ஒரு நூற்றாண்டு ஆய்வுகள், போராட்டங்களுக்குப் பிறகு முதல் முறையாக ஆப்பிரிக்க குழந்தைகளுக்கு மலேரியாவுக்கான தடுப்பூசி போட அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது.
ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக குழந்தைகளையும் சிசுக்களையும் கொல்லும், மனித குலத்தை அச்சுறுத்தும் நோயாக மலேரியா இருந்து வருகிறது.
நூறு ஆண்டுகால ஆராய்ச்சிகளுக்குப் பிறகு மலேரியாவுக்கு தடுப்பூசி கண்டுபிடித்திருப்பது மருத்துவ உலகின் குறிப்பிடத் தகுந்த சாதனையாகும்.
RTS, S என்று அழைக்கப்படும் இந்தத் தடுப்பூசி மலேரியாவுக்கு எதிராகச் சிறப்பாகச் செயல்படுவதாக ஆறு ஆண்டுகளுக்கு முன்பு நிரூபிக்கப்பட்டது.
கானா, கென்யா மற்றும் மலாவி ஆகிய நாடுகளில் முன்னோட்டத் நோய்த்தடுப்புத் திட்டங்களின் வெற்றிக்குப் பிறகு, இப்போது மலேரியா அதிகமாகப் பரவும் சஹாராவுக்கு கீழே இருக்கும் ஆப்பிரிக்க நாடுகளிலும் தடுப்பூசி போட வேண்டும் என உலக சுகாதார நிறுவனம் வலியுறுத்தியுள்ளது.
“இது ஒரு வரலாற்றுத் தருணம்” என்று உலக சுகாதார நிறுவனத்தின் டெட்ரோஸ் அதனோம் கூறியுள்ளார்.
” நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட மலேரியா தடுப்பூசி, அறிவியல், குழந்தை ஆரோக்கியம் மற்றும் மலேரியா கட்டுப்பாடு ஆகியவற்றில் ஒரு மைல்கல்” என்று அவர் கூறினார்.
“ஒவ்வோர் ஆண்டும் பல்லாயிரக்கணக்கான இளம் உயிர்களை காப்பாற்ற முடியும்.” என்றார் அவர்.
கொடிய ஒட்டுண்ணி
மலேரியா நமது உடலில் புகுந்து பல்கிப் பெருகுவதற்காக நமது ரத்த அணுக்களை ஆக்கிரமித்து அழிக்கும் கொடிய ஒட்டுண்ணியாகும். ரத்தத்தை உறிஞ்சும் கொசுக்கள் கடிப்பதன் மூலம் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்குப் பரவுகிறது.
மலேரியா கிருமியைக் கொல்லும் மருந்துகள், கொசுக்கள் கடிப்பதைத் தடுக்கும் வகையிலான படுக்கை வலைகள், கொசுக்களைக் கொல்லும் பூச்சிக்கொல்லிகள் போன்றவை மலேரியாவைக் குறைக்க உதவின.
ஆனாலும் ஆப்பிரிக்காவில் இந்த நோயைக் கட்டுப்படுத்த முடியவில்லை. 2019-ஆம் ஆண்டுக் கணக்குப்படி ஆப்பிரிக்க நாடுகளில் 2.6 லட்சத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் மலேரியாவுக்கு பலியாகினர்.
ஒவ்வோர் ஆண்டும் மலேரியாவால் 4 லட்சம் உயிர்கள் பறிபோகின்றன. இயற்கையான நோய் எதிர்ப்பு சக்தி உருவாக வேண்டுமானால் மீண்டும் பல ஆண்டுகளுக்கு தொற்று ஏற்பட வேண்டும். இதுவும் நோய்த் தொற்று ஏற்படுவதை ஓரளவு மட்டுமே குறைக்கும்.
கானாவில் முன்னோட்டத் திட்டத்தை செயல்படுத்தி, மலேரியாவுக்கு வெகுஜன அளவிலான தடுப்பூசி வழங்குவது சாத்தியமானதா என்று மருத்துவர் குவாமே அம்போன்சா மதிப்பீடு செய்தார்.
“இது எங்களுக்கு மிகவும் உற்சாகமான தருணம், பெரிய அளவிலான தடுப்பூசி மூலம் மலேரியா எண்ணிக்கை குறைந்தபட்சமாக குறைக்க முடியும் என்று நான் நம்புகிறேன்” என்று அவர் கூறினார்.
குழந்தை பருவத்தில் தொடர்ந்து மலேரியா தொற்று ஏற்பட்டதால், கானாவைச் சேர்ந்த அம்போன்சாவுக்கு மருத்துவராகும் கனவு உருவானது.
“அது வேதனையாக இருந்தது. ஒவ்வொரு வாரமும் பள்ளிக்குச் செல்ல முடியாமல் போனது. நீண்ட காலமாக அது எங்களை பாதித்தது” என்று அவர் கூறினார்.
குழந்தைகளின் உயிரைக் காப்பாற்றும் திறன் கொண்டது
100க்கும் மேற்பட்ட மலேரியா ஒட்டுண்ணி வகைகள் உள்ளன. ஆப்பிரிக்காவில் பொதுவாகக் காணப்படும் மிகக் கொடிய பிளாஸ்மோடியம் ஃபால்சிபாரம் என்ற வகையைக் குறிவைத்து RTS, S தடுப்பூசி உருவாக்கப்பட்டுள்ளது.
இந்தத் தடுப்பூசி பத்தில் நான்கு போருக்கு மலேரியா வருவதைத் தடுக்கும், பத்தில் மூன்று பேருக்கு நோய் தீவிரமாவதைத்த தடுக்கும் ரத்தம் ஏற்றும் தேவை ஏற்படும் குழந்தைகளின் எண்ணிக்கையை மூன்றில் ஒரு பங்கு குறைக்கும் என்று 2015-இல் நடத்தப்பட்ட பரிசோதனை முடிவுகள் தெரிவித்தன.
எனினும் நடைமுறையில் இது எப்படி வேலை செய்யும் என்பதில் சந்தேகம் இருந்தது. ஏனென்றால் மொத்தம் நான்கு தவணை தடுப்பு மருந்து அளிக்கப்பட வேண்டும். முதல் மூன்று தவணை தடுப்பூசி ஐந்து, ஆறு மற்றும் ஏழு மாதங்களில் வழங்கப்படுகிறது. இறுதி பூஸ்டர் 18 மாதங்களில் வழங்கப்படும்.
முன்னோட்டத் திட்டங்களில் கிடைத்த முடிவுகள் கடந்த புதன்கிழமையன்று உலக சுகாதார நிறுவன விஞ்ஞானிகள் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
23 லட்சத்துக்கும் அதிகமான டோஸ்களில் இருந்து கீழ்கண்ட முடிவுகள் கிடைத்தன.
கடுமையான மலேரியா தொற்று ஏற்பட்டவர்களில் 30% மரணங்கள் குறைய தடுப்பூசி காரணமாக இருந்தது. பாதுகாப்பானதாகவும் இருந்தது
படுக்கை வலை இல்லாத குழந்தைகளில் இந்த அளவு குழந்தைகளில் மூன்றில் இரண்டு பங்கைத் தொட்டது.
மற்ற வழக்கமான தடுப்பூசிகள், மலேரியாவைத் தடுப்பதற்கான பிற நடவடிக்கைகளில் எந்தவிதமான எதிர்மறைத் தாக்கமும் இல்லை.
தடுப்பூசி சிக்கனமானதாக இருந்தது.
“ஓர் அறிவியல் கண்ணோட்டத்தில், இது ஒரு மகத்தான முன்னேற்றம், பொது சுகாதாரக் கண்ணோட்டத்தில் இது ஒரு வரலாற்று சாதனை” என்று கூறுகிறார் உலக சுகாதார நிறுவனத்தின் மலேரியா திட்ட இயக்குநர் பெட்ரோ அலோன்சோ.
“மலேரியா தடுப்பூசியைத் தேடி 100 ஆண்டுகளுக்கும் மேலாக போராடிக் கொண்டிருக்கிறோம். இந்தத் தடுப்பூசி உயிர்களைக் காப்பாற்றும், ஆப்பிரிக்க குழந்தைகளுக்கு நோய் ஏற்படாமல் தடுக்கும்”
மலேரியாவைத் தடுப்பது ஏன் கடினம்?
கொரோனாவுக்கு ஓராண்டுக்குள்ளாகவே தடுப்பூசிகளைக் கண்டறிந்ததைப் பார்த்த நீங்கள், மலேரியாவுக்கு ஏன் இவ்வளவு காலம் ஆனது என்று நினைக்கிறீர்களா?
மலேரியா ஓர் ஒட்டுண்ணியால் ஏற்படுகிறது. இது கோவிட் நோயை ஏற்படுத்தும் வைரஸை விட கொடூரமானது. இவ்விரண்டையும் ஒப்பிடுவது ஒரு மனிதரையும் முட்டைக்கோஸையும் ஒப்பிடுவதைப் போன்றது.
மலேரியா ஒட்டுண்டு நமது நோயெதிர்ப்பு சக்தியை உடைக்கும் வகையில் பரிணாம வளர்ச்சி பெறுகிறது. அதனால்தான் பல முறை மலேரியா தொற்று ஏற்பட்ட பிறகும் குறைந்த அளவே பாதுகாப்பு கிடைக்கிறது.
கொசுக்கள், மனிதர்கள் என இரு உயிரினங்களில் தனது வாழ்க்கைச் சுழற்சியைக் கொண்டிருக்கிறது மலேரியா ஒட்டுண்ணி. கல்லீரல் செல்கள், ரத்தச் சிவப்பு அணுக்களைப் பாதிக்கும்போது நம் உடலுக்குள் கூட அது வெவ்வேறு இடைநிலை வடிவங்களில் உருமாறுகிறது.
மலேரியாவுக்கு தடுப்பூசியை உருவாக்குவது என்பது கடினத்துக்கும் சாத்தியமின்மைக்கும் இடைப்பட்டது எனலாம். ஒட்டுண்ணியின் ஒரு குறிப்பிட்ட வடிவத்தை மட்டுமே தடுப்பூசியால் குறிவைக்க முடியும்.
அதனால்தான் இந்தத் தடுப்பூசி 40% செயல்திறனை மட்டுமே கொண்டிருக்கிறது. இருப்பினும் இது குறிப்பிடத்தகுந்த வெற்றியாகும்.
மருந்து நிறுவனமான ஜிஎஸ்கே உருவாக்கியுள்ள தடுப்பூசியானது, கொசுக்களை ஒழிக்கும் பூச்சிக்கொல்லி, படுக்கை வலைகள் போன்ற மலேரியாவைக் கட்டுப்படுத்த உதவும் மற்ற அனைத்து நடவடிக்கைகளையும் மாற்றிவிடப்போவதில்லை. மலேரியாவால் இறப்புகளே இல்லை என்ற நிலையை ஏற்படுத்துவதற்கு மற்ற நடவடிக்கைகளுடன் இது இணைந்து செயல்படும்.
இது ஆப்பிரிக்காவுக்கு வெளியே பயன்படுத்தப்படாது. ஏனெனில் உலகின் பிற பகுதிகளில் தடுப்பூசியால் தடுக்க முடியாத, தீவிரமான பல்வேறு வகையான மலேரியா ஒட்டுண்ணி வகைகள் அதிகம் காணப்படுகின்றன.
தடுப்பூசியை அறிமுகப்படுத்துவது “வரலாற்று நிகழ்வு” என்று கூறுகிறார் பாத் அமைப்பின் மலேரியா திட்டத்தைச் சேர்ந்த ஆஷ்லே பிர்கெட். இது மக்களின் அச்சத்தை அகற்றும் என்கிறார் அவர்.
“முழு ஆரோக்கியமாகவும், ஆற்றலுடனும் இருக்கும் உங்கள் குழந்தை ஒரு கொசு கடித்த பிறகு ஓரிரு வாரங்களில் இறந்துவிடக்கூடும் என்பதை கற்பனை செய்து பாருங்கள்” என்று அவர் கூறினார்.
“மலேரியா ஒரு பெரிய பிரச்சனை, அது அச்சுறுத்துவதாகவும் பீதியடைச் செய்வதாகவும் இருக்கிறது.”
(நன்றி BBC TAMIL)