இஸ்ரேலிய பாதுகாப்பு படை – பாலஸ்தீன போராட்டக்காரர்கள் இடையே மோதல்

ஜெருசலேம்,

இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்திற்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் நிலவி வருகிறது. பாலஸ்தீனத்தின் தன்னாட்சி பெற்ற பகுதியாக காசாமுனை பகுதி உள்ளது. இந்த காசா முனை பகுதியை ஹமாஸ் என்ற அமைப்பு ஆட்சி செய்து வருகிறது. இந்த அமைப்பை இஸ்ரேல் பயங்கரவாத இயக்கமாக கருதுகிறது.

இந்த காசாமுனை பகுதியில் இருந்து இஸ்ரேல் நாட்டின் மீது ஹமாஸ் அமைப்பினர் அவ்வப்போது ராக்கெட் மற்றும் ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்துவது வழக்கம். ஹமாஸ் அமைப்பினரின் இந்த தாக்குதலுக்கு இஸ்ரேல் ராணுவமும் தக்கபதிலடி கொடுத்து வருகிறது. அதேபோல், காசா முனையில் இஸ்ரேலிய படையினருக்கும், பாலஸ்தீனர்களுக்கும் இடையே அவ்வப்போது மோதல் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இஸ்ரேலின் ஜெருசலேமில் உள்ள டமாஸ்கஸ் நுழைவு வாயில் பகுதியில் நேற்று திரண்ட பாலஸ்தீனர்கள் இஸ்ரேலிய பாதுகாப்பு படையினர் மீதும் பஸ் மீதும் கற்கலை வீசி தாக்குதல் நடத்தினர். இதனை தொடர்ந்து இஸ்ரேலிய பாதுகாப்பு படையினருக்கும், பாலஸ்தீன போராட்டக்காரர்களும் இடையே மோதல் வெடித்தது.

மோதலை கட்டுப்படுத்தும் விதமாக கண்ணீர்புகைகுண்டுகளை வீசி பாலஸ்தீன போராட்டக்காரர்களை இஸ்ரேலிய பாதுகாப்பு படையினர் விரட்டியடித்தனர். இந்த மோதலில் 17 பேர் காயமடைந்தனர். இந்த வன்முறை சம்பவம் தொடர்பாக 22 பேரை இஸ்ரேலிய பாதுகாப்பு படையினர் கைது செய்தனர்.

(நன்றி Dailythanthi)