பொருளாதாரத்தை மீட்க உதவுங்கள் : உலக நாடுகளுக்கு தலிபான் கோரிக்கை

காபூல் : ”கடுமையான பொருளாதார பாதிப்பில் உள்ளோம். மக்களை மீட்டெடுக்க உலக நாடுகள் உதவ வேண்டும்,” என தலிபான் பயங்கரவாத அமைப்பின் மூத்த தலைவரான முல்லா முகமது ஹசன் அகுந்த் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஆப்கானிஸ்தானில் 20 ஆண்டுகளுக்கு மேலாக இருந்த அமெரிக்கப் படைகள் ஆக.,ல் வெளியேறின. இந் நிலையில் நாட்டைக் கைப்பற்றிய தலிபான் பயங்கரவாத அமைப்பு, தற்காலிக அரசையும் அறிவித்தது. அதன்படி தலிபான் துணை நிறுவனரான அகுந்த், நாட்டின் பிரதமராக அறிவிக்கப்பட்டார்.ஏற்கனவே போரால் சீரழிந்துள்ள ஆப்கானிஸ்தானில் கடும் நிதிப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளன. இதைத் தவிர ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பும் அங்கு தாக்குதல்களை நடத்தி வருகிறது.

இந்தப் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பது தொடர்பாக, அமெரிக்கா மற்றும் தலிபான் இடையே, அடுத்த வாரத்தில் பேச்சு நடக்க உள்ளது.ஆப்கனை கைப்பற்றியதில் இருந்து மவுனமாக இருந்த அகுந்த், முதல் முறையாக நாட்டு மக்களிடையே, ‘டிவி’யில் பேசினார். அதில், அவரது பேச்சு மட்டும் ஒலிபரப்பானது. முகத்தை காட்டவில்லை.

அதில் அவர் கூறியுள்ளதாவது:

மற்ற நாடுகளின் உள்விவகாரங்களில் எப்போதும் தலையிட மாட்டோம் என உலக நாடுகளுக்கு உறுதி அளிக்கிறோம். அனைத்து நாடுகளுடனும் நல்ல பொருளாதார உறவை பேண தயாராக உள்ளோம்.தற்போது எங்கள் நாடு பல பிரச்னைகளில் மூழ்கியுள்ளது.மக்களின் வலுவான ஆதரவுடன், கடவுளின் கருணையால் அதில் இருந்து மீண்டு வருவோம்.

இதுவரை அளித்து வந்த பொருளாதார உதவிகளை நிறுத்த வேண்டாம். அதைத் தொடர வேண்டும் என, உலக நாடுகளை வேண்டுகிறோம் அதன் மூலமே, மக்களை மீட்டெடுக்க முடியும்.பெண்கள் கல்வி கற்க வாய்ப்பு தரப்பட்டுள்ளது. இஸ்லாமிய கோட்பாடுகளுக்கு உட்பட்டு அது மேலும் விரிவுபடுத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

dinamalar