காபூல்,
ஆப்கானிஸ்தானில் தலீபான் பயங்கரவாதிகளின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இதற்கிடையில், ஆப்கானிஸ்தானில் முந்தைய ஆட்சி நடைபெற்ற போது தலீபான்கள் தற்கொலைப்படை தாக்குதலை ஒரு ஆயுதமாக பயன்படுத்தி வந்தனர்.
முந்தை ஆட்சியில் ஆப்கானிஸ்தான் அரசுப்படையினர் மற்றும் அமெரிக்க படையினரை குறிவைத்து தலீபான்கள் தற்கொலைப்படை தாக்குதல்களை நடத்தி வந்தனர். இந்த தற்கொலைப்படை தாக்குதல்களில் பொதுமக்கள் மற்றும் ராணுவ வீரர்கள் என ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். அதேவேளை தற்போது தலீபான்களின் ஆட்சிக்கு எதிராக ஐ.எஸ். பயங்கரவாதிகள் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், ஆப்கானிஸ்தான் அரசுப்படைகள் மற்றும் அமெரிக்க படையினருக்கு எதிராக தற்கொலைப்படை தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளின் குடும்பத்தினருக்கு நிலம் மற்றும் பணம் வழங்கப்படும் என்று தலீபான்கள் உறுதியளித்துள்ளனர். மேலும், தற்கொலைப்படை தாக்குதல் நடத்தியவர்களை தியாகிகள் என ஆப்கானிஸ்தான் தலீபான்கள் அரசின் உள்துறை மந்திரி சிராஜிதுன் ஹக்னி கூறியதாக உள்துறை மந்திரியின் செய்தித்தொடர்பாளர் சையது கோஷ்லி தெரிவித்துள்ளார்.
காபூலில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் தற்கொலைப்படை தாக்குதலில் ஈடுபட்டு உயிரிழந்த பயங்கரவாதிகளின் குடும்பத்திற்கு உள்துறை மந்திரி சிராஜிதுன் ஹக்னி பணம், நிலம் வழங்கினார்.
(நன்றி Dailythanthi)