பாலியல் குற்றங்களைக் கையாள்வதில் பாலியல், பெண்கள் மற்றும் குழந்தைகள் குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு (D11) அதிகாரம் அளிப்பதற்கான ஒதுக்கீடுகளை அதிகரிப்பதற்கான அரசாங்கத்தின் நடவடிக்கையை டிஏபி மகளிர் பிரிவு பாராட்டியது.
இன்று ஓர் அறிக்கையில், டிஏபி மகளிர் தலைவர் சோங் எங், பாலின அடிப்படையிலான வன்முறையில் பலவீனமான சட்ட அமலாக்கத்திற்குப் போதிய ஊழியர்களின் எண்ணிக்கை பெரும்பாலும் முக்கியக் காரணமாகக் குறிப்பிடப்படுகிறது என்றார்.
குடும்ப வன்முறை மற்றும் பாலுறவு வழக்குகளைக் கையாள்வதற்காக, தங்குமிடங்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது மற்றும் குடும்ப நீதிமன்றங்களை அமைப்பது போன்ற வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவு வழங்கப்படுவதை உறுதி செய்யுமாறு சோங் அரசாங்கத்தை வலியுறுத்தினார்.
“காவல்துறைக்கான ஒதுக்கீட்டை அதிகரிப்பது மற்றும் கூடுதல் மனித வளத்தை உருவாக்குவது என்பதோடு மட்டும் அரசாங்கம் நின்றுவிட முடியாது; பாலின அடிப்படையிலான வன்முறை மற்றும் அதன் காரணங்களையும் கையாள வேண்டும்.
“பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் உதவிகளைத் தயவுசெய்து கவனிக்க தவறாதீர்கள்,” என்று சோங் கூறினார்.
2022 பட்ஜெட்டில், D11 அணிக்காக அரசாங்கம் RM13 மில்லியனைக் கூடுதலாக ஒதுக்கி 100 புதிய பதவிகளை உருவாக்கியுள்ளது.
இதற்கிடையில், அடுத்த ஆண்டு செப்டம்பர் 1-ஆம் தேதிக்குள், அனைத்து பொது பட்டியலிடப்பட்ட நிறுவனங்களும் குறைந்தபட்சம் ஒரு பெண் இயக்குநரையாவது நியமிக்க வேண்டும் என்ற அரசாங்கத்தின் நடவடிக்கையையும் சோங் பாராட்டினார்.
இருப்பினும், 30 விழுக்காடு பெண்களை வாரியத்தில் நியமிப்பதை அரசு கட்டாயமாக்கினால் நன்றாக இருக்கும் என்றார்.
இந்த இரண்டு நடவடிக்கைகளும், ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையே பாலின சமத்துவத்தை அடைவதற்கான முயற்சிகள் என்று சோங் கூறினார்.
சோங் சமூக மேம்பாடு மற்றும் முஸ்லீம் அல்லாத மத விவகாரங்களுக்குப் பொறுப்பான பினாங்கு ஆட்சிக்குழு உறுப்பினரும் பாடாங் லாலாங் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார்.