்பாட்டை அவர் பரிந்துரைக்கிறார்.
பேர்பாக் அமைச்சர் பதவியை வகித்ததில்லை, ஆனால் தான் மாற்ற விரும்பும் ஜெர்மனியின் “தற்போதைய நிலையை பராமரிக்கும்” அரசியலால் தன் மீது கறைபடியவில்லை என்று அவர் வாதிடுகிறார்.
தனது வேட்பாளருக்கு சிரமங்கள் இருந்தபோதிலும், க்ரீன்ஸ் கட்சி, அடுத்த ஆளும் கூட்டணியின் ஒரு பகுதியாக இருக்கக்கூடும் என்று பரவலான கருத்து நிலவுகிறது. திருமதி பேர்பாக் மற்றும் அவரது இணைத் தலைவர் ராபர்ட் ஹபெக் ஆகியோர் மையவாதிகளுக்கும் , பக்க சார்புடையவர்களுக்கும் இடையில் கருத்து வேறுபாடுகளின் வரலாற்றைக் கொண்ட ஒரு கட்சியில் ஒழுக்கத்தை அமல்படுத்துவதில் புகழ் பெற்றவர்கள்.
இவருடைய வாய்ப்புகள் என்ன?
மூன்று முக்கிய வேட்பாளர்களில், பேர்பாக் ஆட்சித்துறைத் தலைவராகும் வாய்ப்பு மிகவும் குறைவாக உள்ளது. ஆனால் அவரது கட்சி அரசில் இடம்பெறுவதற்கான பாதையில் உள்ளது.
பிரசாரத்தின் ஆரம்ப பின்னடைவுகளுக்குப் பிறகு, ஆளுமை மற்றும் ஜெர்மன் சாசேஜ் மற்றும் கார்களையும் தடை செய்ய முயன்ற க்ரீன்ஸின் நடுத்தரவர்க்க ஆதரவாளர்களின் பழமைவாத முழக்கங்களில் இருந்தும் அவர் கவனத்தை திசை திருப்பினார்.
விவாதம் உறுதியான கொள்கையை நோக்கி நகர்ந்தது. அங்கு பேர்பாக் அதிக நம்பிக்கையுடன் இருக்கிறார். பருவநிலை மாற்றம், ஜெர்மன் வாக்காளர்களுக்கு ஒரு முக்கிய பிரச்சனையாகும். எனவே மற்ற கட்சிகள் சுற்றுச்சூழல் பற்றிப்பேசுவது வாக்காளர்களை அதிகமாக கவரவில்லை. இதனால் க்ரீன்ஸ் கட்சி அரசில் நுழைவதற்கான வாய்ப்பு பிரகாசமாகியுலள்ளது.
ஓலாஃப் ஷோட்ஸ் (SPD)
ஆர்மீன் லேஷெட்டைப் போலவே, 62 வயதான ஓலாஃப் ஷோட்ஸ், ஜெர்மன் அரசியலில் மூத்த பதவிகளை தொடர்ச்சியாக வகித்துவருகிறார். அவர் தற்போது ஜெர்மனியின் நிதி அமைச்சராகவும், ஆட்சித்துறைத் தலைவர் மெர்க்கலுக்கு அடுத்த நிலையிலும் உள்ளார்.
லேஷெட்டை போல இல்லாமல், தேர்தல் பிரசாரத்தின் போது அவர் அதிபராகும் வாய்ப்புகள் அதிகரித்தன. சமீபத்திய கருத்து வாக்கெடுப்பில் பாதிக்கும் மேற்பட்டவர்கள், 1998 முதல் 2011 வரை எம்.பி யாக இருந்துள்ள அவரை, அடுத்த ஆட்சித்துறைத் பதவிக்கு ஏற்றவர் என்று கூறியுள்ளனர். ஹாம்பர்க்கின் மேயராக (2011-2018) வெற்றிகரமாகப் பணியாற்றி, நகரத்தின் சிக்கல் நிறைந்த நிதிநிலையை சமநிலைப்படுத்திய பிறகு அவர் நாடாளுமன்றத்திற்கு திரும்பினார்.
அவர் வடமேற்கு ஜெர்மனியில் உள்ள ஒஸ்னாப்ரூக்கைச் சேர்ந்தவர், தொழிலாளர் சட்டம் படித்த ஒரு சோசலிஸ்ட் இளைஞர் தலைவராக அவர் அரசியலில் நுழைந்தார். SPD வட்டத்தில் அவர் ஒரு பழமைவாதியாகக் பார்க்கப்படுகிறார். அவருக்கும் அவரது மனைவி பிரிட்டா எர்ன்ஸ்டுக்கும் குழந்தைகள் இல்லை.
ஜெர்மன் வணிகங்கள் மற்றும் தொழிலாளர்களை தொற்றுநோய் நெருக்கடியிலிருந்து வெளியே வர உதவுவதற்காக மத்திய அரசால் சேர்த்து வைக்கப்பட்டுள்ள அவசரகால நிதியான 750 பில்லியன் யூரோக்கள் (£ 647 பில்லியன்; $ 904 பில்லியன்) நிதி தொகுப்பை அவர் மேற்பார்வை செய்து வந்தார்.
ஜெர்மன் நிதி மற்றும் வணிகங்களை பாதித்த தொற்றுநோய் நெருக்கடி காலகட்டத்தில் அவர் சிறப்பாக செயல்பட்டதாக பொதுவாக கூறப்படுகிறது.
உணர்ச்சிகளை காட்டிக்கொள்ளாத, ஆடம்பரம் இல்லாத அவரது நடத்தை “ஷோல்ஸ்-ஓ-மாட்” என்ற புனைப்பெயரை அவருக்கு அளித்தது. ஆனால் அந்த நம்பகத்தன்மையின் உருவம் மெர்க்கெல் சகாப்தத்தின் ஸ்திரத்தன்மையைத் தொடர விரும்பும் ஜெர்மனியர்களைக் கவர்ந்தது.
மற்ற வேட்பாளர்கள்
செப்டம்பர் 26 க்குப் பிறகு முடிவு எதுவாக இருந்தாலும், ஜெர்மனியின் அடுத்த அரசு ஒரு கூட்டணி அரசாக இருக்கும். இது CDU/CSU அல்லது சமூக ஜனநாயகவாதிகள் மற்றும் ஓரளவு நிச்சயமாக க்ரீன்ஸ் கட்சியை உள்ளடக்கியதாக இருக்கும். ஆனால் வேறு மூன்று கட்சிகளும் போட்டியில் உள்ளன.
சுதந்திர ஜனநாயக கட்சி (FDP), சுதந்திர சந்தை தாராளவாத கட்சியாகும். SPD அல்லது மத்திய-வலது என்று யார் முன்னிலையில் வந்தாலும், அவர்களுக்கு ஆட்சிசெய்ய வணிக சார்பு FDP யின் ஆதரவு தேவைப்படலாம்.
2017 இல் FDP , CDU/CSU மற்றும் க்ரீன்ஸ் கட்சிகளுடன் கூட்டணி பேச்சுவார்த்தையில் இருந்து விலகியது. “மோசமாக ஆட்சி செய்வதை விட ஆட்சி செய்யாமல் இருப்பது நல்லது” என்று அது கூறியது.
தற்போதைய கருத்துக்கணிப்புகள் FDP-யை 11%ஆக வைத்துள்ளன. அதன் அதிபர் வேட்பாளர் 42 வயதான கிறிஸ்டியன் லிண்ட்னர்.
அவர் 1995 இல் கட்சியில் சேர்ந்தார் மற்றும் 2009 இல் எம்.பி. ஆனார். அவர் பான் பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியல் பயின்றார் . ராணுவத்தில் ரிசர்வ் அதிகாரியாக அவர் உள்ளார்.
தொற்றுநோய் காலகட்டத்தில் பொதுமுடக்க கட்டுபாடுகளை அவர் கடுமையாக விமர்சித்தார். அவை துல்லியமாக இலக்கு வைத்து செய்யப்பட வேண்டும், சோதனை மேலும் திறம்பட இருக்க வேண்டும் என்று கூறினார். நெருக்கடியின் மோசமான மேலாண்மை, ஜெர்மனியின் உருவத்தை “செயல்திறன் மிக்க சூப்பர் ஸ்டார்” என்பதிலிருந்து “அதிகாரத்துவ அசுரன்” என்று மாற்றியுள்ளது என்றார் அவர்.
அவரது முழக்கம் ஜெர்மனியை “மிகவும் நவீனமாகவும், அதிக டிஜிட்டலாகவும், சுதந்திரமாகவும்” ஆக்குவதாகும். FDP குறைந்த வரிகள் மற்றும் தனிப்பட்ட முன்முயற்சிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க விரும்புகிறது.
என்ன வாய்ப்புகள்?
தனது தருணம் வந்திருக்கலாம் என்று FDP உணர்கிறது. திரு லிண்ட்னர், நான்கு ஆண்டுகளுக்கு முன்பு கூட்டணிப்பேச்சுவார்த்தையிலிருந்து விலகியது பலரின் புருவங்களை உயர்த்தியது. தனது பொறுப்பை நிறைவேற்ற அவர் தவறிவிட்டார் என்று கூறப்பட்டது.
அப்போதிருந்து அவர், நவீனமயமாக்கும் சக்தியாக FDP இன் பாரம்பரிய நற்பெயரை மீண்டும் நிறுவினார். ஜெர்மனியின் தொடர்ந்து விரிவடையும் அதிகாரத்துவத்தை கட்டுப்படுத்துவதில் ஆர்வம் காட்டினார். எனவே, கட்சிக்கு மைய-இடது அல்லது மைய-வலது கட்சிகளுடன் வேலை செய்யும் திறன் உள்ளது. லிண்ட்னர் இந்த முறை அமைதியாக இருக்க முடிந்தால், கூட்டணியின் கிங்மேக்கராக கட்சி தனது நீண்டகால பங்கை மீண்டும் நிலைநிறுத்த முடியும்.
ஜெர்மனிக்கான தீவிர வலது மாற்று (AfD)
குடியேற்ற எதிர்ப்பு கட்சி (AFD), 2017 ஆம் ஆண்டு முதன்முறையாக நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டது. புலம்பெயர்ந்தோர் நெருக்கடியில் , வாக்காளர் விரக்தி மற்றும் குடியேற்றம் குறித்த கோபம் காரணமாக அது முக்கிய எதிர்க்கட்சியாக மாறியது. இப்போது 91 இடங்களை அக்கட்சி கொண்டுள்ளது.
அது பின்னர் கருத்துவாக்கெடுப்பில் வீழ்ச்சியடைந்தது, இப்போது சுமார் 10%ஆக உள்ளது. அதன் இரண்டு முன்னணி வேட்பாளர்கள் ஆலிஸ் வீடல் மற்றும் டினோ க்ருபல்லா.
AfD ஐரோப்பிய ஒன்றியத்திற்கு விரோதமானது மற்றும் இஸ்லாத்தை ஜெர்மன் கலாச்சாரம் மற்றும் மரபுகளுக்கு அச்சுறுத்தலாக பார்க்கிறது. கோவிட் வருவதற்கு முன்பே, குடியேற்றம் பற்றிய வாக்காளர் கவலைகள் குறைந்துவிட்டதால், கட்சியின் ஆதரவு சுருங்கியது.
கோவிட் கட்டுப்பாடுகளை நிராகரித்ததாலும், மெய்நிகராக அல்லாமல் கட்சி மாநாட்டை நேருக்கு நேர் நடத்தியதாலும், அக்கட்சி செய்திகளில் அடிபட்டது. கட்சியில் உள்ள பலர் இந்தக்கட்டுப்பாடுகளை தனிப்பட்ட சுதந்திர மீறல் என்று கருதுகின்றனர். பொதுமுடக்க நடவடிக்கைகள் மற்றும் கட்டாய முககவசம் அணிதலை நிறுத்துமாறு கட்சித் தலைவர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.
ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு ஜெர்மனி வெளியேற வேண்டும் என்றும், வேலிகள் உட்பட எல்லைக் கட்டுப்பாடுகள் மீண்டும் கொண்டுவரப்பட வேண்டும் என்றும் அக்கட்சி வலியுறுத்தி வருகிறது.
என்ன வாய்ப்புகள்?
இந்த தேர்தல் போட்டியில் பாதுகாப்பான முன்னறிவிப்புகளில் ஒன்று, AfD அரசில் நுழையாது என்பதுதான். அதன் பிறப்புரிமை முழக்கங்கள், பெரும்பாலான ஜெர்மனியர்களுக்கு பிடிப்பதில்லை. அதன் தேர்தல் முழக்கம், “ஜெர்மனி, ஆனால் சாதாரண ஜெர்மனி”. சிறுபான்மையினர் இதில் அடக்கம் இல்லை என்பதை இது சுட்டிக்காட்டுகிறது.
மற்ற அனைத்து கட்சிகளும் AfD உடன் கூட்டணியை நிராகரித்துள்ளன. 2013 இல் நிறுவப்பட்டதிலிருந்து கட்சி பல முறை பிளவுபட்டுள்ளது. ஒவ்வொரு முறையும் பக்கசார்பு கருத்துக்கள் தீவிரமடைவதன் காரணமாக முக்கிய வாக்காளர்களை கட்சி இழந்துவருகிறது. ஆனால் மீதமிருக்கும் ஆதரவாளர்கள், கட்சிக்கு விசுவாசமானவர்கள். பின்தங்கிவிட்டதாக உணரும் சில தொகுதிகளில், AfD அதிக வாக்குகளை வெல்ல முடியும்.
கடின இடது டை லிங்கே (இடது)
சாத்தியமான கூட்டணியின் ஒரு பகுதியாக டை லிங்கே இருக்கக்கூடும் என்று மீண்டும் பேசப்படுகிறது. பழைய கிழக்கு ஜெர்மன் சோசியலிஸ்ட் கட்சியின் எச்சங்கள் மற்றும் 2000-2009 ஆம் ஆண்டுகளுக்கு இடையே SPD யை விட்டு வெளியேறிய அதிருப்தியாளர்களைக் கொண்டு இந்த கட்சி உருவாக்கப்பட்டது .
டை லின்கே வாக்கெடுப்பில் சுமார் 6% பெற்றுள்ளது. நாடாளுமன்றத்தில் நுழைவதற்கு 5% வரம்பிற்கு மேல் இருக்கவேண்டும். அதன் முக்கிய வேட்பாளர்கள் ஜனின் விஸ்லர் மற்றும் டயட்மர் பார்ட்ஷ்.
ஓய்வூதியம் மற்றும் குறைந்தபட்ச ஊதிய அதிகரிப்பை ஆதரித்தும், நீண்டகால வேலையற்றோருக்கான நன்மைகளை குறைக்கும் நடைமுறைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றும் கட்சி பிரசாரம் செய்கிறது. சர்வதேச ராணுவப் பணிகளிலிருந்து எல்லா ஜெர்மன் வீரர்களையும் திரும்பப் பெற வேண்டும் என்றும் அது கூறுகிறது.
டை லிங்கேயில் முதலாளித்துவ எதிர்ப்பு தீவிரக்கருத்து கொண்டவர்கள் இருந்தாலும்கூட, அது துரிங்கியாவில் ஒரு மாகாண அரசை வழிநடத்துகிறது. போடோ ராமெலோ 2014 முதல் இந்தக்கிழக்கு மாகாணத்தின் முதல்வராக உள்ளார்.
என்ன வாய்ப்புகள்?
டை லிங்கே, ஒரு அதிபரை முன்வைக்க வாய்ப்பில்லை. ஆனால் அது குறைந்தபட்சம் எண் அடிப்படையில், SPD மற்றும் க்ரீன்ஸுடன் இடதுசாரி அரசுக்குள் நுழையலாம் என்று சமீபத்திய கருத்துக் கணிப்புகள் கூறுகின்றன.
கட்சியின் நேட்டோ எதிர்ப்பு நிலைப்பாடு ஒரு பெரிய தடையாக இருக்கும். ஆனால் க்ரீன்ஸ் மற்றும் எஸ்பிடி , தீவிர விளிம்பினர் இருந்தால் அவர்களை சமன்படுத்தி முன்னே செல்லும்போது, அந்த இரண்டு கட்சிகளும் விலைபோய்விட்டதாக குற்றம் சாட்டும் இடதுசாரியினருக்கு, டை லிங்கே அதிகளவில் ஏற்புடையதாக இருக்கக்கூடும்.
(நன்றி BBC TAMIL)