உலகம் முழுக்க, மக்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் மற்றும் வியாபாரிகள் காபி முதல் நிலக்கரி வரை பல பொருட்களின் பற்றாக்குறையை எதிர்கொள்கின்றனர்.
இந்த நெருக்கடிக்கு கொரோனா பெருந்தொற்றால் ஏற்பட்ட இடையூறுகள் மீதே பெரும்பாலும் குற்றம் சாட்டப்படுகிறது, இருப்பினும் எதார்த்தத்தில் பொருட்கள் பற்றாக்குறைக்கு பல காரணிகள் உள்ளன. இந்த பற்றாக்குறைகள் தொடர்பான விளைவுகள் பல வழிகளில் உணரப்படுகின்றன.
சீனா: நிலக்கரி மற்றும் காகிதம்
மின்சார பற்றாக்குறை, காகிதம், உணவு, ஜவுளி, பொம்மைகள் தயாரிப்பு முதல் ஐபோன் சிப்கள் வரை அனைத்தையும் பாதிக்கிறது என ஆக்ஸ்போர்டு இன்ஸ்டிட்டியூட் ஃபார் எனர்ஜி ஸ்டடீஸின் முனைவர் மைக்கெல் மெய்டன் கூறுகிறார்.
சீனாவில் 20க்கும் மேற்பட்ட மாகாணங்கள் மின்வெட்டு பிரச்சனையை எதிர்கொண்டு வருகின்றன. சீனாவின் மின்சார உற்பத்தியில் பாதிக்கு மேல் நிலக்கரியிலிருந்து வருகிறது. உலகளவில் நிலக்கரியின் விலை உயர்ந்துள்ளது.
சீனாவில் கடுமையான விலை கட்டுப்பாடு இருப்பதால், இந்த விலை ஏற்றத்தை வாடிக்கையாளர்கள் மீது சுமத்த முடியாது, எனவே ஆற்றல் நிறுவனங்கள் வெளியீட்டை குறைத்து வருகின்றன.
சுரங்கங்களில் புதிய பாதுகாப்பு சோதனைகள், கடுமையான சுற்றுச்சூழல் விதிமுறைகள், சமீபத்திய வெள்ளம் போன்றவைகளால் நிலக்கரி உற்பத்தியும் பாதிக்கப்பட்டுள்ளது.
சீன பொருட்களுக்கான தேவை அதிகரித்தாலும், தொழிற்சாலைகளின் எரிசக்தி பயன்பாட்டைக் குறைக்குமாறு அல்லது சில நாட்களுக்கு தொழிற்சாலைகளை மூடுமாறும் கோரப்பட்டுள்ளன.
அமெரிக்கா: பொம்மைகள் மற்றும் கழிப்பறை காகிதம்
கிறிஸ்துமஸ் பண்டிகை சமயத்தில், “மக்கள் சில பொருட்களைப் பெற முடியாத சூழல் நிலவலாம்” என வெள்ளை மாளிகையைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் எச்சரித்துள்ளார்.
கழிப்பறை காகிதங்கள், குடிநீர் பாட்டில்கள், புதிய ஆடைகள், செல்லப்பிராணிகளுக்கான உணவு… போன்றவைகளின் கையிருப்புகள் பாதிக்கப்படும்.
அமெரிக்க துறைமுகங்களில் சரக்கு போக்குவரத்தில் இருக்கும் சிரமம் பிரச்சனையின் ஒரு பகுதி. அமெரிக்காவுக்குள் நுழையும் 10 கப்பல்களில் 4 கப்பல்கள், இரண்டு துறைமுகங்கள் வழியாகத் தான் வருகின்றன. லாஸ் ஏஞ்சல்ஸ் மற்றும் லாங் பீச் தான் அந்த துறைமுகங்கள்.
செப்டம்பர் மாதத்தில் ஒரு நாளில், லாஸ் ஏஞ்சல்ஸ் துறைமுகத்துக்கு வெளியே 73 கப்பல்கள் வரிசையில் நிற்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இரண்டு துறைமுகங்களும் காத்திருப்பு அழுத்தங்களைக் குறைக்க வாரத்தின் ஏழு நாட்களும் 24 மணி நேரமும் செயல்பாட்டு வருகின்றன.
மற்ற நாடுகளில் கொரோனா தொடர்பான பிரச்சனைகளால் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. உதாரணமாக, அமெரிக்க விளையாட்டு பொருட்கள் மற்றும் ஆடை நிறுவனமான நைக்கின் பல பொருட்கள் வியட்நாமில் தயாரிக்கப்படுகின்றன. தற்போது அங்கு தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன.
பொருட்கள் உற்பத்தி செய்யப்பட்டாலும் கூட, அவற்றை சில்லறை வியாபாரிகளிடம் கொண்டு சேர்ப்பது மிகவும் கடினமாகிவிட்டது என ஹார்வர்ட் வியாபார பள்ளியின் பேராசிரியர் வில்லி ஷி கூறுகிறார்.
இந்தியா: கார்கள் மற்றும் கணினி சிப்கள்
இந்தியாவின் மிகப்பெரிய கார் உற்பத்தியாளரான மாருதி சுசுகியின், உற்பத்தி வீழ்ச்சியடைந்துள்ளது, அதற்கு உலகளாவிய கணினி சிப்களின் பற்றாக்குறை காரணமாகக் கூறப்படுகிறது.
ஜப்பான் மற்றும் தென் கொரியா போன்ற நாடுகளில் ஏற்பட்ட பெருந்தொற்று தொடர்பான இடையூறு காரணமாக பற்றாக்குறை ஏற்படுகிறது.
உலக அளவில் 5ஜி தொழில்நுட்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டதால், பெருந்தொற்றுக்கு முந்தைய காலத்திலேயே தொலைபேசிகள் மற்றும் கணினி சிப்களுக்கு உலகளவில் தேவை அதிகரித்து வந்தது. வீட்டிலிருந்தே வேலை செய்யும் சூழல் ஏற்பட்டதால் மடிக்கணினிகள், வெப்கேம்களின் தேவை அதிகரிப்புக்கு வழிவகுத்தது.
இந்தியாவிற்குள் வரும் உதிரிபாகங்கள் மற்றும் பொருட்கள் பற்றாக்குறையை, நாட்டின் சொந்த எரிசக்தி சீர்குலைவு மோசமாக்கியது.
நாட்டின் நிலக்கரி கையிருப்பு மோசமாக குறைந்து வருகிறது. இந்தியாவின் கொரோனா இரண்டாவது அலைக்குப் பிறகு பொருளாதாரம் மீண்டெழத் தொடங்கிவிட்டது. அது ஆற்றல் தேவை அதிகரிப்புக்கு வழிவகுத்துள்ளது. மறுபுறம், உலகளவில் நிலக்கரியின் விலை அதிகரித்துள்ளது மற்றும் இந்தியாவின் நிலக்கரி இறக்குமதி குறைந்துள்ளது.
நிலக்கரியின் தாக்கம் பரவலாக இருப்பதாக கோல் இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் சோஹ்ரா சட்டர்ஜி கூறினார்.
“நிலக்கரி பற்றாக்குறை ஏற்பட்டால் ஒட்டுமொத்த உற்பத்தித் துறையும் (சிமெண்ட், எஃகு, கட்டுமானம்) பாதிக்கப்படும்.”
பிரேசில்: காஃபி மற்றும் தண்ணீர்
கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டு காலத்தில் இல்லாத அளவுக்கு ஏற்பட்ட வறட்சி பிரேசிலின் காஃபி அறுவடை சரிவுக்கு முக்கிய காரணம் எனலாம்.
அது போக உறைபனி மற்றும் இயற்கையான அறுவடை சுழற்சி மாற்றம் இணைந்து, காஃபி உற்பத்தியின் கணிசமான வீழ்ச்சிக்கு வழிவகுத்துள்ளது.
அது போக, கப்பல் போக்குவரத்து செலவுகள் அதிகரிப்பு மற்றும் கொள்கலன்களின் பற்றாக்குறை காஃபி உற்பத்தியாளர்களின் சவால்கள் அதிகரித்துள்ளன.
காபி விவசாயிகளின் செலவுகள் உலகெங்கிலும் உள்ள கஃபேக்களிடமிருந்து வசூலிக்கப்படும், காரணம் பிரேசில் தான் காபியின் மிகப்பெரிய உற்பத்தியாளர் மற்றும் ஏற்றுமதியாளர்.
நாட்டின் பெரும்பாலான மின்சாரம் நீர்த்தேக்கங்களைப் பயன்படுத்தி உற்பத்தி செய்யப்படும் நீர் மின்சக்தியிலிருந்து வருவதால், தண்ணீர் பற்றாக்குறை நாட்டின் மின்சார விநியோகத்தில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
நைஜீரியா: சமையல் எரிவாயு
சமையலுக்குப் பயன்படுத்தப்படும் திரவ இயற்கை எரிவாயுவான எல்என்ஜி பற்றாக்குறையை நைஜீரியா எதிர்கொண்டு வருகிறது.
ஆப்பிரிக்காவிலேயே அந்நாட்டில் தான் மிகப்பெரிய இயற்கை எரிவாயு இருப்பு உள்ளது குறிப்பிடத்தக்கது.
எல்என்ஜியின் விலை ஏப்ரல் மற்றும் ஜூலை மாதங்களுக்கு இடையில் கிட்டத்தட்ட 60 சதவீதம் உயர்ந்துள்ளது, இது பல நைஜீரியர்கள் வாங்க முடியாத அளவுக்கு விலை அதிகரித்துவிட்டது.
இதன் விளைவாக, வீடுகள் மற்றும் வியாபாரிகள் சமைக்க நிலக்கரி அல்லது விறகுக்கு மாறினர்.
உலகளவில் விநியோகப் பற்றாக்குறை ஏற்பட்டது இந்த விலை உயர்வுக்கு ஒரு முக்கிய காரணம் – நாடு இன்னும் இறக்குமதி செய்யப்பட்ட எல்என்ஜியையே நம்பியுள்ளது.
லெபனான்: தண்ணீர் மற்றும் மருந்துகள்
லெபனானில் தண்ணீர், மருந்துகள்,எரிபொருள் பற்றாக்குறை உள்ளன.
கடந்த 18 மாதங்களாக, லெபனான் பொருளாதார நெருக்கடியைச் எதிர்கொண்டு வருகிறது. அந்நெருக்கடி, அந்நாட்டின் 75 சதவீத மக்களை வறுமையில் தள்ளியது. மேலும் பொருளாதார நெருக்கடி அதன் நாணயத்தை முடக்கியது, அரசாங்கத்துக்கு லெபனானின் அரசியல் அமைப்புக்கும் எதிராக பெரும் ஆர்ப்பாட்டங்களைத் தூண்டியது.
கொரோனா பெருந்தொற்றுக்கு முன்பே நாட்டின் பொருளாதாரம் சிக்கல்களைச் சந்தித்தது. கொரோனா பொருளாதார நெருக்கடியை மேலும் மோசமாக்கியுள்ளது.
எரிபொருள் பற்றாக்குறையால் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுகிறது, பண வசதி படைத்த வணிகங்கள் மற்றும் குடும்பங்கள் விலை உயர்ந்த தனியார் மின்சார டீசல் ஜெனரேட்டர்களை வாங்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
“எரிபொருள் நெருக்கடியால் லெபனானில் மில்லியன் கணக்கிலான மக்களுக்கு சுகாதாரப் பாதுகாப்பு, நீர் விநியோகப் பிரச்சனை ஏற்படுவது குறித்து மிகவும் கவலைப்படுவதாக” கடந்த ஆகஸ்ட் மாதத்தில், லெபனானுக்கான ஐ.நா மனிதநேய ஒருங்கிணைப்பாளர் நஜத் ரோச்சடி கூறினார்.
(நன்றி BBC TAMIL)