‘கிங் மேக்கர்ஸ்’ என்ற தகுதி பெரும் இந்தியர்கள் எழுச்சி பெற வேண்டும்

இராகவன் கருப்பையா – நம் நாட்டில் காலங்காலமாக தேர்தல் சமயங்களில் மட்டும்தான் பெரும்பாலான அரசியல்வாதிகளுக்கு நம் சமூகத்தின் மீதான அக்கரை, பரிவு, பாசம், எல்லாமே ஒரு சேர உண்டாகும்.

பொதுத் தேர்தலாக இருந்தாலும் சரி, இடைத்தேர்தலாக இருந்தாலும் சரி, இந்நிலைதான் இத்தனை ஆண்டுகளும் வழக்கத்தில் உள்ள ஒன்றாக இருந்து வருகிறது.

பனிக்கூழ் போலான இனிப்பு கலந்த குளிர்ந்த வார்த்தைகளால் நம்மை குளிப்பாட்டி, இந்தத் தொகுதியில் நீங்கள்தான் ‘கிங் மேக்கர்ஸ்'(முடிவை நிர்ணயிக்கும் நிலையில் உள்ளவர்கள்) எனும் அழகானதொரு மகுடத்தையும் நம் தலைகளில் வைத்து அலங்கரிப்பார்கள்.

நாடு தழுவிய நிலையில் எண்ணற்றத் தொகுதிகளில் இந்தியர்கள் ‘கிங் மேக்கர்கள்’ எனும் உண்மையை யாராலும் மறுக்க முடியாது மறைக்கவும் முடியாதுதான். இருந்த போதிலும் அந்தக் கிரீடம் வாக்களிப்பு தினத்தோடு அதன் மவுசை இழந்து, தானாகவே காணாமல் போய்விடுகிறது.

சம்பந்தப்பட்ட தேர்தலில் தோற்றுப் போனவர்கள் அதன் பிறகு ஒன்றும் சொல்லாமல் போய்விடுவார்கள். ஜெயித்தவர்கள், இந்த ‘கிங் மேக்கர்’களைக் கண்டு கொள்வதுமில்லை. பல சமயங்களில், இவர்களால்தான் வெற்றி கிடைத்தது எனும் அங்கீகாரத்தைக் கூட வழங்க அவர்களுக்கு மனம் வருவதில்லை.

ஆக, நம் சமூகத்தை ஒரு பகடை காயாக பயன்படுத்தி தங்களுக்குத் தேவையான ஆதாயத்தை அரசியல்வாதிகள் சுருட்டிக் கொள்வதற்கு இதெல்லாம் வெறும் அரசியல் சித்து விளையாட்டுதான் என்பதை நாம் உணர வேண்டும்.

சிலாங்கூர், கோல குபு பாருவில் அடுத்த மாதம் 11ஆம் தேதி சட்டமன்ற இடைத் தேர்தல் நடைபெறவிருக்கும் இத்தருணத்தில் நம் சமூகத்தின் மீது மீண்டும் இந்த ‘கிங் மேக்கர்’ புகழாரம் பாய்ந்துள்ளது.

அத்தொகுதியில் உள்ள மொத்த வாக்காளர்களில் 18 விழுக்காடாக இருக்கும் இந்தியர்கள்தான் அங்கு “கிங் மேக்கர்’கள் என்று கூறும் அரசியல்வாதிகள், அதனையே திரும்பத் திரும்ப ஒப்புவித்து நம் மீது பனிக் குளிரை தூவத் தொடங்கிவிட்டனர்.

இதுபோன்ற இனிப்பு வார்த்தைகளுக்கு இனிமேலும் நாம் சோரம் போய்விடக்கூடாது என்பதில் நம் சமுதாயம் உறுதியாக இருக்க வேண்டும். ஏனென்றால் ‘கிங் மேக்கர்’ எனும் பட்டத்தினால் எக்காலத்திலும் நமக்கு ஒரு பிரயோஜனமும் இல்லை. அப்படிப்பட்ட ஒரு போலியான மகுடம் நமக்கு தேவையே இல்லை. ஒவ்வொரு முறையும் நாம் பலிகடா ஆகியதுதான் மிச்சம்.

இந்நாட்டை பொறுத்த வரையில் எந்த அரசியல்வாதியோ அரசியல் கட்சியோ நம் சமூகத்தைத் தூக்கிவிடுவதில் முனைப்புக் காட்ட தயாராய் இல்லை என்பதை அண்மைய கால அனுபவங்கள் நமக்கு நன்றாகவே உணர்த்தியுள்ளன.

மதத்திற்கும் இனத்திற்கும் முன்னுரிமை வழங்கி அவற்றையே தங்களுடைய அரசியல் பிழைப்புக்கு உரமாக பயன்படுத்தும் அரசியல் யுகத்தில் வயிறு கழுவும் அரசியல்வாதிகளின் பார்வையிலிருந்து எப்போதோ நாம் மறைந்துவிட்டோம் எனும் உண்மையை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

‘நம் கையே நமக்குத் துணை’ எனும் தாரக மந்திரத்தை யதார்த்தமாக்கி நம்மை நாமே உயர்த்திக் கொள்வதில் கவனம் செலுத்தினால்தான் செம்மையானதொரு எதிர்காலத்தை நாம் செதுக்கிக் கொள்ள இயலும்.

எனவே கோல குபு பாரு மட்டுமின்றி நாட்டின் எந்தத் தொகுதியாக இருந்தாலும் சுயநல அரசியல்வாதிகளின் போலிப் பூசல்களுக்கு நாம் அடிமையாகிவிடக் கூடாது. விழிப்படைந்த ஒரு சமுதாயமாக எழுச்சிப் பெற வேண்டிய தருணம் வந்துவிட்டது.

“ஆளுங்கட்சி சரியில்லை, எதிர்கட்சி ஆட்சியமைத்தால் நமக்கு பொற்காலம் பிறக்கும்,” என்று ஏங்கித் தவித்து ஏமாந்த காலங்களைக் கடந்து, ஜனநாயக கடப்பாட்டை நிறைவேற்றுவதில் மட்டும் கவனம் செலுத்தி நமது வாழ்க்கைப் பயணத்தைத் தொடர வேண்டும்.

அதன் அடிப்படையில், விழிப்புணர்வு கொண்ட ஒரு சமூகம் என்பதை மெய்பிக்க நாம் அரசாங்கம் நமக்காக மேற்கொண்ட திட்டங்களை மீள்பார்வையுடன் விமர்சனதிற்கும் விவாதத்திற்கும்  உட்படுத்த வேண்டும்.

அன்வார் அளித்த உறுதிகள் யாவை, அவற்றின் நிலைப்பாடு என்ன?, கட்சி அரசியலில், நம்பிக்கை கூட்டணியின் கொள்கைகள் மற்றும் செயல் திட்டங்கள் எந்த அளவு ஆக்ககரமான மாற்றத்தை உருவாக்கும் என்பதை விவாதிக்க வேண்டும்.

இப்போது கேள்வி என்னவென்றால் பூனைக்கு யார் மணி கட்டுவது என்பதாகும். ஆளில்லை ஆற்றல் இல்லை என்பதில் உண்மையில்லை.

நம்மிடையே இருக்கும் தேவையற்ற  தலைகணத்தை இறக்கி வைத்து விட்டு ஆர்வத்துடன் இளைய தலைமுறை அரசியல்வாதிகள் முன்வர வேண்டும்.