தென் கொரியாவுடன் ஹாட்லைன் தொடர்பை மீண்டும் தொடங்க விரும்பும் வடகொரிய தலைவர் கிம் ஜோங் உன்

வட கொரிய நாட்டின் 14 உச்ச மக்களவையின் 5-வது அமர்வில் பேசுகிறார் வட கொரியத் தலைவர் கிம் ஜோங் உன்.

தென் கொரியாவுடன் துண்டிக்கப்பட்ட ஹாட்லைன் தொடர்பை மீண்டும் கொண்டுவர விரும்புவதாக வட கொரியத் தலைவர் கிம் ஜாங் உன் தெரிவித்துள்ளார்.

தென் கொரியாவுடன் சமாதானமாகப் போகும் தனது விருப்பத்தை தெரிவிக்கும் வகையில் அமைந்துள்ளது கிம் ஜாங் உன்னின் பேச்சு.

அதே நேரம், பேச்சுவார்த்தைக்கான அமெரிக்காவின் விருப்பத்தை அவர் விமர்சித்துள்ளார். தனது பகைமையான கொள்கையை மாற்றிக்கொள்ளாமல் பேச்சுவார்த்தை பற்றிப் பேசுவது ஏமாற்றுவேலை என்று அவர் கூறியுள்ளார்.

அமெரிக்காவுடன் சேர்ந்து தென்கொரியா மேற்கொண்ட போர்ப் பயிற்சிக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் இந்த ஹாட்லைன் இணைப்பை கடந்த ஆகஸ்ட் மாதம் துண்டித்துக்கொண்டது வட கொரியா.

வட கொரியாவின் வருடாந்திர நாடாளுமன்றக் கூட்டத்தில் பேசியபோது இந்த ஹாட்லைன் இணைப்பை மீண்டும் தொடங்கும் தனது விருப்பத்தைத் தெரிவித்தார் கிம்.

“தூதரகரீதியில் தொடர்பு கொள்வதைப் பற்றி அமெரிக்கா கூறுகிறது… ஆனால் சர்வதேச சமூகத்தை ஏமாற்றும், அடுத்தடுத்த அமெரிக்க ஆட்சியாளர்களால் பின்பற்றப்படும் தமது பகைமையான கொள்கையை மறைத்துக்கொள்ளும் மலிவான உத்தி இது,” என்று வடகொரிய அரசு ஊடகமான கே.சி.என்.ஏ.வில் வெளியான செய்து ஒன்று தெரிவிக்கிறது.

தென் கொரியாவுடன் கூட ஒரு நிபந்தனையுடன்தான் நட்புக் கரம் நீட்டியுள்ளார் கிம்.

“மோசமடைந்த வட கொரிய – தென் கொரிய உறவுகளால் துண்டிக்கப்பட்ட இரு நாடுகள் இடையிலான தகவல் தொடர்பு இணைப்பு அக்டோபர் முதல் மீண்டும் தொடங்கப்படவேண்டும் என்ற தனது விருப்பத்தை [கிம்] வெளியிட்டுள்ளார். ஆனால், இரு நாடுள் இடையிலான உறவு மேம்படுவதோ, இப்போது உள்ளதைப் போல தொடர்ந்து வீழ்ச்சி அடைவதோ தென் கொரிய நிர்வாகிகளின் அணுகுமுறையை ஒட்டியே இருக்கும்” என்கிறது கேசிஎன்ஏ செய்தி.

தனது பகைமையான கொள்கையை தென் கொரியா கைவிடத் தயாராக இருந்தால் அதனுடன் பேச்சுவார்த்தை நடத்த வட கொரியா தயாராக இருப்பதாக கடந்த வாரம் கிம்மின் சகோதரி தெரிவித்திருந்தார். அதே உணர்வை வெளிப்படுத்துவதுபோல இருக்கிறது கிம்மின் நாடாளுமன்ற உரை.

“தங்களுடைய சொந்த செயல்பாடுகளை நியாயப்படுத்துவது. அதே நேரம் எங்கள் தற்காப்புக்கான நியாயமான நடவடிக்கைகளை குறை சொல்வது என்ற இரட்டை நிலைப்பாட்டை அவர்கள் விட்டொழிக்கவேண்டும். இந்த முன் நிபந்தனை ஏற்கப்பட்டால்தான் நேருக்கு நேர் உட்கார்ந்து பேசி கொரியப் போரை முடிவுக்கு கொண்டுவருவது குறித்து முக்கியமான அறிவிப்பை வெளியிட முடியும்” என்று கிம்மின் சகோதரி ஒரு அறிக்கையில் கூறியிருந்தார்.

1953ம் ஆண்டே நடைமுறையில் கொரியப் போர் முடிவுக்கு வந்துவிட்டது. ஆனால், இறுதியில் அமைதி ஒப்பந்தம் ஏதும் எட்டப்படவில்லை என்பதால், அதிகாரபூர்வமாக அந்தப் போர் முடிவுக்கு வரவில்லை.

கடந்த சில ஆண்டுகளில் இந்த ஹாட்லைன் தொடர்பு பலமுறை துண்டிக்கப்பட்டு மீண்டும் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

இரு நாடுகள் இடையிலான பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததை அடுத்து, இரு நாட்டு எல்லையில் உறவை மேம்படுத்துவதற்காக தாம் அமைத்திருந்த ஒரு அலுவலகத்தை வட கொரியா வெடி வைத்துத் தகர்த்தது.

சோல் செய்தியாளர், லாரா பிக்கர், அலசல்இப்போது ஏன் தென் கொரியாவுடன் அமைதியை நாடுகிறார் கிம்?

அதற்கு சில காரணங்கள் இருக்கலாம்.

இந்த ஆண்டுக்கான அமெரிக்க – தென் கொரிய ராணுவப் பயிற்சி முடிந்துவிட்டது. எனவே, மிரட்டலுக்கான நேரம் முடிந்துவிட்டது.

ஐ.நா. பொது அவையில் பேசிய தென் கொரிய அதிபர் மூன் ஜே இன் இரு தரப்பும் பேச்சு வார்த்தை மூலம் கொரியப்போரை அதிகாரபூர்வமாக முடிவுக்குக் கொண்டுவரவேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். இது ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கலாம்.

அல்லது இந்த சந்தர்ப்பத்தை சரியாகப் பயன்படுத்திக்கொண்டு தனது உறவு ஆட்டத்தை மீண்டும் தொடங்க விரும்பியிருக்கலாம் வட கொரியா.

வட கொரியப் பொருளாதாரம் மிக மோசமான நிலையில் இருக்கிறது. எனவே தடைகளில் இருந்து விலக்கு பெறுவது கிம்முக்கு மிக முக்கியம். ஹனோயில் நடந்த உச்சி மாநாட்டில் இது தொடர்பாக ஒரு ஒப்பந்தத்தை எட்ட அவர் மிகவும் விரும்பினார். ஆனால், அது நடக்கவில்லை. ஏற்கெனவே மோசமாக இருக்கும் நிலைமையை, கோவிட் காரணமாக செயல்படுத்தப்பட்ட எல்லை மூடல் மேலும் மோசமாக்கியிருக்கும்.

தென் கொரிய அதிபர் தேர்தல் வேறு நெருங்கிக் கொண்டிருக்கிறது. இப்போதைய அதிபர் மூன் ஜே இன் வட கொரியாவுடன் சமாதானத்தை விரும்புகிறவராக இருக்கிறார். அடுத்த அதிபராக வருகிறவரும் இதே போல ஒப்பந்தத்தை விரும்புகிறவராக இருப்பாரா என்று சொல்ல முடியாது.

பல காலமாக அமெரிக்க தென் கொரிய உறவைப் பிரிக்க வட கொரியா முயன்று வருவதாக பார்வையாளர்கள் கூறுகிறார்கள். தென் கொரியாவுடன் பேசுவதற்கு வட கொரியா விரும்புகிறது. ஆனால், அமெரிக்காவுடன் பேச விரும்பவில்லை என்பது ஒரு சதித்திட்டமாக இருக்கலாம்.

அல்லது, தென் கொரியாவுக்கு வருகிற புதிய ஆட்சியாளர்கள் அமெரிக்காவுடன் பேசி வட கொரியா மீதான தடைகளை தளர்த்தவும் பிற சலுகைகளைப் பெறவும் முயற்சி செய்யலாம்.

அடுத்து என்ன நடக்கும்? இந்த வாரம் என்னிடம் இரண்டு ஆய்வாளர்கள் கூறியதுபோல கொரிய தீபகற்பத்தில் பரபரப்பான நேரமாக இது இருக்கும்.

ஆயுதப் போட்டி

இந்த வாரத் தொடக்கத்தில் ஒலியை விட வேகமாக சென்று தாக்கவல்ல ஹைப்பர் சானிக் ஏவுகணை ஒன்றை பரிசோதித்துப் பார்த்தது வட கொரியா.

தமது ஆயுத மேம்பாட்டுத் திட்டங்களை மட்டுப்படுத்தும் எண்ணம் எதுவும் தனக்கு இல்லை என்ற சமிக்ஞையையே வட கொரியா இதன் மூலம் விடுத்துள்ளது என்கிறார்கள் பார்வையாளர்கள்.

தனது அணு ஆயுதங்களைக் கைவிடுமாறு வடகொரியாவுக்கு வேண்டுகோள் விடுத்தள்ளது அமெரிக்கா. ஜோ பைடன் நிர்வாகத்தில் அமெரிக்காவுடனான வட கொரியாவின் உறவு உரசலாகவே இருந்து வருகிறது.

தனது தற்காப்புக்குத் தேவை என்று கூறி புதிய ஆயுதங்களை உருவாக்கும் உறுதிப்பாட்டை வட கொரியா தொடர்ந்து வெளிப்படுத்திவருகிறது.

அதைப் போல ராணுவ நடவடிக்கைகளைப் பொறுத்தவரை தென் கொரியா இரட்டை நிலைப்பாட்டை எடுப்பதாக வட கொரியா தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது.

நீர் மூழ்கிக் கப்பலில் இருந்து ஏவக்கூடிய பேலிஸ்டிக் ஏவுகணை ஒன்றை தென் கொரியா அண்மையில் சோதனை செய்து பார்த்தது. வட கொரியாவின் தொடர் தூண்டுதலை கணக்கில் கொண்டு இது தமது தற்காப்புக்குத் தேவை என்று அந்நாடும் கூறியது.

(நன்றி BBC TAMIL)