32 வித உருமாற்றம் அடையக்கூடிய புதிய வகை கொரோனா வைரஸ் கண்டுபிடிப்பு!
இந்த புது வகை கொரோனா வைரஸ் இதுவரை இல்லாத அளவுக்கு பயங்கரமானதாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
லண்டன், ஐரோப்பா மற்றும் மத்திய ஆசிய பகுதிகளில் கொரோனா மீண்டும் வேகமெடுக்க தொடங்கி உள்ளது. நாளொன்றுக்கு சுமார் 4,200 பேர் வரை கொரோனாவால் உயிரிழந்து வருகின்றனர். இது கடந்த செப்டம்பர் இறுதி நிலையை ஒப்பிடுகையில் இது இருமடங்கு ஆகும்.
இந்த நிலையில், புதிய வகையில் உருமாறுதல் அடைந்த கொரோனா வைரசை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். லண்டன் இம்பீரியல் கல்லூரியின் ஆராய்ச்சியில் 32 வித உருமாற்றம் அடையக்கூடிய பி.1.1.529 வகை கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த புது வகை கொரோனா வைரஸ் இதுவரை இல்லாத அளவுக்கு பயங்கரமானதாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மனித உடலில் இருக்கும் நோய் எதிர்ப்பு சக்தியை அழித்து முன்னேறக் கூடிய திறன் இந்த புது வகை வைரசுக்கு உள்ளது.இதன் காரணமாக, அடுத்தடுத்த கொரோனா அலைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
பி.1.1.529 வகை கொரோனா வைரஸ் 32 விதமான உருமாற்றங்களை அடையும் திறன் கொண்டது. இதன் காரணமாக, மனித உடலில் உள்ள நோய் எதிர்ப்பு செல்கள் நோய்க்கிருமியைத் தாக்குவது கடினம்.
ஆனால், சற்று ஆறுதலான விஷயம் என்னவென்றால், இந்த புதிய உருமாற்றம் அடைந்த வைரஸ், முந்தைய வைரசுகளை போல எளிதில் பரவாது என்று லண்டன் இம்பீரியல் கல்லூரியில் வைரஸ் பிரிவின் ஆராய்ச்சியாளரான டாக்டர் டாம் பீகாக் தெரிவித்துள்ளார்.
இந்த புதிய வகை கொரோனா வைரஸ் போட்ஸ்வானாவில் இம்மாதம் 11ம் தேதி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அங்கு 3 பேருக்கு இந்த புதிய வகை வைரஸ் தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது.மேலும், தென் ஆப்பிரிக்காவில் ஆறு பேருக்கும், ஹாங்காங்கில் தென் ஆப்பிரிக்காவிலிருந்து சென்ற ஒருவருக்கும் பரவி உள்ளது குறிப்பிடத்தக்கது.
dailythanthi