அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் நடத்திய சமீபத்திய ஆய்வில், 14 மரபணுக்கள் அதீத உடல் எடை பிரச்சினைக்கு தொடர்புடையவையாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
நியூயார்க், இன்றைய உலகில் அதிக உடல் எடை என்பது பெரும் கவலையளிக்கும் பிரச்சினையாகவே உருவெடுத்துள்ளது.
உலகில் இருக்கும் நூற்றுக்கணக்கானவர்களின் பெரும் அவதியாக இருப்பது உடல் எடை அதிகரித்தல் பிரச்சினை. இது அனைத்து வயதினரையும் பாதிக்கும் பிரச்சினையாக உள்ளது. சர்க்கரை நோய் மற்றும் இதய நோய்கள் போன்ற பிற இணை நோய்கள் உடலில் ஏற்பட முக்கிய காரணமாகவும் உள்ளது.
அமெரிக்காவில் மட்டும் 40 சதவீத பெரியவர்களுக்கு அதிக உடல் எடை பாதிப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படி பலரையும் பாதித்துள்ள இந்த பிரச்சினைக்கு தீர்வு காணும் நோக்கில் அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் ஆய்வில் இறங்கினர். அதன் விளைவாக, அவர்கள் நடத்திய சமீபத்திய ஆய்வில், 14 மரபணுக்கள் அதீத உடல் எடை எனப்படும் ஒபீசிட்டி நோய்க்கு தொடர்புடையவையாக உள்ளன என்பது தெரிய வந்துள்ளது.3 மரபணுக்கள் உடல் எடை அதிகரிக்காமல் தடுக்க காரணமாக இருப்பதும் தெரிய வந்துள்ளது.
மோசமான உணவுப்பழக்கம் மற்றும் சோம்பேறித்தனமான வாழ்க்கை முறையின் காரணமாக இந்த பிரச்சினை ஏற்படுகின்றது. ஆனால், சிலருக்கு அவர்கள் உடலில் இருக்கும் மரபணுக்களே இத்தகைய பிரச்சினை ஏற்பட காரணமாக உள்ளதும் ஆய்வில் தெரிய வந்துள்ளது.
மேற்கண்ட ஆய்வின் முடிவுகள் அறிவியல் இதழான பிலாஸ் ஜெனடிக்ஸ்சில் வெளியாகி உள்ளது. அதில், உணவு, உடல் எடை மற்றும் டி.என்.ஏ போன்றவற்றிற்கும் தொடர்பு உள்ளது என்பது தெரிய வந்துள்ளது.
அதிக கலோரி நிறைந்த உணவுகள், சர்க்கரை புரக்டோஸ் அதிகம் சேர்ந்த உணவுகளே இதற்கு காரணம் என்று கூறப்பட்டுள்ளது.
உடற்பயிற்சி இல்லாத வாழ்க்கை முறையுடன் சேர்த்து மரபணுக்களும் இந்த பிரச்சினைக்கு முக்கிய பங்காற்றுகின்றன. மனித உடலில் கொழுப்பு எவ்வாறு சேர்கிறது, அதை கட்டுப்படுத்துவது எப்படி போன்றவற்றை மரபணுக்கள் தான் முடிவு செய்கின்றன. மேலும், நம்முடைய உடல் எப்படி உணவை செரித்து உடலுக்கு சக்தியை தரப்போகிறது என்பதையும் மரபணுக்கள் தான் தீர்மானிக்கின்றன.
உணவை கொழுப்பாக மாற்றி உடலில் தேக்க செய்யும் மரபணுக்களை அறிவியல் வல்லுனர்கள் கண்டுபிடித்துவிட்டால், அத்தகைய மரபணுக்களை மருந்துகள் மூலமாக செயலிழக்க செய்துவிடலாம். இதன்மூலம், அதிகமாக சாப்பிடும் பழக்கத்தை தவிர்க்க வேண்டிய நிலை உருவாகாது.
விர்ஜீனியா பல்கலைக்கழகத்தில் உயிரியல் மற்றும் செல் உயிரியல் துறை பேராசிரியரும் இந்த ஆராய்ச்சியின் மூத்த ஆசிரியருமான டாகடர்.அயிலீன் ஓ’ரூர்க்கி கூறுகையில், “நூற்றுக்கணக்கான மரபணு மாறுபாடுகளை நாங்கள் கண்டறிந்துள்ளோம். ஆனால் இத்தனை மாறுபாடுகளும் நோய் ஏற்படுத்த காரணமானவை அல்ல. இதனால் எந்த மரபணு மாற்றம் உடல் எடை அதிகரிப்பதற்கான காரணமாக உள்ளது என்பதை அறிந்து கொள்வதற்கு பெரும் தடையாக உள்ளது.”
இதுவரை மொத்தம் 293 மரபணுக்கள் ஆராய்ச்சியின் முடிவில் கண்டறியப்பட்டுள்ளன. அவற்றில் எந்தெந்த மரபணுக்கள் அதீத உடல் எடை ஏற்பட காரணம் மற்றும் உடல் எடை அதிகரிக்காமல் தடுக்கும் காரணிகள் என்பதும் கண்டறியப்பட்டுள்ளது.
14 மரபணுக்கள் அதீத உடல் எடை எனப்படும் ஒபீசிட்டி நோய்க்கு தொடர்புடையவையாகவும், 3 மரபணுக்கள் உடல் எடை அதிகரிக்காமல் தடுக்க காரணமாகவும் உள்ளன.அந்த மூன்று மரபணுக்கள் தான் மக்கள் நீண்ட நாட்கள் உயிர்வாழ கரணமாகவும் உள்ளன என்பது ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது.
dailythanthi