ஒமைக்ரான் பரவல்: தென் ஆப்பிரிக்காவில் கொரோனா பாதிப்பு 2 மடங்காக உயர்வு

தென் ஆப்பிரிக்க விஞ்ஞானிகள், புதிய ஒமைக்ரான் மாறுபாட்டை தொடர்ந்து, கொரோனா பாதிப்புகள் விரைவாக அதிகரிக்க தயாராகி வருவதாக கூறினர்.

ஜோகனஸ்பர்க், தென் ஆப்பிரிக்காவில் புதிய உருமாறிய கொரோனா வைரஸ் பாதிப்பு (ஒமைக்ரான்) கண்டறியப்பட்டுள்ளது. இது அதிபயங்கர வைரஸ் என கருதப்படுவதால் பல நாடுகள் பயணக் கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன.

50 பிறழ்வுகளைக் கொண்டுள்ள உருமாறிய கொரோனா வைரசான ‘ஒமைக்ரான்’ தென் ஆப்பிரிக்காவில் முதலில் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ், இதுவரை கண்டறியப்பட்டுள்ள கொரோனா வைரஸ்களில் ஆபத்தானதாக அறியப்படுகிறது. இதனால் உலக நாடுகள் உஷாராக இருக்கின்றன. இருப்பினும் இந்த வைரஸ் தென் ஆப்பிரிக்காவில் தோன்றி, பெல்ஜியம், இஸ்ரேல், ஹாங்காங்குக்கு ஏற்கெனவே பரவி விட்டது.

புதிதாக பரவி வரும் வீரியமிக்க கொரோனா ரகமான ஒமைக்ரான், ஏற்கெனவே கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்களை குறிவைத்து தாக்குகிறது என்ற தகவல் வெளியாகி உள்ளது.

தென் ஆப்பிரிக்காவில் அடையாளம் காணப்பட்ட ஒமைக்ரான், ஒரே வாரத்தில் உலகின் பெரும்பாலான நாடுகளில் பரவி உள்ளது. அதிக எண்ணிக்கையிலான பிறழ்வுகள், முந்தைய வகைகளை  விட வேகமான பரவல், தற்போதைய தடுப்பூசிக்கு அடங்காதது என வெளியாகி வரும் பல தகவல்கள், ஒமைக்ரான் மீதான கவலையை அதிகரித்துள்ளது.

ஒமைக்ரான் பரவலை தொடர்ந்து தென் ஆப்பிரிக்காவில் கொரோனா பாதிப்பு இரண்டு மடங்காக உயர்ந்துள்ளது. தென் ஆப்பிரிக்காவில்  புதன்கிழமையன்று கொரோனா பாதிப்பு  4,373 இல் இருந்து 8,561 ஆக உயர்ந்துள்ளது.

தென் ஆப்பிரிக்காவில்  நவம்பர் மாத தொடக்கத்தில், 7 நாள் சராசரியாக ஒரு நாளைக்கு சுமார் 200 புதிய பாதிப்புகள் ஏற்பட்டன. ஆனால் நவம்பர் நடுப்பகுதியில் புதிய பாதிப்புகள்  வேகமாக அதிகரிக்க தொடங்கின.

தென் ஆப்பிரிக்க  விஞ்ஞானிகள் புதிய ஓமைக்ரான் மாறுபாட்டின் கண்டுபிடிப்பை தொடர்ந்து, கொரோனா பாதிப்புகள் விரைவாக அதிகரிக்க தயாராகி வருவதாக கூறினர்.

வரும் காலங்களில் பாதிப்புகள்  இரட்டிப்பாகவோ அல்லது மும்மடங்காகவோ இருப்பதை நாம் உண்மையில் பார்க்கப் போகிறோம்”என்று உலக சுகாதார அமைப்பின் பிராந்திய வைராலஜிஸ்ட் டாக்டர் நிக்ஸி குமேட்-மொலெட்ஸி கூறினார்

dailythanthi