ஆப்கானிஸ்தானில் பலருக்கு சாப்பிட உணவில்லை – திவாலாகும் நிலையை பயன்படுத்துகிறதா சீனா?

ஆப்கானிஸ்தானின் மிகப் பெரிய வங்கியின் ஒன்றின் தலைவர், தமது நாட்டின் வங்கி அமைப்பு முறையே தகர்ந்து போகும் நிலையில் இருக்கிறது என பிபிசியிடம் கூறியுள்ளார்

சயீத் மூசா கலீம் அல் ஃபலாஹி என்பவர் இஸ்லாமிக் பேங்க் ஆஃப் ஆப்கானிஸ்தான் என்கிற மிகப் பெரிய வங்கியின் முதன்மைச் செயல் அதிகாரி. மக்கள் பயத்தில் இருப்பதால் நாட்டின் நிதி துறை பிழைத்து இருப்பதற்கே சிரமமான சூழலில் இருக்கிறது.

“தற்போது அதிக அளவில் பணம் எடுக்கப்பட்டு வருகிறது” என துபாயில் இருந்து கூறினார் அல் ஃபலாஹி. காபூலில் குழப்பமான சூழல் நிலவுவதால் அவர் தற்காலிகமாக துபாயில் தங்கியுள்ளார்.

கடந்த ஆகஸ்ட் மாதம் தாலிபன்கள் ஆப்கானிஸ்தானின் அதிகாரத்தை கைப்பற்றுவதற்கு முன்பே அந்நாட்டின் பொருளாதார சூழல் மோசமாகத் தான் இருந்தது.

உலக வங்கியின் கூற்றுப் படி, ஆப்கானிஸ்தானின் 40 சதவீத ஜிடிபி வெளிநாட்டு நிதி உதவிகளிலிருந்து வருகிறது.

இஸ்லாமிக் பேங்க் ஆஃப் ஆப்கானிஸ்தான்தாலிபன் அதிகாரத்துக்கு வந்த பின், மேற்குலகம் அந்நாட்டின் சர்வதேச நிதிகளை முடக்கிவிட்டது. இதில் ஆப்கானிஸ்தான், உலக வங்கி மற்றும் பன்னாட்டு நிதியத்தின் உதவியோடு அணுகக் கூடிய சொத்துக்களும் அடக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.

எனவே தாலிபன்கள் மற்ற நிதி உதவிகளைத் தேட இது ஊக்குவிப்பதாக இருக்கிறது என்கிறார் அல் ஃபலாஹி.

“தாலிபன்கள் சீனா, ரஷ்யா உட்பட மற்ற சில நாடுகளிடம் உதவியை எதிர்பார்க்கிறார்கள்.

“இப்போது இல்லை என்றாலும், பிற்காலத்தில் தங்கள் பேச்சுவார்த்தைகளில் வெற்றி பெறுவார்கள் என்பது போலத் தெரிகிறது” என்று கூறினார் அல் ஃபலாஹி.

ஏற்கெனவே, சீனா, ஆப்கானிஸ்தானை மறுகட்டமைப்பதற்கான தன் ஆசையை வெளிப்படுத்தியது. அத்துடன் தாலிபன்களோடு இணைந்து பணிபுரிவது தொடர்பகவும் பேசியது.

“ஆப்கானிஸ்தானை ஒருங்கிணைத்து மீள்கட்டமைக்க மிகப் பெரிய வாய்ப்புகள் உள்ளன” என்றும், அதில் சீனா நிச்சயம் முன்னெடுத்துச் செல்லும் முக்கிய நபராக இருக்கும்” என்று, சீனாவின் அரசு பத்திரிகையான குளோபல் டைம்ஸ் பத்திரிகையின் சமீபத்தைய கட்டுரை ஒன்றில் கூறப்பட்டுள்ளது.

இதெல்லாம் ஒரு பக்கமிருக்க, சீனா ஏற்கெனவே ஆப்கானிஸ்தானுக்கு 31 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான உணவு மற்றும் கொரோனா தடுப்பூசி போன்ற பொருட்களை வழங்க உறுதியளித்தது குறிப்பிடத்தக்கது.

இப்போதும் தாலிபன்கள் ஆப்கானிஸ்தானின் பொருளாதார பிரச்னைகளை சரி செய்ய வேண்டிய அழுத்தத்தில் இருக்கிறார்கள்.

காபூலில் வங்கியில் இருந்து பணத்தை எடுக்க காத்திருக்கும் பெண்கள்ஆப்கானிஸ்தானில் பணவீக்கம் அதிகரித்து வருகிறது, ஆப்கன் நாட்டின் கரன்சியான ஆப்கானியின் மதிப்பு தொடர்ந்து சரிந்து வருகிறது. மக்கள் தங்கள் வேலைகளை இழந்து, கையில் பணமின்றி தவிக்கிறார்கள்.

ஆப்கானிஸ்தானில் வெறும் 5 சதவீத குடும்பங்களிடம் மட்டுமே தினமும் சாப்பிடும் அளவுக்கு உணவு இருப்பதாக ஐக்கிய நாடுகள் சபையின் உலக உணவுத் திட்டம் எச்சரித்துள்ளது.

இந்த கருத்துக்கணிப்பில் கலந்து கொண்டவர்களில் பாதி பேருக்கு மேல், கடந்த இருவாரங்களில், குறைந்தபட்சம் ஒரு முறையாவது மொத்த உணவும் தீர்ந்ததாகக் கூறியுள்ளனர்.

எனவே ஆப்கானிஸ்தான் தப்பிப் பிழைக்க, சர்வதேச நிதிகள் மற்றும் வெளிநாட்டு உதவிகளைப் பெறுவது அவசியம்.

ஆனால் அமெரிக்க போன்ற நாடுகள் தாலிபன்கள் ஆட்சியில் பெண்கள் மற்றும் மைனாரிட்டி சமூகத்தினர் நடத்தப்படுவது போன்ற சில முன் நிபந்தனைகளுக்கு உட்பட்டு, தாலிபன்களோடு சேர்ந்து பணியாற்றுவது தொடர்பாக ஆலோசிக்கத் தயார் என கூறியுள்ளது.

பெண்கள் கொஞ்ச காலத்துக்கு பணிக்கு வரக் கூடாது என்று தாலிபன்கள் கூறினாலும், தன் வங்கியில் பெண்கள் பணிக்கு திரும்பிக் கொண்டிருப்பதாகக் கூறுகிறார் அல் ஃபலாஹி.

ஆப்கானிஸ்தான்

“பெண்கள் மத்தியில் அச்சம் நிலவியது, முன்பு அவர்கள் அலுவலகத்துக்கு வரவில்லை, ஆனால் தற்போது மெல்ல அலுவலகம் திரும்பிக் கொண்டிருக்கிறார்கள்” என்கிறார் அல் ஃபலாஹி.

அல் ஃபலாஹி கூறியவை, சமீபத்தில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கூறியதோடு ஒத்துப் போவதாக இருக்கிறது.

பிபிசிக்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அளித்த பிரத்யேக நேர்காணலில் “தாலிபன்கள் கடந்த முறை ஆட்சியில் இருந்த போது நடந்து கொண்டதோடு ஒப்பிடும் போது, இந்த முறை உலகுக்கு புதிய மற்றும் சீர்திருத்தப்பட்ட முகத்தைக் காட்ட முயல்கிறார்கள். இதை தாலிபன் 2.0 என்று கூறலாம்.

“இப்போதைக்கு அவர்கள் மிகவும் நெகிழ்வுத் தன்மை கொண்டவர்களாகவும், ஒத்துழைப்பவர்களாகவும் இருக்கிறார்கள்”

“தாலிபன்கள் தற்போதைக்கு எந்த வித கடுமையான சட்ட திட்டங்களையும் விதிக்கவில்லை” என்று கூறினார் இம்ரான் கான்.

தாலிபன்கள் சொல்வதற்கும், அவர்கள் நடந்து கொள்ளும் எதார்த்தத்துக்கும் இடையில் பெரும் வேறுபாடுகள் இருப்பதை, பெண்கள் குழுக்கள் மற்றும் மனித உரிமை அமைப்புகள் சுட்டிக்காட்டுகின்றனர்.

பல பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் பள்ளிக்குச் செல்லவோ, பணிக்கு செல்லவோ அனுமதி மறுக்கப்படும் செய்திகள் தொடர்ந்து வந்து கொண்டு தான் இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

(நன்றி BBC TAMIL)