COP26 பருவநிலை உச்சிமாநாட்டுக்கு முன்னதாக, உலகின் அதிக பசுமை ஆற்றலை எவ்வாறு பயன்படுத்துவது மற்றும் C02 உமிழ்வைக் குறைப்பது என உலகின் பிற பகுதிகள் சிந்திக்கும் வேளையில், ஆப்பிரிக்கா இந்த சவால் மாறுபட்ட வகையில் அணுகப்படுகிறது.
பூமியில் உள்ள பலருக்கும், எந்தவொரு ஆற்றல் விநியோகத்தையும் அணுகுவதே சவால் என்றால், ஆப்பிரிக்காவில் சுமார் 600 மில்லியன் மக்களுக்கு அத்தகைய எந்த ஆற்றலுமே இல்லை என்பதை உண்மை. – அது அவர்களின் புதிய தொழில் தொடங்கும் முயற்சி மற்றும் திறனைக் கட்டுப்படுத்துகிறது.
தென்னாப்பிரிக்கா மற்றும் நைஜீரியாவின் மெகா நகரங்களில் கூட, வணிகங்கள் மின்தடையை எதிர்கொண்டே நடப்பதாக உள்ளது. எனவே இந்த பிரச்னையை தீர்க்கும் முயற்சியில் அரசுகள், தொழில் முனைவோர் மற்றும் கண்டுபிடிப்பாளர்கள் கவனம் செலுத்தி வருகின்றனர்.
கானாவில், நாட்டின் மின்சக்தி அமைச்சகம் 80% க்கும் அதிகமான மக்களுக்கு தேசிய மின் பாதை மூலம் மின்சாரம் கிடைக்கிறது என்று கூறுகிறது. ஆனால் தொலைதூர சமூகங்களுக்கு அந்த மின்சாரம் ஒரு சவாலாகவே இருந்தது.
எனவே தனிமைப்படுத்தப்பட்ட சமூகங்களுக்கு சூரிய சக்தி மற்றும் காற்றாலை மூலம் இயங்கும் குறைந்த விலை மற்றும் தூய்மையான சக்தியை வழங்க, குறிப்பிட்ட பகுதிகளுக்கு சேவை செய்யும் மைக்ரோகிரிட்கள் எனப்படும் சுயாதீன எரிசக்தி அமைப்புகளை கானா அரசு பயன்படுத்துகிறது.
கானாவில் உள்ள வோல்டா ஆற்றில் உள்ள ஒரு தீவு சமூகமான பெடியடோகோப்பில், கடைக்காரர் எரிக் புபுலம்பு மகிழ்ச்சியுடன் காணப்படுகிறார். அவர் இப்போது குளிர் பானங்கள் மற்றும் அழிந்துபோகக்கூடிய பொருட்களை சேமித்து விற்க முடிகிறது என்பதால் அவரது வணிகம் தடையின்றி நடக்கிறது.
நகர்ப்புற சவால்கள்
ஆனால் இந்த சவால் கிராமப்புறம் மட்டுமின்றி முக்கிய நகரங்களிலும் உள்ளது.
கிட்டத்தட்ட 15 மில்லியன் மக்கள் நைஜீரியாவில் உள்ள லாகோஸில் வசிக்கின்றனர், இது ஆப்பிரிக்காவின் பரபரப்பான நகரங்களில் ஒன்றாகும், ஆனால் நகரத்தில் எரிசக்தி விநியோகம் நிலையாகவோ பாதுகாப்பாகவோ இல்லை.
இந்த நம்பகத்தன்மையின்மை என்பது, மின் பாதையில் வரும் மின்சாரத்தை மட்டுமின்றி மாற்று வழி மின்சாரத்தையும் இங்குள்ளவர்கள் சார்ந்திருக்க வேண்டும் என்பதை உணர்த்துகிறது. குறிப்பாக, மின் தடை உள்ள நேரத்தில் இவர்கள் பெட்ரோல் மற்றும் டீசல் ஜெனரேட்டர்களை சார்ந்திருக்க வேண்டும்.
நைஜீரியாவின் எரிசக்தி ஆணையத்தின்படி, நைஜீரியர்கள் தங்கள் அலுவலகங்கள் மற்றும் வீடுகளுக்கு மின்சக்தி வழங்குவதற்கு ஜெனரேட்டர்களுக்கு ஒரு வருடத்திற்கு $ 22 பில்லியன் செலவிடுகிறார்கள். இதில் பெரிய ஆச்சரியமில்லை. இந்த நிறுவனங்கள் நிலையான எரிசக்தி ஆற்றலுக்கான தீர்வுகளைத் தேடுகின்றன, அதுவும் அது பசுமையானதாக இருக்க வேண்டும் என அவை விரும்புகின்றன.
பலர் எண்ணெய் வளத்தை விட எரிவாயு சார்ந்த சுற்றுச்சூழலே பயன்படுத்துவதற்கு உகந்தது என கருதுகின்றனர், எனவே புதுப்பிக்கத்தக்க ஆற்றலுடன் ஒரு சாத்தியமான முன்மொழிவாக. எரிவாயு எரிபொருள் ஆலைகள் உள்ளன. அவை நைஜீரியாவின் மின்சாரத் திறனில் 80% ஆக உள்ளன.
சில நிபுணர்களின் கூற்றுப்படி, இயற்கை எரிவாயு ஆலைகள் சூரிய ஆலைகளை விட இரண்டு மடங்கு நம்பகமானவை மற்றும் ஒரு ஏக்கர் நிலத்திற்கு நான்கு மடங்கு அதிக ஆற்றலை உற்பத்தி செய்யக் கூடியவை ஆக உள்ளன.
“எண்ணெய் போன்ற புதைபடிம எரிபொருட்களுக்கும், புதுப்பிக்கத்தக்க ஆற்றலுக்கும் இடையேயான திறனில் பாதி அளவே எரிவாயு சார்ந்த மின்னாற்றல் இருப்பதாக மக்கள் பார்க்கிறார்கள்,” என்கிறார் ஆப்பிரிக்க எரிசக்தி துறையின் ஆலோசனைக் குழுவின் உறுப்பினர் ரோலேக் அகின்குக்பே-ஃபிலானி.
“எண்ணெயை விட குறைந்த கரிம வளமாக எரிவாயு உள்ளது. ஆப்பிரிக்காவில் மிகப்பெரிய எரிவாயு இருப்பையும், உலகின் ஒன்பதாவது பெரிய எரிவாயு இருப்பையும் கொண்ட நாடாக நைஜீரியா உள்ளது. எனவே இந்த வளங்களை பயன்படுத்துவது அர்த்தமுள்ளதாக இருக்கிறது.
“ஆனால் வாயுவுக்கு செயலாக்கம் மற்றும் விநியோகத்திற்கான உள்கட்டமைப்பு தேவைப்படுகிறது, மேலும் அந்தத் துறையில் நீண்ட கால நிதியுதவியுடன் கூடிய முதலீடு தேவை.”
ஆற்றல் முதலீடுகள்
கடந்த தசாப்தத்தில், ஒலூசோலா லாசனின் நிறுவனம் கண்டம் முழுவதும் ஆப்பிரிக்க உள்கட்டமைப்பு முதலீட்டு நிறுவனங்களுக்காக அரை பில்லியன் டாலருக்கும் அதிகமான சக்தி மற்றும் உள்கட்டமைப்பு திட்டங்களில் முதலீடு செய்வதற்கு பொறுப்பாக இருந்தது.
அவரது நிறுவனம் எரிவாயு மற்றும் சூரிய சக்தி துறைகளில் முதலீடுகளைச் செய்துள்ளது, மேலும் ஆப்பிரிக்காவின் ஆற்றல் எதிர்காலத்திற்கான கண்ணோட்டம் பற்றிய தெளிவை அவர் கொண்டிருந்தார்.
“2050 க்குள் ஆப்பிரிக்கா முழுவதும் நிறுவப்பட்ட புதிய ஆற்றலில் பாதி புதுப்பிக்கத்தக்க ஆற்றலாக இருக்கும்.”
“கடந்த பத்தாண்டுகளில் சூரிய எரிசக்தி தயாரிப்பு விலையில் 80% குறைப்பு மற்றும் பேட்டரி விலையில் 85% குறைப்பு உள்ளது. அந்த இரண்டு விஷயங்களின் கலவையானது சில வகையான மின்சாரம் வழங்கலை, மிகவும் கவர்ச்சிகரமானதாக ஆக்குகிறது. நம்மிடம் உள்ள மிகுதியாக இருப்பது எண்ணெய் வளமோ வாயுவோ அல்ல. அது சூரிய ஒளி,” என்று அவர் கூறுகிறார்.
“நாங்கள் ஒரு புரட்சியின் தொடக்கத்தில் மட்டுமே இருக்கிறோம் – சோலார் பேனல் விலை குறைந்து பேட்டரி தொழில்நுட்பம் மேம்பட வேண்டும்,” என்கிறார் அவர்
இது ஒரு புரட்சி, எங்களுடைய சில நம்பிக்கைகள் தூய்மையான ஆற்றலுடன், புதிய வேலைகளையும் கொண்டு வரும்.
இந்த தசாப்தத்தின் முடிவில், உலகெங்கிலும் 65 மில்லியன் புதிய வேலை வாய்ப்புகள் குறைந்த கார்பன் தொழிற்துறை என்று அழைக்கப்படும் துறையில் உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது வரவேற்கத்தக்க நடவடிக்கை – ஏற்கெனவே சில ஆப்பிரிக்க நாடுகளில் வேலையின்மை 33% ஆக உயர்ந்துள்ளது.
தென்னாப்பிரிக்காவை தளமாகக் கொண்ட கிரீன் சோலார் அகாடமி மற்றும் கண்டம் முழுவதும் அதன் கூட்டாளி நிறுவனங்கள், சூரிய சக்தி திட்டம் முதல் சூரிய சக்தி தொழில்வரை பலதையும் நடத்துவதற்கான அடிப்படைகளை உள்ளடக்கிய பயிற்சி மற்றும் பயிற்சி பட்டறைகளை வழங்குகின்றன.
“மொத்த விற்பனையாளர்கள், வடிவமைப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்களாக மக்கள் வாய்ப்புகளைக் கண்டுபிடிக்கும் ஒரு புதிய இடத்தை சோலார் நிறுவனம் வழங்கியுள்ளது” என்கிறார் கிரீன் சோலாரின் மூத்த செயல்பாட்டு மேலாளர் கும்புட்ஸோ அமண்டா டிவிஹானி.
“மக்கள் தமக்கும் மற்றவர்களுக்கும் வேலை வாய்ப்புகளை உருவாக்க இது ஒரு இடத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அது முக்கியமானது, ஏனென்றால் வேலையின்மை விகிதம், குறிப்பாக இளைஞர்களைக் கொண்ட வேலைவாய்ப்பின்மை நிலை எல்லா இடங்களிலும் அதிகரித்து வருகிறது.”
தூய்மையான எரிசக்தி ஆதாரங்களில் அதிக முதலீடு செய்வதன் மூலம், ஆப்பிரிக்க நாடுகள் எதிர்காலத்தில் மிகப்பெரிய சவால்களை சந்திக்கும்போது அவற்றுக்கு இரு மடங்கு தீர்வை வைத்திருக்கும். – கார்பன் வெளியேற்றத்தை குறைப்பதுடன் புதிய வேலை வாய்ப்புகளையும் அந்த சூழல் உருவாக்கும் என்று இங்குள்ளவர்கள் நம்புகின்றனர்.
இந்த செய்திக்காக கூடுதல் தகவல்களை வழங்கியவர்கள்: தாமஸ் நாடி, திதி அக்கினியலூர் மற்றும் ஜெஸ்ஸி ப்ரைசர்
(நன்றி BBC TAMIL)