மைக்ரோசாஃப்ட் தனது சமூக வலைதளமான லிங்க்ட்இன் (linkedin) சேவையை சீனாவில் நிறுத்துகிறது. சீன அரசின் சட்ட திட்டங்களுக்கு இணங்குவதில் உள்ள சிரமங்களை காரணமாகக் கூறுகிறது மைக்ரோசாஃப்ட்.
சில பத்திரிகையாளர்களின் கணக்குகள் முடக்கப்பட்டது குறித்து கேள்விகளை எழுப்பிய போது இந்த விவரங்கள் கூறப்பட்டன.
லிங்க்ட்இன் வலைதளம், இந்த ஆண்டின் பிற்பகுதியில், இன் ஜாப்ஸ் என்கிற பெயரில் வேலை தேடுவதற்கென்றே வடிவமைக்கப்பட்ட பிரத்யேக தளத்தை தொடங்க உள்ளது.
இதில் சமூக பதிவுகளை அல்லது கட்டுரைகளைப் பகிரவோ, பதிவிடவோ முடியாது.
“நாங்கள் சீனாவில் மிகவும் சவாலான இயக்க சூழல் மற்றும் அதிக சட்ட திட்ட இணக்கத் தேவைகளை எதிர்கொள்கிறோம்.” என லிங்க்ட் இன் நிறுவனத்தின் மூத்த துணைத் தலைவர் மோஹக் ஷ்ராஃப் தன் வலைப்பக்கத்தில் கூறியுள்ளார்.
“இந்த ஆண்டின் பிற்பகுதியில் சீனாவில் இருக்கும் உள்ளூர்மயமாக்கப்பட்ட லிங்க்ட் இன் பதிப்பை நாங்கள் நிறுத்தப் போகிறோம். நாங்கள் சீனாவில் தொடர்ந்து எங்கள் இருப்பை நிலைநிறுத்துவோம். மேலும் இந்த ஆண்டின் பிற்பகுதியில் புதிய இன் ஜாப்ஸ் சேவையைத் தொடங்க உற்சாகமாக இருக்கிறோம்.” என அந்நிறுவனத்தின் செய்தியறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
‘அரசை திருப்திப்படுத்துவது’
சீனாவில் செயல்பட்டு வந்த ஒரே பெரிய மேற்கத்திய சமூக ஊடகமாக இருந்தது மைக்ரோசாஃப்டின் லிங்க்ட் இன்.
2014ஆம் ஆண்டு சீனாவில் லிங்க்ட் இன் தொடங்கப்பட்ட போது, சீன அரசாங்கத்தின் சட்டங்களை கடைபிடிப்பதாக ஒப்புக்கொண்டது. அதே நேரத்தில் அது நாட்டில் எவ்வாறு வணிகத்தை நடத்துகிறது என்பதையும் வெளிப்படையாக வைத்திருக்க உறுதியளித்தது. மேலும் அது அரசாங்கத்தின் கடுமையான தணிக்கைக்கு உடன்படவில்லை என்றும் கூறியது.
சமீபத்தில், லிங்க்ட் இன் நிறுவனம் மெலிசா சான் மற்றும் கிரெக் ப்ரூனோ உட்பட பல பத்திரிகையாளர்களின் கணக்குகளை அதன் சீன வலைத்தளத்திலிருந்து கருப்புப் பட்டியலில் சேர்த்தது.
திபெத்திய அகதிகளை சீனா நடத்தும் விதத்தைக் குறித்து ஆவணப்படுத்தும் ஒரு புத்தகத்தை எழுதிய ப்ருனோ, சீன கம்யூனிஸ்ட் கட்சி அதை விரும்பாததில் எனக்கு ஆச்சரியமில்லை, ஆனால், “ஓர்அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனம் வெளிநாட்டு அரசாங்கத்தின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதில் ஏமாற்றமடைந்தேன்” என ‘வெர்டிக்ட்’ என்கிற பத்திரிகையிடம் கூறினார்.
அமெரிக்க செனட்டர் ரிக் ஸ்காட் லிங்க்ட் இன் தலைமை நிர்வாகி ரியான் ரோஸ்லான்ஸ்கி மற்றும் மைக்ரோசாப்ட் தலைவர் சத்யா நாதெல்லா ஆகியோருக்கு எழுதிய கடிதத்தில், இந்த நடவடிக்கை “கம்யூனிஸ்ட் தேசமான சீனாவை திருப்திப்படுத்தும் மற்றும் அவர்களிடம் சரணடையும் செயல்” என குறிப்பிட்டுள்ளார்.
தடுமாறும் சீனாவின் இணையம்
லிங்க்ட் இன் நிறுவனத்தின் இந்த முடிவு சீனாவின் அழுத்தத்தினால் எடுக்கப்பட்டதா அல்லது அமெரிக்க தரப்பிலிருந்து வந்ததா என்பதைக் குறிப்பிடுவது கடினம். இந்த இரண்டுமே கூட காரணமாக இருக்கலாம், ஏனெனில் சீன அரசாங்கம் இணையத்தில் அதன் பிடியை இறுக்கி வருகிறது. அதே நேரத்தில் பெய்ஜிங்கின் தணிக்கை விதிகளுக்கு அந்நிறுவனம் அடிபணிந்ததற்காக அமெரிக்காவில் கடும் விமர்சனங்களை எதிர்கொண்டுள்ளது.
சீனாவின் மிகப்பெரிய சந்தையில் தன் வியாபாரத்தை நிலை நிறுத்த, லிங்க்ட்இன் 2014 ஆம் ஆண்டில் அதன் சீனப் பதிப்பை அறிமுகப்படுத்தியது.
ஏழு ஆண்டுகளில் லிங்க்ட் இன் உள்ளூர் போட்டியாளர்களுக்கு எதிராக போராடியது, சில ஒழுங்குமுறை சார் பிரச்சனைகளிலும் சிக்கியது. மார்ச் மாதத்தில், அரசியல் உள்ளடக்கத்தை தணிக்கை செய்ய தவறியதற்காக, லிங்க்ட் இன் சீன கட்டுப்பாட்டாளர்களால் தண்டிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
அதன் விளைவாக 30 நாட்களுக்கு புதிய பயனர் பதிவு நிறுத்தப்பட்டது. தணிக்கை மீதான சர்ச்சை தவிர, இத்தளத்தை சீன உளவுத்துறை நிறுவனங்கள் ஆட்சேர்ப்பு கருவியாகப் பயன்படுத்தின.
சீனாவின் லிங்க்ட் இன் பயனர்களுக்கு சீனா டுடேவில், அந்நாட்டின் (லிங்க்ட் இன்) தலைவர் லு ஜியான் எழுதிய கடிதத்தில், இந்த தளம் “உலகளாவிய வணிக வாய்ப்புகளை இணைக்கும்” என்று உறுதியளித்தார்.
ஆனால் சீனாவில் லிங்க்ட் இன் தன் சேவையை நிறுத்துவது எதிர் போக்கைக் காட்டுவதாக இருக்கிறது. சீன நாட்டில் பெரிதும் கட்டுப்படுத்தப்பட்ட இணையம், மேலும் உலகின் பிற பகுதிகளிலிருந்து விலகிச் செல்கிறது. சீனாவில் செயல்படும் உலகளாவிய வணிக நிறுவனங்களுக்கு இந்த ஆழமான பிளவை குறைக்க அதிகம் சிரமப்பட வேண்டி உள்ளது.
(நன்றி BBC TAMIL)