உகாண்டாவின் விமான நிலையம் சீனா வசம் செல்கிறது

கம்பாலா, கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான உகாண்டாவின் மத்திய பகுதியில் அமைந்துள்ள என்டெபே நகரில் சர்வதேச விமான நிலையம் உள்ளது. இது அந்த நாட்டின் ஒரே ஒரு சர்வதேச விமான நிலையம் ஆகும்.

1972-ம் ஆண்டில் கட்டப்பட்ட இந்த விமான நிலையத்தை விரிவுபடுத்துவதற்காக கடந்த 2015-ம் ஆண்டு சீனாவிடம் இருந்து அந்த நாடு 207 மில்லியன் அமெரிக்க டாலரை (இந்திய மதிப்பில் சுமார் ரூ.1,553 கோடி) கடனராக பெற்றது. ஆனால் மொத்த கடனில் வெறும் 7 மில்லியன் டாலரை (சுமார் ரூ.52 கோடி) மட்டுமே உகாண்டா இதுவரை திருப்பி செலுத்தியுள்ளது. இன்னும் 200 மில்லியன் டாலர் (சுமார் 1,501 கோடி) பாக்கி உள்ளது.

கடனை திருப்பி செலுத்த முடியாமல் போனால் என்டெபே சர்வதேச விமான நிலையத்தை சீனா கையகப்படுத்தி கொள்ளலாம் என 2015-ம் ஆண்டு கடன் ஒப்பந்தத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒப்பந்தத்தின் இந்த விதியை நீக்க வேண்டுமென உகாண்டா அரசு சீனாவை தொடர்ந்து வலியுறுத்தியது. ஆனால் சீனா அதை ஏற்க மறுத்து விட்டது.

இந்த நிலையில், சீனாவிடம் வாங்கிய கடனை திருப்பி செலுத்த உகாண்டா அரசுக்கு வழங்கப்பட்ட தவணைக்காலம் தற்போது முடிந்து விட்டது. இதனால் அந்த நாட்டின் ஒரே ஒரு சர்வதேச விமான நிலையத்தை சீனா கையகப்படுத்துவது உறுதியாகியுள்ளது.

dailythanthi