நரேந்திர மோதியின் அமெரிக்க வருகைக்கு வெளிநாட்டு ஊடகங்கள் முன்னுரிமை கொடுக்காதது ஏன்?

அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோதி, அந்நாட்டின் அதிபர் ஜோ பைடன், துணை அதிபர் கமலா ஹாரிஸ் மற்றும் நியூயார்கில் நடைபெற்று வரும் ஐ.நா பொதுச்சபை கூட்டத்தில் பங்கேற்க வருகை தந்துள்ள பல்வேறு நாடுகளின் தலைவர்களை சந்தித்துப் பேசியபோதும், மோதியின் அமெரிக்க பயணம், அந்நாட்டு ஊடகங்களில் பிரதான செய்திகளாக இடம்பெறவில்லை என்பதை அறிய முடிகிறது.

மோதியின் அமெரிக்க பயணத்தில் ஐ.நா அவையில் அவர் சனிக்கிழமை ஆற்றிய உரைக்கு முன்னதாக வாஷிங்டனில் அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடன் வெள்ளை மாளிகையில் நடத்திய சந்திப்பாகும். காரணம், அது ஜோ பைடன் அமெரிக்க அதிபர் ஆன பிறகும், கொரோனா தாக்கத்தால் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக வெளிநாடே செல்லாத மோதியும் முதல் முறையாக பரஸ்பரம் அமெரிக்காவில் நடத்திய சந்திப்பாகும்.

அமெரிக்க பயணத்தின்போது அமெரிக்க அதிபர் பைடன், நரேந்திர மோதி மட்டுமின்றி ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன், ஜப்பான் பிரதமர் யோஷிஹிடே சுகா உள்ளிட்ட தலைவர்களையும் அடுத்தடுத்து சந்தித்தார். இத்தகைய சூழலில் பிரதமர் மோதியின் அமெரிக்க வருகையைப் பற்றி அமெரிக்க ஊடகங்களில் அதிக ஆர்வம் இல்லை. அதே சமயம், இந்த தலைவர்கள் பங்கெடுத்த குவாட் கூட்டம் பல ஊடகங்களில் இடம்பெற்றன.

அந்த கூட்டத்தில், கொரோனா வைரஸ் பெருந்தொற்று தவிர, தொழில்நுட்ப பகிர்வு மற்றும் இந்திய-பசிஃபிக் பகுதி நிலைமை பற்றி விவாதிக்கப்பட்டது.

குவாட் என்ற வார்த்தை ‘நாற்கர பாதுகாப்பு உரையாடல்’ என்றும் பொருள் கொள்ளப்படுகிறது. இந்த குழுவில் இந்தியா, அமெரிக்கா, ஜப்பான் ,ஆஸ்திரேலியா ஆகியவை இடம்பெற்றுள்ளன.

ஆசிய-பசிஃபிக் பிராந்தியத்தில் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு இந்த குவாட் அமைப்பு உருவாக்கப்பட்டது என்று கூறப்படுகிறது. இருப்பினும், ‘ஆக்கஸ்’ (ஆஸ்திரேலியா, பிரிட்டன், அமெரிக்கா) அமைப்பு உருவான பிறகு, குவாட் அமைப்பு இனி எப்படி இயங்கப்போகிறது என்ற கேள்வி எழுந்தது.

இந்த விவகாரத்தைத்தான் வெள்ளை மாளிகையில் நடந்த பல்வேறு தலைவர்களின் சந்திப்புக்குப் பிறகு, சர்வதேச ஊடகங்கள் பல வழிகளில் எழுதியிருக்கின்றன.

சீனாஅல்லதுபெய்ஜிங்பெயரை தவிர்த்த தலைவர்கள்

இந்த சந்திப்பின் போது ஜோ பைடனானாலும் சரி, பிற நாடுகளின் தலைவர்களானாலும் சரி, எல்லோரும் சொல்லி வைத்தால் போல ‘சீனா’ அல்லது ‘பெய்ஜிங்’ என்று வார்த்தையை குறிப்பிடவேயில்லை என்று அமெரிக்க நாளிதழான ‘வாஷிங்டன் போஸ்ட்’ கூறியுள்ளது.வெள்ளிக்கிழமை நடைபெற்ற சந்திப்பின் முடிவில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பின்போது, பருவநிலை மாற்றம், முக்கியமான உள்கட்டமைப்பு மற்றும் கொரோனா வைரஸ் பெருந்தொற்று ஒத்துழைப்பு பற்றி தலைவர்கள் விவாதித்ததாக அந்த நாளிதழ் குறிப்பிட்டுள்ளது.

“சுதந்திரமான இந்திய-பசிஃபிக்” என்ற பகிரப்பட்ட நோக்கங்களை தமது பேச்சின்போது ஜோ பைடன் மேற்கோள்காட்டினார். அவரது கருத்து, சுதந்திரமான சீன கடல் பகுதியில் அந்நாட்டு ராணுவத்தின் வளர்ந்து வரும் ஆதிக்கத்தின் முடிவாக கருதப்படுகிறது.

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஒரு பில்லியன் கொரோனா வைரஸ் தடுப்பூசிகளின் அளவை சரியான முறையில் விநியோகிப்பது மற்றும் அது சரியான தையில் உள்ளது என்றும் பைடன் பேசினார். இருப்பினும், இந்த எண்ணிக்கை குறித்து சர்வதேச ஆராய்ச்சியாளர்கள் சந்தேகம் எழுப்புவதாக அந்த நாளிதழ் கூறுகிறது.

நரேந்திர மோதிகுவாட் குழு உலக நன்மைக்கான சக்தியாக செயல்படும் என்று நரேந்திர மோதி கூறினார். விநியோகச் சங்கிலியில் நிலவும் ஒத்துழைப்புப் பிரச்னைகளையும் அவர் விளக்கினார்.

இந்த குழுவின் குறிக்கோள்களில் ஒன்று சீனப் பொருட்களுக்கு மாற்றுகளை ஆராய்வது என வாஷிங்டன் போஸ்ட் நாளிதழ் கூறியுள்ளது.

குவாட்டின் முக்கிய நிகழ்வுக்கு முன், பைடன், ஆக்கஸ் அமைப்பு பற்றி இந்தியாவுக்கு ஒரு உறுதியளித்தார். பிரதமர் மோதியுடன் வலுவான கூட்டாண்மை இருக்கப் போவதாகவும் பைடன் கூறினார்.

“ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கா வெளியேறிய பிறகு, பைடன் நிர்வாகத்தின் கவனம் மற்றும் பார்வை இப்போது சீனா மீது உள்ளது. இதற்காக இந்தியாவின் கவலைகளை சரி செய்ய வேண்டும். சீனாவிலிருந்து நிறைய போட்டிகளை இந்தியா எதிர்கொள்கிறது, அதே போல் பாகிஸ்தானில் இஸ்லாமியவாத தீவிரவாத குழுக்களிடமிருந்து இந்தியாவுக்கு அச்சுறுத்தல் உள்ளது.

என்ன ஒப்பந்தங்கள் நடக்கலாம்?

நரேந்திர மோதிஅதே நேரத்தில், மற்றொரு அமெரிக்க நாளிதழான வால் ஸ்ட்ரீட் ஜர்னல், 2000களின் நடுப்பகுதியில் நாற்புற பாதுகாப்பு உரையாடல் என்ற பெயரில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சி இப்போது ஒரு குழுவாக மாறிவிட்டது என்று எழுதியுள்ளது.

சில பாதுகாப்பு நிபுணர்கள், குவாட் பிராந்தியங்களில் ஏற்பட்டுள்ள சமீபத்திய மாற்றங்கள் இந்த நாடுகளுக்கு இடையே எவ்வளவு அவசரமாக ஒற்றுமை காட்டப்பட வேண்டும் என்பதைக் காட்டுகின்றன என்று அந்த நாளிதழ் கூறியுள்ளது.அந்த நாளிதழின் சர்வதேச விவகாரங்கள் நிபுணர் பவுலா டோப்ரியன்ஸ்கி, “பனிப்போர் நிறுத்தப்படுவதை நான் பார்க்கவில்லை, ஆனால் ஒரு மோதலின் தொடக்கமாக கருதுகிறேன்,” என்று கூறியுள்ளார்.தலைவர்களின் அமெரிக்க சந்திப்புக்குப் பிறகு, குவாட் நாடுகளுக்கு இடையே பல விவகாரங்களில் ஒப்பந்தங்கள் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக அந்தநாளிதழ் செய்தி கூறுகிறது. ஒரு அமெரிக்க அதிகாரியை மேற்கோள்காட்டி அந்த நாளிதழ் இந்த விவரங்களை பதிவு செய்துள்ளது.

“இந்த ஒப்பந்தங்கள் குறுகிய கால விநியோகச் சங்கிலி முன்முயற்சிகளில் கவனம் செலுத்துகின்றன. கூடுதலாக, 5ஜி அமைப்புகளை விரைவுபடுத்துவது மற்றும் இணைய அச்சுறுத்தல்களுக்கு எதிராக முக்கியமான உள்கட்டமைப்பை உருவாக்குவது பற்றிய ஒப்பந்தங்கள் இறுதி செய்யப்படலாம்,” என்று தெரிவித்துள்ளது.

ஜப்பான் நாளிதழ் பாராட்டு

நரேந்திர மோதிஜப்பானின் நாளிதழான ‘ஜப்பான் டைம்ஸ்’, பிரதமர் நரேந்திர மோதி, ஜப்பானிய பிரதமர் யோஷிஹிடே சுகா ஆகியோரின் சந்திப்பில் தலைப்புச் செய்தியை வெளியிட்டுள்ளது.அந்த நாளிதழ், “ஜப்பானிய அரசாங்கம், பிரதமர் யோஷிஹிடே சுகா, இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி ஆகியோர் சீனா தமது கடல்சார் நிலையை மாற்றுவதற்கான ஒருதலைபட்ச முயற்சிகளை எடுப்பதை கடுமையாக எதிர்த்ததாக” கூறியுள்ளது. சுகா மற்றும் மோதியின் 45 நிமிட சந்திப்பில், சுகா மோதியை பாராட்டினார் மற்றும் இந்திய-பசிஃபிக் பகுதியை சுதந்திரமான மற்றும் தடையற்ற பிராந்தியமாக மாற்றியதில் இந்தியா ஒரு முக்கிய பங்குதாரர் என்று அழைத்ததாக அந்த நாளிதழ் கூறியுள்ளது.

இது தொடர்பில் ஜப்பானிய வெளியுறவு அமைச்சகம் ஒரு செய்திக்குறிப்பை வெளியிட்டுள்ளது, அதில் இரு நாடுகளும் குவாட் உறுப்பினர்களுடன் விதிகள் அடிப்படையிலான சர்வதேச சட்டத்தை உருவாக்க ஒத்துழைக்க ஒப்புக்கொண்டுள்ளன என்று கூறப்பட்டுள்ளது.”இரு தலைவர்களும் சீனாவின் ஒருதலைபட்ச முயற்சிகள் மற்றும் கிழக்கு மற்றும் தென்சீன கடலில் உள்ள நிலையை வலுக்கட்டாயமாக மாற்றுவதற்கான சீனாவின் நிலைக்கு தங்களின் பொதுவான எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர் என்பது இந்த சூழலில் புரிந்துகொள்ளத்தக்கது,” என்று ஜப்பான் டைம்ஸ் கூறியுள்ளது.”இந்த அறிவிப்பு இந்தியா, ஜப்பான் ஆகிய நாடுகள் தங்கள் முன்னுள்ள சீன அச்சுறுத்தல்கள் பற்றி நன்கு அறிந்திருப்பதை காட்டுகிறது. அதே நேரத்தில், சுகா ஜப்பானின் பிரத்யேக பொருளாதார மண்டலத்தில், வட கொரியாவின் சமீபத்திய பாலிஸ்டிக் ஏவுகணை சோதனையை எதிர்த்ததாக மோதியிடம் கூறினார்.

நரேந்திர மோதிகுவாட் ஒருமுறைசாரா கூட்டமா?

அமெரிக்க தொலைக்காட்சியான சிஎன்என், ஒரு மூத்த அதிகாரியை மேற்கோள் காட்டி, குவாட் ஒரு ‘முறைசாரா கூட்டம்’ மற்றும் ‘ராணுவ கூட்டணி’ அல்ல என்றும் செய்தி வெளியிட்டுள்ளது.உண்மையில், சீனா குவாட்டை ஆசியாவின் ‘நேட்டோ’ என்று அழைத்தது, அதன் பிறகு அனைத்து நாடுகளும் அதன் ராணுவ கூட்டணியை நிராகரித்து வருகின்றன.சிஎன்என் தொலைக்காட்சி தனது இணையதளத்தில் ஒரு மூத்த அதிகாரியை மேற்கோள் காட்டி, சவாலான நேரத்தில் உரையாடல் மற்றும் பொதுவான முயற்சிகளுக்கு குவாட் ஒரு முக்கியமான தளம் என்று அவர் நம்புகிறார் என்று தெரிவித்துள்ளது.”குவாட் ஒரு முறைசாரா சந்திப்பு என்பதை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறோம். இருப்பினும், இப்போது எங்களிடம் பல பணிக்குழுக்கள் உள்ளன, நாங்கள் தினசரி அடிப்படையில் எங்கள் உறவுகளை ஆழப்படுத்தி வருகிறோம். இது ஒரு முறைசாரா சந்திப்பாகும்,” என அந்த அதிகாரி கூறியதாக தெரிவிக்கிறது சிஎன்என. ஆக்கஸ் அமைப்புக்கும் குவாட் அமைப்புக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மோதிக்கு மனித உரிமைகளை நினைவூட்டுகிறார் கமலா ஹாரிஸ்

லாஸ் ஏஞ்சலஸ் டைம்ஸ், தனது இணையதளத்தில் பிரதமர் மோதி மற்றும் துணை அதிபர் கமலா ஹாரிஸ் இடையிலான சந்திப்புக்கு இடம் கொடுத்து, ‘வரலாற்றுபூர்வ கூட்டத்தில் மனித உரிமைகள் குறித்து இந்திய பிரதமர் மோதிக்கு கமலா ஹாரிஸ் அழுத்தம் கொடுத்தார்’ என்று தலைப்பிட்டிருந்தது.

இந்தியாவை பூர்விகமாகக் கொண்ட கமலா ஹாரிஸ், உலகெங்கிலும் ஜனநாயகம் அச்சுறுத்தலுக்கு உள்ளாகிய நிலையில், மோதியிடம் மூடிய கதவுகளுக்குப் பின்னால் இப்படி ஒரு அழுத்தத்தை கொடுத்ததாக அந்த இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.

‘நமது நாடுகளில் உள்ள ஜனநாயக மதிப்புகள் மற்றும் அதன் அமைப்புகளைப் பாதுகாப்பது முக்கியம். என்ன செய்ய வேண்டும் என்பதை தனிப்பட்ட அனுபவத்திலிருந்து நாம் அறிவோம். நமது ஜனநாயக விழுமியங்கள் மற்றும் அமைப்புகளுக்கு நாம் என்ன செய்கிறோம் என்பதைப் பற்றி சிந்திக்க வேண்டும்,” என கமலா மோதியிடம் பேசியதாக அந்த இணையதளம் கூறுகிறது.

அமெரிக்காவில் முன்பு அதிபராக டொனால்ட் டிரம்ப் இருந்தபோது, ஒரு கதாநாயகன் போல மோதி கொண்டாடப்பட்டார், வரவேற்கப்பட்டார். அவர் அப்போது நடத்தப்பட்ட விதத்துக்கும் இப்போதைக்கும் பல மாற்றங்கள் உள்ளன. காரணம், மோதியின் ஆட்சியில் இந்தியாவில் மத சிறுபான்மையினரை குறிவைத்து அதிக சட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. முஸ்லிம் மக்கள்தொகை இந்தியாவில் மிகப்பெரிய சிறுபான்மை சமூகமாகும். மேலும் இந்தியாவில் இந்து அல்லாதவர்கள் பல இடங்களில் தாக்குதல்களை எதிர்கொள்கின்றனர் என்று அந்த இணையதளம் தனது செய்தியில் கூறியுள்ளது.

(நன்றி BBC TAMIL)