ஹோண்டுராசில் முதல் பெண் அதிபர் தேர்வு

டெகுசிகல்பா, லத்தீன் அமெரிக்க நாடான ஹோண்டுராசில் கடந்த 12 ஆண்டுகளாக வலதுசாரி கட்சியான தேசிய கட்சியின் ஆட்சி நடந்து வந்தது.

இந்த நிலையில் கடந்த மாதம் 28-ந்தேதி அங்கு அதிபர் தேர்தல் நடந்தது. இதில் அதிபர் பதவிக்காக ஆளும் தேசிய கட்சியின் சார்பில் நஸ்ரி அஸ்புராவும், அவரை எதிர்த்து இடதுசாரி கட்சியான சுதந்திர கட்சியின் சார்பில் சியோமாரா காஸ்ட்ரோவும் போட்டியிட்டனர். இவர் அந்த நாட்டின் முன்னாள் அதிபர் மானுவல் ஜெலயாவின் மனைவி ஆவார். தேர்தல் தொடங்கியது முதலே கருத்து கணிப்பு முடிவுகள் இவருக்கு ஆதரவாக இருந்து வந்தது.

இந்த நிலையில் நடந்து முடிந்த அதிபர் தேர்தலின் முடிவுகள் நேற்று வெளியாகின. இதில் மொத்தம் பதிவான வாக்குகளில் சியோமாரா காஸ்ட்ரோ 53 சதவிகிதம் வாக்குகளை பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட அஸ்புரா 34 சதவிகித வாக்குகளுடன் தோல்வியை தழுவினார்.

இதன் மூலம் 12 ஆண்டுகளுக்கு பின்னர் அந்த நாட்டில் இடது சாரி கட்சி ஆட்சியை பிடித்துள்ளது. மேலும் இந்த வெற்றியின் மூலம் ஹோண்டுராஸ் நாட்டின் முதல் பெண் அதிபர் என்கிற பெருமையையும் சியோமாரா காஸ்ட்ரோ பெற்றுள்ளார்.

dailythanthi