ஆதி குடிகளிடம் ஒப்படைக்கப்பட்ட மழைக் காடுகள்

உலகிலேயே மிகவும் பழமையான வெப்பமண்டல மழைக்காடுகளான டெய்ன்ட்ரீ மழைக்காடுகள் ஆஸ்திரேலியாவிலுள்ள ஆதி குடிகளிடமே திரும்ப ஒப்படைக்கப்பட்டுள்ளது.

அரசுக்கும் ஆதிக்குடி சமூகத்துக்கும் ஏற்பட்ட ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்பந்தத்தின் கீழ் இந்த காடுகள் ஒப்படைக்கப்படுகின்றன.

ஐநாவின் யுனெஸ்கோ அமைப்பின் உலகப் பாரம்பரிய இடமாக அறிவிக்கப்பட்டுள்ள இந்த மழைக் காடுகள் சுமார் 18 கோடி ஆண்டுகள் பழமையானவை. ஆதிக்குடிகள் பல தலைமுறைகளாக இங்கு வசித்து வருகின்றனர்.

தற்போதைய ஒப்பந்தத்தின்படி குயின்ஸ்லாந்து மாகாண அரசு மற்றும் ஈஸ்டர்ன் குக்கு யலாஞ்சி ஆதிக்குடி மக்கள் ஆகியோர் இந்த மழைக்காடுகளை ஒன்றாக நிர்வகிப்பார்கள்.

கிரேட் பேரியர் ரீஃப் பவளத்திட்டை ஒட்டி இந்த மழைக் காடுகள் அமைந்துள்ளன.

ஆஸ்திரேலியாவின் மிகவும் பிரபலமான சுற்றுலா இடங்களில் இந்த மழைக் காடுகளும் ஒன்று.

(நன்றி BBC TAMIL)