இசா சட்டம் போதுமானது அல்ல என அமெரிக்கா கூறுகிறது

பயங்கரவாதக் கட்டமைப்புக்களை அடையாளம் காண்பதற்கு இசா எனப்படும் உள் நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தை மலேசியா நம்பியிருப்பது போதுமானது அல்ல என்றும் நிறைவான விளைவுகளைக் கொண்டு வரவில்லை என்றும் அமெரிக்க வெளியுறவுத்துறை தயாரித்துள்ள அறிக்கை ஒன்று கூறுகிறது.

மலேசியாவில் புலனாய்வுகள் வழி பெறப்படும் தகவல்களுக்குப் பதில் திரட்டப்படும் வேவுத் தகவல்கள் அடிப்படையில் சந்தேகத்துக்குரிய நபர்கள் தடுத்து வைக்கப்படுவதாக 2010ம் ஆண்டுக்கான பயங்கரவாதம் மீதான (நாடுகள்) அறிக்கையில் அவ்வாறு கூறப்பட்டுள்ளது.

“மலேசிய அரசாங்கம் புலனாய்வுக்குப் பதில் தடுப்பு நடவடிக்கையாக இசா சட்டத்தைத் தொடர்ந்து பயன்படுத்துகிறது”, என அது தெரிவித்தது.

“மலேசிய குடிநுழைவுத்துறை நாட்டுக்குள் நுழையும் பயணிகளை சோதனை செய்த போதிலும் அது எல்லைக் கட்டுப்பாடுகளை இன்னும் வலுப்படுத்த வேண்டும்.”

“எல்லையில் கட்டுப்பாடுகள் பலவீனமாக இருப்பதாலும் தாய்லாந்து, பிலிப்பீன்ஸ் ஆகியவற்றுடனான எல்லைப் பகுதிகளிலும் கிழக்கு மலேசியாவில் இந்தோனிசியாவுடனான எல்லையிலும் கடல் பாதுகாப்பு முழுமையாக இல்லாததாலும் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு இலக்காகக் கூடிய சாத்தியம் உள்ளது”, என அந்த அறிக்கை மேலும் குறிப்பிட்டது.

“பயங்கரவாத அமைப்புக்களுடன் தொடர்புடைய நபர்கள் பலவீனமான அந்தக் கட்டுப்பாடுகளை சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு மலேசியாவுக்குள் பயண செய்ய முடியும். மூன்றாம் நாடுகளுக்குச் செல்வதற்கான வழியாகவும் மலேசியாவைப் பயன்படுத்த முடியும்.”

பயங்கரவாதிகள் மூன்றாம் நாடுகளுக்கு செல்வதற்கு முன்னர் தங்கிச் செல்வதற்கும் திட்டங்களைத் தயாரிப்பதற்கான இடமாகவும் மலேசியா பயன்படுத்தப்பட்டுள்ளதை அந்த அறிக்கை குறிப்பிட்டது.

பயங்கரவாதத்தை முறியடிக்கும் முயற்சிகளில் மலேசியப் போலீசார் அனைத்துலக சமூகத்துடன் அணுக்கமாக ஒத்துழைப்பதாகவும் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளில் அதன் அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளதாகவும் அது தெரிவித்தது.

பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு நிதி உதவி செய்வதைக் குற்றமாக்கும் வகையில் மலேசியா தனது சட்டங்களை வலுப்படுத்தியுள்ள போதிலும் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு நிதி அளிக்கப்பட்டதின் தொடர்பில் இது வரை எந்தப் புலனாய்வோ, வழக்கோ அல்லது தண்டனையோ வழங்கப்படவில்லை என்றும் அந்த அறிக்கை தெரிவித்தது.

இந்து, பௌத்த ஆலயங்கள் மீது பயங்கரவாதத் தாக்குதல்கள்

2010ம் ஆண்டு கோலாலம்பூரில் உள்ள இந்து, பௌத்த ஆலயங்கள் மீது பயங்கரவாதத் தாக்குதல்களை நடத்துவதற்கு சதித் திட்டத்தைத் தயாரித்ததாகக் கூறப்பட்ட 10 பேரை போலீசார் தடுத்த வைத்த சம்பவத்தை அந்த அறிக்கை குறிப்பிட்டுள்ளது.

2010ம் ஆண்டு பிப்ரவரி மாதம் சபாவில் அபு சாயாப் கும்பலைச் சேர்ந்தவர்கள் இரண்டு மலேசியர்களை கடத்தி பிலீப்பீன்ஸுக்குள் கொண்டு சென்று பிணைப்பணம் கோரினர். அதே ஆண்டு டிசம்பர் மாத இறுதி வாக்கில் அந்த இருவரையும் பிலீப்பீன்ஸ் ஆயுதப்படையினர் மீட்டனர்.

செப்டம்பர் மாதம் மலேசிய அதிகாரிகள் பயங்கரவாதியான மாஸ் செலாமாட் கஸ்தாரியை சிங்கப்பூருக்கு திருப்பி அனுப்பினர். அந்த மாஸ் செலாமாட் 2008ம் ஆண்டு சிங்கப்பூர் சிறைச் சாலை ஒன்றிலிருந்து தப்பியவன் ஆவான்.

மலேசியப் பல்கலைக்கழகங்களில் மேற்கொள்ளப்படுகிற ஆட்சேர்ப்பு நடவடிக்கைகள் பற்றியும் அந்த அறிக்கை கவலை தெரிவித்தது. அந்நிய மாணவர்கள் மீது கூடுதல் கண்காணிப்பு அவசியம் என்றும் அது கூறியது.

TAGS: