மரபணு திருத்தப்பட்ட பயிர்களுக்கு பிரிட்டனில் கட்டுப்பாடு தளர்த்த திட்டம்: ஏன்? எப்படி?

இங்கிலாந்தில் மரபணு திருத்தப்பட்ட (Gene Edited) பயிர்களை வணிகரீதியாக உற்பத்தி செய்ய வழிவகுக்கும் வகையில் பிரிட்டன் அரசு இதற்கான கட்டுப்பாடுகளைத் தளர்த்த உள்ளது.

மரபான முறையில், புதிய பயிர் வகைகளை உருவாக்கும்போது எப்படி சோதிக்கப்பட்டு, மதிப்பிடப்படுமோ அந்த அளவுக்கே இனி மரபணு திருத்தப்பட்ட பயிர்களும் சோதிக்கப்படும்.

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் வெளியேறிவிட்டதால், இது தொடர்பான ஐரோப்பிய ஒன்றியத்தின் கட்டுப்பாடுகளை இனி பிரிட்டன் பின்பற்றவேண்டியதில்லை. இதனால்தான் இந்த கட்டுப்பாடு தளர்வு சாத்தியமாகி உள்ளது.

அதே நேரம், ஸ்காட்லாந்து, வேல்ஸ், வட அயர்லாந்து அரசுகள் இனி தாங்களே இந்தக் கட்டுப்பாடு தளர்வு தொடர்பாக முடிவு எடுத்துக்கொள்ளலாம்.

வலுவான, பருவநிலை மாற்றத்தால் பாதிக்கப்படாத செடிகளை உருவாக்குவது தொடர்பில் விவசாயம், சுற்றுச்சூழல் சார்ந்த குழுக்களுடன் இணைந்து செயல்படப்போவதாக சுற்றுச்சூழல் அமைச்சர் ஜார்ஜ் யூஸ்டிஸ் தெரிவித்துள்ளார்.

“இயற்கை அளித்துள்ள மரபணு வளங்களை பயன்படுத்திக்கொள்ளும் வல்லமை மரபணு திருத்தும் தொழில்நுட்பத்துக்கு உண்டு. நாம் எதிர்கொள்ளும் சில பெரிய சவால்களை சமாளிப்பதற்கான கருவி இது,” என்று அவர் தெரிவித்துள்ளார்.

மரபணு மாற்றமும், திருத்தமும்

மரபணு மாற்றம் என்று சொல்லப்படுவது வேறு. மரபணு திருத்தம் என்பது வேறு. மரபணு மாற்றப்பட்ட பயிர்களை ஒப்பிடும்போது மரபணு திருத்தப்பட்ட பயிர்களில் மரபணுவில் எளிமையான மாற்றங்களே செய்யப்பட்டிருக்கும் என்று விளக்கம் சொல்லப்படுகிறது.

மரபணு மாற்றப்பட்ட பயிர்களில் பெரும்பாலும் கூடுதல் ஜீன்கள் சேர்க்கப்பட்டிருக்கும். சில நேரங்களில் அந்த கூடுதல் ஜீன் என்பது முற்றிலும் வேறு உயிரினத்தில் இருந்து எடுக்கப்பட்டதாக இருக்கும். சில நேரங்களில் விலங்குகளின் டி.என்.ஏ. கூட அதில் செலுத்தப்படும்.

மாறாக மரபணு திருத்தப்பட்ட பயிர்களில் பெரும்பாலும் ஜீன்கள் வெட்டி எடுக்கப்பட்டிருக்கும். இது போன்ற மாற்றங்களை மரபான ஒட்டு முறையில், கலப்பின முறையில்கூட செய்ய முடியும். ஆனால், ஒட்டு, கலப்பின முறையில் அதை செய்வதற்கு பல ஆண்டுகள் ஆகும் என்றால் மரபணு திருத்த முறையில் சில மாதங்களிலேயே அதை செய்ய முடியும்.

ஊட்டச் சத்து அதிகம் இருக்கும் வகையில், அதிகம் விளையக் கூடிய வகையில், தீவிர பருவநிலை விளைவுகளைத் தாங்கி நிற்கும் வகையில் பயிர்களை உருவாக்க இந்த மரபணு திருத்த முறையைப் பயன்படுத்தலாம் என்று விஞ்ஞானிகள் நம்புகிறார்கள்.

ஒரு மரபணு திருத்தப்பட்ட கோதுமைப் பயிர் இது. இயற்கையில் ஒரு முறை மட்டுமே நிகழ்ந்துள்ள, தானியத்தின் அளவை பெரிதாக்கும் ஒரு திடீர் மற்றத்தை இந்த மரபணு திருத்தம் நிகழ்த்தியுள்ளது.ஒரு மரபணு திருத்தப்பட்ட கோதுமைப் பயிர் இது. இயற்கையில் ஒரு முறை மட்டுமே நிகழ்ந்துள்ள, தானியத்தின் அளவை பெரிதாக்கும் ஒரு திடீர் மற்றத்தை இந்த மரபணு திருத்தம் நிகழ்த்தியுள்ளது.

ஆனால், மரபணு மாற்றப்பட்ட பயிர்களுக்கு வைக்கப்பட்டுள்ள அதே அளவு கட்டுப்பாடுகளை, விதிகளை மரபணு திருத்தப்பட்ட பயிர்களுக்கும் வைத்துள்ளது ஐரோப்பிய ஒன்றியம்.

இந்த விதிகளின்படி மரபணு திருத்தப்பட்ட பயிர்களை பல ஆண்டுகளுக்கு களப்பரிசோதனைக்கும், உணவுப் பாதுகாப்பு பரிசோதனைகளுக்கும் உட்படுத்த வேண்டும்.

அதன் பிறகு புதிய வகைகளுக்கு அங்கீகாரம் அளிப்பதற்கு உறுப்பு நாடுகள் வாக்களிக்கவேண்டும் என்பது அதைவிட பெரிய தடை.

இந்த அணுகுமுறை, பெரிய சிக்கல்களையும், முயற்சிகளையும் உடையது மட்டுமல்ல, நிறைய செலவு பிடிப்பதும்கூட என்று உயிரி தொழில்நுட்ப நிறுவனங்கள் நினைக்கின்றன. இதனால், ஐரோப்பிய ஒன்றியத்தில் மரபணு மாற்றப்பட்ட, திருத்தப்பட்ட எந்த ஒரு பயிரும் உருவாக்கப்பட்டதில்லை.

மரபணு மாற்றப்பட்ட, மரபணு திருத்தப்பட்ட பயிர்கள் தொடர்பாக தனித்தனி சட்டங்களை உருவாக்குவதில் இருந்து இந்த மாற்றத்தைத் தொடங்குகிறது வெஸ்ட்மின்ஸ்டர் அரசங்கம்.

முதல் படியாக, மரபான கலப்பின முறையில் உருவாக்க முடிகிற மாற்றங்களை மரபின திருத்தம் மூலம் செய்த பயிர்களை வயல்களில் பரிசோதனை செய்ய விஞ்ஞானிகள் உரிமம் பெறவேண்டும் என்ற விதி இந்த ஆண்டு ரத்து செய்யப்படும்.

அதைவிட ஒரு முக்கியமான மாற்றம் அடுத்த ஆண்டு மேற்கொள்ளப்படும். இதன் மூலம் வழக்கமாக புதிய ரகத்தை உருவாக்குவதற்கு உள்ள வழிமுறை என்னவோ, அதே வழிமுறையைப் பின்பற்றியே எளிமையான மரபணு திருத்தங்களை மேற்கொள்ள வழி செய்யும் சட்டம் கொண்டுவரப்படும்.

எல்லாவகை உயிரினங்களுக்கும் மரபணு மாற்றுவதற்கான கட்டுப்பாடுகள் தொடர்பான அணுகுமுறையை நீண்ட கால நோக்கில் அமைச்சர்கள் மறுபரிசீலனை செய்வார்கள். மரபணு திருத்தப்பட்ட, மாற்றப்பட்ட விலங்களுகளை உருவாக்கி, வணிக ரீதியாக உற்பத்தி செய்யும் நடவடிக்கைகளை அனுமதிப்பது போன்றவை இந்த கட்டத்தில் இடம் பெறக்கூடும். இதனால் விலங்குகளின் உற்பத்தித் திறன், சில நோய்களை, வெப்பமான தட்பவெட்ப நிலையை தாங்கும் திறன் ஆகியவை அதிகரிக்கக்கூடும்.

மரபணு திருத்தத்தின் மூலம் அமெரிக்க விஞ்ஞானிகள் உருவாக்கிய இந்த கன்று அதிக வெப்பத்தை தாங்கக்கூடியது, அதிகம் பால் தரும் பசுவாக ஆகக்கூடியது.மரபணு திருத்தத்தின் மூலம் அமெரிக்க விஞ்ஞானிகள் உருவாக்கிய இந்த கன்று அதிக வெப்பத்தை தாங்கக்கூடியது, அதிகம் பால் தரும் பசுவாக ஆகக்கூடியது.

மரபணு திருத்தத்தின் மூலம் அமெரிக்க விஞ்ஞானிகள் உருவாக்கிய இந்த கன்று அதிக வெப்பத்தை தாங்கக்கூடியது, அதிகம் பால் தரும் பசுவாக ஆகக்கூடியது.

இது தொடர்பாகப் பேசிய வேல்ஸ் அரசு செய்தித் தொடர்பாளர் ஒருவர், “மரபணு மாற்றப்பட்ட உயிரினங்கள் தொடர்பாக தற்போது வேல்சில் உள்ள விதிமுறைகளை மறுபரிசீலனை செய்யும் திட்டம் ஏதும் எங்களுக்கு இல்லை. மரபணு மாற்றம் தொடர்பான எங்களுடைய முன்னெச்சரிக்கை அணுகுமுறை தொடரும். பிரிட்டன் அரசாங்கத்தைப் போல அல்லாமல், மரபணு திருத்தத்தையும் மரபணு மாற்றமாகவே நாங்கள் தொடர்ந்து அணுகுவோம். ஐரோப்பிய நீதிமன்றம் 2018ல் வகுத்த நெறிமுறை இது,” என்றார்.

(நன்றி BBC TAMIL)