இசி வாதத்தில் பல குறைபாடுகள்

 – ஜோன் ஆர் மெல்லட்

 கடந்த இரு மாதங்களாக தேர்தல் சீர்திருத்தம் தொடர்பில் மலேசியாவில் அறிவார்ந்த வாதம் நிறையவே நடைபெற்று வருகிறது. சீர்திருத்தம் கோருவோர் சிந்தனைக்குரிய கருத்துகளை முன்வைப்பதையும் அரசாங்கம் மாற்றுக் கருத்துகளை எடுத்துரைப்பதையும் பார்க்கிறோம்.

இக் கட்டுரையின் முதல் பகுதியில், அப்படி முன்வைக்கப்பட்ட கருத்துகள் சிலவற்றைப் பார்வையிடவும் மலேசியாவின் தேர்தல் நடைமுறையை மற்ற நாடுகளின் நிலைமையுடன் ஒப்பிடவும் விரும்புகிறேன்.

வாக்களிக்கும் வயதைக் குறைத்தல்

மலேசியாவில் வாக்களிக்கும் வயது 21. மற்ற நாடுகளில் அப்படி இல்லை.

உலகின் 240 நாடுகளிலும் பிரதேசங்களிலும் வாக்களிக்கும் வயது 18 என்று கூறுகிறது விக்கிபீடியா. 12 நாடுகளில் மட்டும்தான் 21-வயதில் வாக்களிக்க முடியும் என்ற நிலை. அந்த 12-இல் ஒன்று மலேசியா.

மலேசியாவின் அண்டைநாடுகளைப் பார்ப்போம். ஆஸ்திரேலியா, வங்காள தேசம், புருணை, பர்மா, கம்போடியா, சீனா, ஹாங்காங், இந்தியா, லாவோஸ், மாலைத்தீவு, மங்கோலியா, நேப்பாளம், சியு சிலாந்து, பாகிஸ்தான், பாப்புவா நியு கினி, பிலிப்பீன்ஸ், ஸ்ரீலங்கா, தாய்லாந்து, வியட்நாம் ஆகியவற்றில் 18 வயதானவர்கள் வாக்களிக்கலாம். 

இந்தோனேசியாவிலும் கிழக்கு தீமோரிலும் 17 வயதில் வாக்களிக்கலாம், தென் கொரியாவில் 19; ஜப்பானிலும் தைவானிலும் 20. ஆசியா என்று பார்த்தால் சிங்கப்பூருடன் சேர்த்து மலேசியா மட்டுமே 21 வயதை வாக்களிக்கும் வயதாகக் கொண்டுள்ளது.

காமன்வெல்தில் உள்ள மற்ற நாடுகளை-பிரிட்டிஷ் செல்வாக்கு ஆழமாக வேரூன்றிய நாடுகளைப் பார்ப்போம்.

ஆஸ்திரேலியா, வங்காள தேசம், பெர்மூடா, கெனடா, கானா, இந்தியா, ஜெமைக்கா, நியு சிலாந்து, பாகிஸ்தான், ஸ்ரீ லங்கா, தான்சானியா, உகாண்டா, பிரிட்டன், சிம்பாப்வே ஆகியவற்றில் எல்லாம் வாக்களிக்கும் வயது 18.

மலேசியாவில் 18 வயதாகும் ஒருவர் சட்டப்படி திருமணம் செய்துகொள்ளலாம், ஒப்பந்தங்களில் கையெழுத்திடலாம், மது வாங்கலாம், சிகரெட் வாங்கலாம். 16 வயதில் பள்ளியிலிருந்து விலகி வேலை செய்யலாம். 17-வது வயதில் வாகனமோட்டலாம்.

ஆனால், 21 வயதாகும்வரை வாக்களிக்க முடியாது. ஏன் இதில் மட்டும் இப்படி?

ஆக, வாக்களிக்கும் வயதை வரையறுப்பதில் மலேசியா உலகின் மற்ற நாடுகளுடன் ஒத்துப்போகவில்லை. திருமணத்துக்கும் வேலை செய்வதற்கும் இங்கு நிர்ணயிக்கப்பட்டிருக்கும் வயது வரம்பு வாக்களிக்கும் வயதுடன் முரண்படுகிறது.

தேர்தல் பரப்புரைக் காலத்தை நீட்டித்தல்

பெர்சே 2.0 தேர்தல் பரப்புரைக் காலத்தை 21 நாள்களாக நீட்டிக்க வேண்டும் என்று முன்மொழிந்துள்ளது. ஆனால் தேர்தல் ஆணையம் (இசி) இதை எதிர்க்கிறது. மலேசியா போன்ற நாட்டுக்கும் அதன் தொழில்நுட்ப வசதிக்கும் குறைந்த காலமே போதுமானது என்கிறார் இசி துணைத் தலைவர் வான் அஹ்மட் வான் ஒமார்.

ஆனால், தேர்தல் சீர்திருத்தத்துக்குப் போராடுவோர்,  தேர்தல் பரப்புரை முன்பு 21 நாள்களைத் தாண்டியும் நடந்திருப்பதைச் சுட்டிக்காட்டுகின்றனர்.

பரப்புரைக் காலம் குறைந்திருப்பதற்கு வான் அஹ்மட் கூறும் காரணங்களையும் மற்ற காமன்வெல்த் நாடுகளின் நிலவரத்தையும் கண்ணோட்டமிடுவோம்.

ஆஸ்திரேலியாவில் 2010-இல் தேர்தல் அறிவிப்பு ஜூலை 17-ல் செய்யப்பட்டது, வாக்களிப்பு ஐந்து வாரங்களுக்குப் பின்னர் ஆகஸ்ட் 21-இல் நடந்தது.

வான் அஹ்மட் கூறுவதன் அடிப்படையில் பார்த்தோமானால், ஆஸ்திரேலியா ஒரு பெரிய நாடு அதனால் தேர்தல் பரப்புரைக்குக் கூடுதல் காலம் ஒதுக்குவது அவசிமாகலாம். அதனால் சற்றுச் சிறிய நாடுகளின் நிலவரத்தைப் பார்ப்போம்.

பிரிட்டனில் எப்ரல் 12-இல் தேர்தல் அறிவிக்கப்பட்டு மே 6-இல் வாக்களிப்பு நடந்தது. பரப்புரைக்கு ஒதுக்கப்பட்ட நாள்கள் 24.

நியு சிலாந்தில் பிப்ரவரி 2-இல் தேர்தல் அறிவிப்பு வந்தது. ஆனால் அங்கு வாக்களிப்பு நவம்பர் 26-இல்- பத்து மாதங்கள் கழித்துத்தான் நடக்கப்போகிறது.

சரி அவற்றையெல்லாம் விட்டு சிங்கப்பூருக்கு வருவோம். 582 சதுர கிலோமீட்டர் பரப்பளவு- மலேசியாவின் பரப்பளவில் 0.2 விழுக்காடு-  கொண்ட சிங்கப்பூரில் ஏப்ரல் 19-இல் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு மே 7-இல், 20 நாள்களுக்குப் பிறகு, தேர்தல் நடைபெற்றது. 

எனவே, வான் அஹ்மட், தேர்தல் பரப்புரைக் காலம் நாடுகளின் அளவைப் பொருத்தது என்று முன்வைக்கும் வாதத்தில் பொருளில்லை.

மலேசியா, இந்தியாவைவிடவும் ஆஸ்திரேலியாவைவிடவும் அளவில் சிறியதாக இருக்கலாம். ஆனால், அது கிழக்கிலும் மேற்கிலும் இரு பகுதிகளாக பிரிந்து கிடக்கிறது. கோலாலம்பூருக்கும் கோட்டா கினாபாலுவுக்குமிடையில் பறக்கும் தூரம் 1,624 கிலோமீட்டர்.

இது, மும்பாய்க்கும் கல்கத்தாவுக்குமிடையிலான தூரத்தைவிட 42 கிலோமீட்டரும் புதுடில்லி-சென்னை தூரத்தைவிட 123 கிலோமீட்டரும் மட்டுமே குறைவு. எனவே பரந்துபட்டுக் கிடக்கும் நாட்டில் பரப்புரைக்கு ஒதுக்கப்படும் காலமும் முக்கியமாகும் என்பது இதிலிருந்து பெறப்படும்.

அழியா அடையாள மை

தேர்தலில் மோசடி நிகழ்வதைத் தடுக்க அழியாத அடையாள மை பயன்படுத்த வேண்டும் என்பது பெர்சே 2.0-இன் கோரிக்கை. இதை எதிர்க்கும் வான் அஹ்மட் அதை எதிர்ப்பதற்கு பல காரணங்களை முன்வைத்தார்.

இதற்கு அரசமைப்பைத் திருத்த வேண்டியிருக்கும் என்கிறார். ஏனென்றால்,  ஒரு வாக்காளருக்கு உள்ள வாக்களிக்கும் உரிமையை அரசாங்கத்தால் மறுக்கவியலாதாம். இதில் உள்ள தர்க்கநியாயத்தைப் புரிந்துகொள்ள முடியவில்லை.

அடையாள மை பயன்படுத்தும் நோக்கம் எவரையும் வாக்களிக்காமல் தடுப்பதல்ல. ஒருவர் சட்டவிரோதமாக இரு முறை வாக்களிக்காமல் தடுப்பதுதான் அதன் நோக்கம். குற்றம் நிகழ்வதைத் தடுப்பதுதான் நோக்கமே தவிர வாக்களிப்பதைத் தடுப்பது அதன் நோக்கமல்ல. மேலும், 2008-இல், அடையாள மையை அரசு இறக்குமதி செய்தபோது எவரும் அரசமைப்பு திருத்தப்பட வேண்டும் என்று குரல் எழுப்பவில்லையே.

வான் அஹ்மட் முன்வைக்கும் இரண்டாவது வாதம், அவர் தன் நாட்டின்மீதுகொண்டுள்ள அளவுமீறிய பற்றின் வெளிப்பாடாகும். அடையாள மை இந்தியா, இந்தோனேசியா போன்ற வறிய, நவீன சிந்தனை குறைவாக உள்ள நாடுகளுக்குத்தான் பொருத்தமானதாம். மலேசியா போன்ற நாட்டுக்கு கைரேகை பதிவு செய்தல் போன்ற நவீன தொழில்நுட்பம்தான் ஏற்புடையதாம்.

இப்படிக் கூறும் அவர், அதே மூச்சில் நாட்டுப்புறத்தில் உள்ள வாக்காளர்கள் மதிநுட்பம் வாய்ந்தவர்கள் அல்லர் என்றும் அதனால் அவர்களை ஏமாற்றி விரல்களில் முன்கூட்டியே மை தடவி அவர்களை வாக்களிக்க விடாமல் தடுத்து விடலாம் என்றும் கூறுகிறார். ஆக, எது உண்மை- மலேசியர்கள் மதிநுட்பம் வாய்ந்தவர்களா, இல்லையா? 

இந்தியாவில் 1952-இலிருந்து அடையாள மை பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதில் மோசடி நிகழ்ந்ததாக இதுவரை யாரும் குறை சொன்னதில்லை. ஆனால், அடையாள மையைக் கொண்டு கிராமப்புற மக்கள் ஏமாற்றப்பட்டிருக்கிறார்கள். பிலிப்பீன்சில், எளிதில் மறைந்துபோகும் தரக் குறைவான மையைப் பயன்படுத்தியதால் பல பிரச்னைகள் எழுந்தன.

ஆனால், இந்திய மை-அதைத்தான் மலேசிய அரசு 2008-இல் இறக்குமதி செய்தது-72 மணி நேரத்துக்கு அழியாது, அகற்றவும் முடியாது. 

வேடிக்கை என்னவென்றால், உயர்-தொழில்நுட்பம் சார்ந்ததாகக் கருதப்படும் விரல் ரேகை பதிவுமுறைதான் மோசடிகளுக்கு இடம் கொடுக்கும்;  பிரச்னைகளை உண்டுபண்ணும் என்பது பலரின் நினைப்பு.அதற்கான சாதனங்களும் தரவுகளும் அரசாங்கக் கட்டுப்பாட்டில் இருக்கும். இந்தச் சாதனங்களை வழங்கும் மலேசிய நிறுவனங்கள் அரசியல் தலைவர்களுக்கும் அரசாங்கத் தலைவர்களுக்கு அணுக்கமானவர்களுக்குச் சொந்தமானவை என்று வலைப்பதிவர்கள் சிலர் சுட்டிக்காண்பித்துள்ளனர்.

மேலும், கணினி கட்டமைப்புகள் செயலிழந்து போகும் அபாயமும் இருக்கிறது.

நாடு முழுவதும் பல்லாயிரக்கணக்கான வாக்களிப்பு மையங்களுக்கு கைரேகை பதிவுக் கருவிகளை விநியோகம் செய்தல், அவற்றை இயக்கும் ஆள்களுக்குப் பயிற்சி அளித்தல், அவற்றுக்கு மின் மற்றும் இணையத் தொடர்புகளை ஏற்படுத்திக்கொடுத்தல் என்பனபோன்றவற்றையெல்லாம் குறித்த காலத்துக்குள் செய்து முடிக்க முடியுமா? எனவே, தொழில்நுட்பத்தில் சற்றுக்  குறைந்தது என்றாலும்  அடையாள மைதான் இதற்குத் தீர்வு. அதுவே, எளிமையானது, மலிவானது, நம்பகமானதும்கூட.

வெளிநாட்டுக் கண்காணிப்பாளர்களை அனுமதித்தல்

கடந்த ஜூலை மாதம் வான் அஹ்மட்டிடம், அடுத்த தேர்தலின்போது தேர்தலைப் பார்வையிட வெளிநாட்டவர்கள் அழைக்கப்படுவார்களா என்று வினவப்பட்டது. அதற்கு அவர், “எதற்கு வெளிநாட்டவரை அழைக்க வேண்டும்….நம் தேர்தல் நடைமுறை பற்றிக் கருத்துரைக்கவா? நம் தேர்தல் சட்டங்களை அவர்கள் அறியமாட்டார்கள்”, என்று பதிலளித்தார்.

அவர்கள் எதிர்மறை கருத்துகளைக் கூறினால் அது மலேசியர் மனத்தைப் புண்படுத்தும். “அவர்கள் அந்நியர்கள். ஜெர்மானியர் வந்துதான் நம் தேர்தல் முறை பற்றிக் கருத்துரைக்க வேண்டுமா, என்ன?”, என்று திருப்பிக் கேட்டார்.

இவர் இப்படிச் சொல்லிக்கொண்டிருந்த வேளையில், இவரின் ‘போஸ்’ அப்துல் அசீஸ் முகம்மட் யூசுப் தாய்லாந்து தேர்தலைப் பார்வையிட இசி ஆணையர்களுடன் அங்கு சென்றிருந்தார்- இது எப்படி இருக்கு? தாய்லாந்து தேர்தல் ஆணையம் அந்நாட்டுத் தேர்தலைப் பார்வையிட மலேசியா உள்பட 11 நாடுகளை அழைத்திருந்தது.

தாய்லாந்து வாக்காளர்களுக்கும் அங்கு தேர்தல்கள் ஒழுங்காகவும் நியாயமாகவும் நடத்தப்படுகின்றனவா என்பதில் சந்தேகம் உண்டு. ஆசிய அறநிறுவனம் ஒன்று நடத்திய ஆய்வில், 47 விழுக்காட்டினர் தேர்தல்கள் நியாயமாகவும் நேர்மையாகவும் நடப்பதாகக் கூறினார்கள், 48 விழுக்காட்டினர் அக்கருத்தில் மாறுபட்டனர்.

வெளிநாட்டுப் பார்வையாளர்கள் இருந்தால் நம்பிக்கை வருமா என்று வினவியதற்கு 62 விழுக்காட்டினர் ஆம் என்றார்கள். 34 விழுக்காட்டினர் மட்டும் அப்படியும் நம்பிக்கை வராது என்றார்கள்.

அந்த ஆய்வின் முடிவின் அடிப்படையில் நோக்கும்போது தேர்த்லைப் பார்வையிட அந்நிய பார்வையாளர்களை அழைப்பது அரசுக்கு சாதகமாகவே இருக்கும்.

அரசாங்கம் கூறுகிறது தேர்தல்கள் கட்டுப்பாடின்றியும் நியாயமாகவும் நடத்தப்படுவதாக. மலேசியாவில் மக்களாட்சி வலிமையுடனும் நல்ல நெறிமுறையுடனும் நிலைத்திருப்பது உலகுக்குத் தெரிய வேண்டாமா? அதனால், அந்நிய பார்வையாளர்களை அழைப்பதால் நாட்டின் கெளரவம் குறைந்து போகாது; மேலும் அது, நாட்டுக்கு நன்மையாகத்தான் அமையும்.
===========================================================================================

JOHN R MALOTT:1995-1998-இல் மலேசியாவில் அமெரிக்கத் தூதராகப் பணிபுரிந்தவர். நம் நாட்டின் நிலவரங்களை அணுக்கமாகக் கவனித்து வருபவர்.

TAGS: