இராகவன் கருப்பையா – கடந்த ஆண்டில் புதிதாக உதயம் கண்ட இரு இந்திய கட்சிகளில் ஒன்றான எம்.ஐ.பி.பி. எனப்படும் மலேசிய இந்திய மக்கள் கட்சி, எதிர்கட்சிகளின் கூட்டணியான பெரிக்காத்தான் நேஷனலில் இணைந்துள்ள பட்சத்தில் மற்றொரு கட்சியான ‘உரிமை’யின் நிலைப்பாடு என்னவென்று தெரியவில்லை.
சனநாயக செயல் கட்சியில் இருந்து வெளியான அவரை பாக்காத்தான் கூட்டணி ஏற்காது. பெரிக்காதான் கட்சி உரிமை கட்சியின் சமத்துவ கொள்கையை ஏற்காது.
கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் ‘உரிமை’ எனும் புதிய அரசியல் கட்சியைத் தொடக்குவதாக பினேங் மாநில முன்னாள் துணை முதல்வர் ராமசாமி அறிவித்தது யாவரும் அறிந்ததே.
அதனைத் தொடர்ந்து அவசர அவசரமாக வீருகொண்டெழுந்த இளைஞர் கூட்டம் ஒன்று, ‘எம்.ஐ.பி.பி.’ எனப்படும் ‘மலேசிய இந்திய மக்கள் கட்சி’யை தோற்றுவிப்பதாக அறிவித்தது.
சிலாங்கூர் மாநில ம.இ.கா.வின் முன்னாள் இளைஞர் பிரிவுத் தலைவர் புனிதன் தலைமையிலான இந்தக் கட்சியும் ராமசாமியின் ‘உரிமை’யும் பெரிக்காத்தான் கூட்டணியில் இணைய அப்போதே திட்டமிட்டதைப் போல் தோன்றியது.
ஏனென்றால் ராமசாமி தலைமையிலான ஒரு உயர்மட்டக் குழு பெர்சத்து கட்சியின் செயலாளர் ஹம்ஸாவை சந்தித்த வேளையில், பெரிக்காத்தானில் இணைய விரும்புவதாக புனிதன் திடீர் அறிவிப்பு ஒன்றை செய்தார்.
கடந்த 5 மாதங்களாக இவ்விரு கட்சிகளும் இதன் தொடர்பாக எவ்வித அறிவிப்பையும் செய்யாத சூழலில் எம்.ஐ.பி.பி. அதிகாரப்பூர்வமாக பெரிக்காத்தானில் இணைகிறது என சில தினங்களுக்கு முன் செய்தி வெளியானது நிறைய பேருக்கு சற்று வியப்புதான்.
ஏனெனில் ‘உரிமை’யோடு ஒப்பிடுகையில் எம்.ஐ.பி.பி. முற்றிலும் புதியவர்களையும் கொஞ்சம் கூட அரசியல் அனுபவம் இல்லாத இளையோரையும் கொண்டு அமைக்கப்பட்ட ஒரு கட்சி. புனிதன் கூட அண்மைய காலம் வரையில் அவ்வளவு அறிமுகம் இல்லாத ஒருவர்தான்.
இவர்களை வைத்துக் கொண்டு பெரிக்காத்தான் தலைவர் முஹிடின் என்ன சாதிக்க முனைந்துள்ளார் என்று தெளிவாகத் தெரியவில்லை. “இந்தியர்களை நாங்கள் கைவிடமாட்டோம்” எனும் கூற்றை பறைசாற்றுவதற்கு இதுவும் ஒரு கபட நாடகம்தானா என்று கூட நினைக்கக் தோன்றுகிறது.
அல்லது ‘இந்த ‘சிறுவர்களை’ சுலபமாக கையாண்டு, காலங்காலமாக ம.இ.கா.வை அம்னோ நடத்தியதைப் போல இவர்களுடைய சிண்டை கைக்குள் வைத்துக் கொள்ளலாம் என்று நினைத்தாரோ தெரியவில்லை. அவரும் ஒரு முன்னாள் அம்னோ தலைவர் தானே! இதிலென்ன ஆச்சரியம்?
அதே வேளையில் ‘உரிமை’ கட்சி ‘பனங்காட்டு நரி’யைப் போல. துடுக்காக பேசக் கூடிய ராமசாமி மட்டுமின்றி, அரசியலில் அனுபவமுடைய முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களான காமாட்சி துரைராஜு மற்றும் சதீஸ் முனியாண்டி ஆகியோரோடு மேனாள் நகரான்மைக் கழக உறுப்பினர் டேவிட் மார்ஷலும் அக்கட்சியில் முக்கிய அங்கம் வகிக்கின்றனர்.
வெளிப்படைத் தன்மையுடன் கருத்துகளை முன்வைப்பது மட்டுமின்றி தேசிய நிலையில் இந்தியர்களுக்காக எந்நேரத்திலும் துணிச்சலாக குரல் எழுப்பக்கூடிய ராமசாமியை தலைவராகக் கொண்ட ஒரு கட்சி பெரிக்காத்தானை நாடுமா? அப்படி நாடினால் விரும்பி ஏற்றுக் கொள்ளுமா என்பதும் தெரியவில்லை.
ஏனெனில் அம்னோ வழித் தோன்றலாக வந்த இவர்கள் காலங்காலமாக ‘ஆமாம் சாமி’களையும் ‘தலையாட்டி பொம்மை’களையும் மட்டுமே அருகில் வைத்துக் கொண்டு அரசியல் நடத்தி சுகம் கண்டவர்கள் என்பது யாவரும் அறிந்த ஒன்று.
இதற்கிடையே பெரிக்காத்தானில் இணைவது தொடர்பாக எந்த ஒரு முடிவும் இதுவரையில் எடுக்கப்படவில்லை, பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை என அக்கட்சியின் தலைமைச் செயலாளர் சதீஸ் கூறினார்.
‘உரிமை’யின் கொள்கைளுடன் கை கோர்க்கக் கூடிய எந்த ஒரு எதிர்கட்சியுடனும் இணைந்து செயலாற்ற தாங்கள் தயார் என்று கூறிய அவர், கட்சிக்கு அரசாங்கப் பதிவு இன்னும் கிடைக்கவில்லை என்றும் குறிப்பிட்டார்.