கடந்த ஆகஸ்ட் மாதம் ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் முழுமையாக வெளியேற்றப்படும் முன்பே 2,500 அமெரிக்க துருப்புகளை ஆப்கானிஸ்தானில் தொடர்ந்து நிலை நிறுத்தலாம் என்று தாங்கள் அரசுக்கு ஆலோசனை அளித்ததாக அமெரிக்காவின் மூத்த ராணுவ அதிகாரிகள் நாடாளுமன்றத்திடம் தெரிவித்துள்ளனர்.
ஜெனரல் மார்க் மில்லி மற்றும் ஜெனரல் பிராங்க் மெக்கன்சி ஆகியோர் அமெரிக்க நாடாளுமன்றத் விசாரணையின்போது இந்த தகவலை தெரிவித்துள்ளனர்.
ஆனால் அப்படிப்பட்ட ஆலோசனை வழங்கப்பட்டதாக தம்மால் நினைவு கூற முடியவில்லை என்று அதிபர் ஜோ பைடன் தெரிவித்திருந்தார்.
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேற்றப்பட்ட பின்பு தாலிபன்கள் அதிவிரைவாக அதிகாரத்தை கைப்பற்றினர்.
ஆப்கானிஸ்தானில் இருந்த அரசு நிர்வாகம் சரிந்த வேகம் மிகவும் வியப்பளிக்கும் வகையில் இருந்ததாக ஜெனரல் மார்க் மில்லி நாடாளுமன்றத்திடம் தெரிவித்தார்.
இந்த இரண்டு அமெரிக்க ஜெனரல்களும் செனட் சபையின் ஆயுதப் படைகளுக்கான குழுவால் செவ்வாயன்று விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர்.
இந்த விசாரணையில் அமெரிக்க அரசின் பாதுகாப்புத்துறை செயலாளர் லாய்டு ஆஸ்டினும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பதிலளித்தார்.
ஆப்கானிஸ்தானில் இருந்த அமெரிக்கர்கள் மற்றும் அந்நாட்டில் இருந்து வெளியேற விரும்பிய ஆப்கானியர்கள் ஆகியோரை மீட்கும் போது உண்டான குழப்பமான சூழ்நிலையின் சில வாரங்களுக்கு பிறகு இந்த விசாரணை நடக்கிறது.
இந்த வெளியேற்றும் நடவடிக்கையின்போது காபூல் விமான நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலில் 182 பேர் கொல்லப்பட்டனர். ஆகஸ்ட் 26ஆம் தேதி நடந்த இந்தத் தாக்குதலில் 13 அமெரிக்க படையினரும் குறைந்தது 169 ஆப்கானியர்களும் உயிரிழந்தனர்.
பைடன் பொய் சொன்னாரா?
அமெரிக்க சென்ட்ரல் கமெண்டின் தலைவரான ஜெனரல் மெக்கன்சி இந்த வெளியேற்ற நடவடிக்கைகளுக்கு தலைமை வகித்தார்.
குடியரசு கட்சியைச் சேர்ந்த செனட்டர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளித்த அவர் 2500 என்னும் சிறிய எண்ணிக்கையிலான படையினரை மட்டும் ஆப்கானிஸ்தானில் தொடர்ந்து நிலை நிறுத்த தாம் ஆலோசனை வழங்கியதாகத் தெரிவித்தார்.
ஆனால் ஆகஸ்ட் 19ஆம் தேதி ஏபிசி செய்தியாளர் ஒருவரிடம் யாரும் அத்தகைய ஆலோசனை வழங்கியதை தம்மால் நினைவுகூர முடியவில்லை என்று அதிபர் ஜோ பைடன் கூறியிருந்தார்.
அதிபர் பைடன் அந்த ஆலோசனைக்கு ஒப்புக்கொண்டதாக கூட்டுத் தளபதிகளின் தலைவர் ஜெனரல் மார்க் மில்லி கூறினார். அப்படியானால் அதிபர் ஜோ பைடன் கூறியது பொய்யான தகவலா என்று அலாஸ்கா மாகாணத்தைச் சேர்ந்த குடியரசு கட்சி செனட் உறுப்பினர் டேன் சல்லிவன் கேட்ட கேள்விக்கு மில்லி நேரடியாக பதிலளிக்க மறுத்துவிட்டார்.
ஆனால் வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் ஜென் சாகி இதுகுறித்து பின்னர் செய்தியாளர்களிடம் பேசியுள்ளார்.
“ராணுவம் மற்றும் கூட்டுத் தளபதிகளின் ஆலோசனைகளை அதிபர் மதிக்கிறார். ஆனால் அதற்காக அவற்றை அவர் ஒப்புக்கொள்கிறார் என்று பொருளாகாது,” என்று ஜென் சாகி கூறியுள்ளார்.
ஒருவேளை ஆகஸ்ட் மாதத்தில் விதிக்கப்பட்ட காலக் கெடுவுக்குப் பின்னரும் அமெரிக்கப் படைகள் அங்கே தொடர்ந்து நீடித்து இருந்தால் தற்போது அமெரிக்கா தாலிபன்களுடன் போரில் ஈடுபட்டு இருக்கவேண்டிய சூழல் உண்டாகி இருக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
‘தாலிபன் தற்போதும் தீவிரவாத அமைப்புதான்‘
செவ்வாய் அன்று நடந்த நாடாளுமன்ற விசாரணையின்போது லாயிட் ஆஸ்டின் முதலில் பதிலளித்தார். “ஓர் அரசை உருவாக்க நாம் உதவினோம்; ஆனால் ஒரு நாட்டை கட்டமைக்க முடியாவில்லை,” என்று ஆஸ்டின் தெரிவித்தார்.
பின்னர் பதிலளித்த ஜெனரல் மார்க் மில்லி ஆப்கானிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்களில் இருந்து அமெரிக்கர்களை பாதுகாப்பது இப்போது மிகவும் கடினமாக இருக்கும் என்று அவர் கூறினார்.
தாலிபன் கடந்த காலத்தில் தீவிரவாத அமைப்பாக இருந்தது தற்போது தீவிரவாத அமைப்பாகத்தான் இருக்கிறது. அல்-காய்தா அமைப்புடன் அது தொடர்புகளையும் துண்டித்துக் கொள்ளவில்லை என்று அவர் கூறினார்.
மறு கட்டமைக்கப்பட்ட அல்-காய்தா அல்லது இஸ்லாமிய அரசு குழு ஆகியவை அமெரிக்காவில் தாக்குவதற்கான சாத்தியக்கூறுகள் மிகவும் உண்மையானவை என்று அவர் கூறினார்.
ஆப்கனில் இருந்து விரைவாக படைகளை வெளியேற்றினால் ஆப்கானிஸ்தான் அரசு விரைவாக விழும் என்று 2020ஆம் ஆண்டின் இறுதிப் பகுதியில் மதிப்பிட்டதாக அவர் தெரிவித்தார்.
கூட்டுத் தளபதிகளின் தலைவர் ஜெனரல் மார்க் மில்லி அதிபருக்கு உச்சபட்ச ராணுவ ஆலோசகர். இந்தப் பொறுப்பில் இருப்பவர்தான் அமெரிக்க பாதுகாப்புத் துறை மற்றும் வெள்ளை மாளிகைக்கு பாலமாக இருப்பவர்.
அமெரிக்கா ஆப்கன் மீது படையெடுத்தது ஏன்?
சுமார் 3000 பேர் கொல்லப்பட்ட, செப்டம்பர் 11 தாக்குதல் என்று பரவலாக அறியப்படும் அமெரிக்காவின் இரட்டை கோபுர தாக்குதல் 2001ஆம் ஆண்டு நடந்த பிறகு அப்போது ஆப்கானிஸ்தானை ஆட்சி செய்து கொண்டிருந்த தாலிபன்கள், தீவிரவாதிகளுக்கு புகலிடம் அளிப்பதாக அமெரிக்கா அந்த நாட்டின் மீது படையெடுத்தது.
2001 மற்றும் 2019 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில் சுமார் 822 பில்லியன் அமெரிக்க டாலரை ஆப்கானிஸ்தான் போருக்காக அமெரிக்க அரசு செலவிட்டுள்ளதாக அலுவல்பூர்வ தரவுகள் தெரிவிக்கின்றன. (இந்திய மதிப்பில் இது சுமார் 60 லட்சம் கோடி ரூபாய்.) ஆப்கானிஸ்தான் தொடர்பான நடவடிக்கைகளுக்காக அமெரிக்கா பாகிஸ்தானில் செய்த செலவுகள் இதில் அடங்காது.
அமெரிக்க அதிபராக ஜோ பைடன் பதவியேற்ற பின்பு இந்த ஆண்டு செப்டம்பர் 11-ஆம் தேதிக்கு முன்னரே அமெரிக்கப் படைகள் முழுமையாக ஆப்கானிஸ்தானிலிருந்து விலக்கப்படும் என்று அறிவித்திருந்தார். இது டொனல்டு டிரம்ப் அதிபராக இருந்தபோது எடுக்கப்பட்ட முடிவு.
இந்த முடிவு பைடன் அரசால் அமல்படுத்தப்பட்டபோது, ஆப்கனில் மீதமிருந்த சுமார் 4,000 அமெரிக்க படையினர் ஆப்கானிஸ்தானில் இருந்து விலகினர். சுமார் 50,000 ஆப்கன் மக்களும் அகதிகளாக வெளியேற்றப்பட்டனர்.
(நன்றி BBC TAMIL)