10,000 மருத்துவர்களுக்கு நிரந்தரப் பணியிடங்களை வழங்குவதற்குப் பதிலாக, ஒப்பந்தங்களை நீட்டிக்கும் அரசாங்கத்தின் நடவடிக்கையை ஹர்த்தால் டாக்டர் கான்ட்ராக்
(எச்.டி.கே.) இயக்கம் விமர்சித்தது.
கடந்த ஜூலை மாதம், நாடு தழுவிய அளவில் நடைபெற்ற ஒப்பந்த மருத்துவர் போராட்டங்களுக்குப் பின்னால் உள்ள அந்த இயக்கம், 2020 பட்ஜெட்டில் உள்ள முன்மொழிவு, ஓர் ஒத்திவைக்கும் தந்திரம் என்று விவரித்ததோடு, அது பிரச்சினைக்குத் தீர்வு கொடுக்காது என்றது.
“இது இன்னும் இரண்டு ஆண்டுகளுக்குத் தீர்வை ஒத்திவைக்கிறது. வேறு யாராவது அதைப் பின்னர் சமாளிக்கட்டும் எனும் நோக்கம் போலும்,” என்று எச்டிகே கீச்சகத்தில் கூறியது.
2020-ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை, நேற்று தாக்கல் செய்த நிதியமைச்சர் தெங்கு ஜஃப்ருல் அப்துல் அஜீஸ், 10,000-க்கும் மேற்பட்ட மருத்துவர்கள், பல் மருத்துவர்கள் மற்றும் மருந்தாளுநர்களின் ஒப்பந்தங்களை மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு நீட்டிக்க அரசாங்கம் ஒப்புக்கொண்டதாக அறிவித்தார்.
இந்த நடவடிக்கையானது, அரசாங்கம் நிரந்தர பதவிகளை வழங்க வேண்டும், வேலை பாதுகாப்பு மற்றும் அவர்களின் வாழ்க்கையில் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகளை வழங்க வேண்டும் எனும் எச்.டி.கே-யின் முந்தைய வலியுறுத்தலுக்கு முரணானது என்று அவர்கள் கூறியுள்ளனர்.
மலேசியாகினி தொடர்பு கொண்டபோது, எச்டிகே செய்தித் தொடர்பாளர் டாக்டர் முஸ்தபா கமால் அஜீஸ், இந்த அறிவிப்பு குறித்து தனது ஏமாற்றத்தை வெளிப்படுத்தினார்.
“நான் கருத்து தெரிவிக்க எதுவும் இல்லை. அரசாங்கம் இந்தச் சுகாதாரப் பிரச்சினையை முக்கியமானதாகப் பார்க்கவில்லை,” என்று அவர் கூறினார்.
ஒப்பந்தத்தை நீட்டிப்பது குறித்தும் அவர் கேள்வி எழுப்பினார்.
“நாடாளுமன்றத்தில் (சுகாதார அமைச்சர்) கைரி ஜமாலுதீன் வழங்கிய புள்ளிவிவரங்களின் அடிப்படையில், நாடு முழுவதும் மொத்தம் 22,077 மருத்துவ அதிகாரிகள் உள்ளனர்.
“அப்படியானால் அவர்கள் 10,000 பேருக்கு மட்டுமே (நீட்டிப்பு) கொடுத்தால், மற்ற 12,000 பேரை எங்கே தூக்கி எறிவது?
“அரசாங்கம் ஒரு கொள்கையை வகுக்கத் தவறியதே, எம்மை இந்த நிலைக்கு தள்ளியுள்ளது,” என அவர் மேலும் கூறினார்.
மலேசியாவின் முன்னணி மருத்துவச் சங்கமான மலேசிய மருத்துவச் சங்கமும் (எம்ஏஏ) இந்த அறிவிப்பை வரவேற்கவில்லை.
எம்ஏஏ தலைவர் டாக்டர் கோ கார் சாய், மருத்துவ அதிகாரிகளின் ஒப்பந்தத்தை ஏழு முதல் 10 ஆண்டுகள் வரை நீட்டிக்குமாறு தனது தரப்பு அரசாங்கத்திடம் கேட்டுள்ளது என்றார்.
“இருப்பினும், மருத்துவ அதிகாரிகளுக்கு அவர்களின் நிபுணத்துவத்தைத் தொடர வாய்ப்பளிக்க இரண்டு முதல் நான்கு ஆண்டுகள் வரை நீட்டிப்பு வழங்கப்படுகிறது.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்த விவகாரம் தொடர்பாக எம்ஏஏ அரசுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தப்படும்,” என்றார்.
இருப்பினும், எம்ஏஏ நேற்று வெளியிடப்பட்ட மற்றொரு அரசாங்க அறிவிப்பை வரவேற்றது, அதாவது சிறப்புப் படிப்புகளுக்கு நிதியளிப்பதற்காக RM100 மில்லியன் ஒதுக்கீடு, இது சுமார் 3,000 ஒப்பந்த மருத்துவர்கள் மற்றும் பல் மருத்துவர்களுக்குப் பயனளிக்கும்.
கடந்த ஜூலை மாதம், அவர்களில் ஒரு குழுவினர் நாடு தழுவிய நிலையில் போராட்டம் நடத்தியதை அடுத்து, ஒப்பந்த டாக்டர்கள் விவகாரம் வெளிச்சத்துக்கு வந்தது.
ஒப்பந்த மருத்துவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளில், அவர்கள் சிறப்பு மருத்துவர்களாக மாறுவதற்கு உள்ளூர் பல்கலைக்கழகங்களின் முதுகலை உதவித்தொகைக்கு தகுதியற்றவர்கள் என்பதும் ஒன்றாகும்.
ஐந்தாண்டு ஒப்பந்தம் முடிவடைந்த பிறகு, அவர்கள் நிரந்தர ஊழியர்களாக உள்வாங்கப்படுவார்கள் என்ற உத்தரவாதமும் தற்போது இல்லை.