வரவு செலவுத்திட்டத்தில் பாதுகாப்பு அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடு அதிகரிப்பு

வரவு செலவுத் திட்ட யோசனைக்கு அமைய அடுத்தாண்டு அரச செலவுகள் 3 ஆயிரத்து 3100 கோடி ரூபாய் குறையும் என நிதியமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜனாதிபதி மற்றும் சுகாதாரத் துறைக்கு அடுத்தாண்டுக்கு ஒதுக்கப்படும் நிதி குறைக்கப்பட்டுள்ளதுடன் அதிகளவான நிதி தேசிய பாதுகாப்புக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் செலவுகளுக்காக அடுத்தாண்டு 2.78 பில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் ஜனாதிபதியின் செலவுகளுக்காக அடுத்தாண்டு ஒதுக்கப்படும் நிதி 6.6 பில்லியன் ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. அதேவேளை பாதுகாப்பு அமைச்சின் செலவுகளுக்காக 18 பில்லியன் ரூபாய் அதிகரிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு அமைச்சுக்கு இந்தாண்டு 355 பில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டதுடன் அடுத்தாண்டு இந்த தொகை 373 பில்லியனாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு அமைச்சு அடுத்ததாக அதிகளவான நிதி அரச சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி சபைகள் அமைச்சு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த அமைச்சுக்காக 286.7 பில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து பெருந்தெருக்கள் அமைச்சுக்கு 250.1 பில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் 250 பில்லியன் ரூபாய் மூலதன செலவுகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் கல்வியமைச்சிக்காக நிதி ஒதுக்கீடும் அதிகரிக்கப்பட்டுள்ளது. கல்வியமைச்சுக்கு அடுத்தாண்டுக்காக 127.6 பில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்தாண்டு 126.5 பில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டிருந்தது. சுகாதார அமைச்சின் செலவுகளுக்காக அடுத்தாண்டு 153.5 பில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இது இந்தாண்டுடன் ஒப்பிடும்போது 6 பில்லியன் ரூபாய் குறைவாகும். அடுத்தாண்டுக்கான வரவு செலவுத்திட்ட யோசனையின் பிரகாரம் அரசாங்கத்தின் மொத்த செலவு 2 ஆயிரத்து 505.3 பில்லியன் ரூபாயாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வரவு செலவுத்திட்டத்திற்கான மதிப்பீட்டு சட்டமூலம் அடுத்த வாரம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதுடன் வரவு செலவுத் திட்டம் நவம்பர் 12 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

(நன்றி TAMIL WIN)