பிரபஞ்ச அழகியாக இந்திய பெண் தேர்வு: 21 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் சாதனை

ஜெருசலேம் : இஸ்ரேலில் நடந்த 70வது பிரபஞ்ச அழகி போட்டியில் இந்தியாவைச் சேர்ந்த ஹர்னாஸ் சந்து, 21, பட்டம் வென்றார். பிரபஞ்ச அழகி பட்டத்தை 21 ஆண்டுகளுக்கு பின் மூன்றாவது முறையாக இந்தியா இந்த பட்டத்தை வென்றுள்ளது.

மத்திய கிழக்கு நாடான இஸ்ரேலில், ‘மிஸ் யுனிவர்ஸ்’ எனப்படும் 70வது பிரபஞ்ச அழகி போட்டியின் இறுதி சுற்று நேற்று நடந்தது. இதில் 80 நாடுகளைச் சேர்ந்த அழகிகள் பங்கேற்றனர். நம் நாட்டின் பஞ்சாப் மாநிலம் சண்டிகரைச் சேர்ந்த நடிகையும், மாணவியுமான ஹர்னாஸ் சந்து, இறுதிச் சுற்றில் வெற்றி பெற்று பிரபஞ்ச அழகி பட்டத்தை வென்றார்.

அவருக்கு கடந்த ஆண்டு பிரபஞ்ச அழகியாக வெற்றி பெற்ற மெக்சிகோவை சேர்ந்த ஆண்ட்ரியா மெஸா கிரீடத்தை அணிவித்தார்.தென் அமெரிக்க நாடான பராகுவேவைச் சேர்ந்த நாடியா பெரைரா, 22, இரண்டாவது இடத்தையும், தென் ஆப்பிரிக்காவின் லாலேலா ஸ்வான், 24, மூன்றாவது இடத்தையும் பிடித்தனர்.

கடந்த 1994ல் சுஷ்மிதா சென்னும், 2000ல் லாரா தத்தாவும் நம் நாட்டின் சார்பில் பிரபஞ்ச அழகி பட்டத்தை வென்றனர்.தற்போது 21 ஆண்டுகளுக்கு பின் ஹர்னாஸ் சந்து மீண்டும் அந்த பட்டத்தை வென்று பெருமை சேர்த்துள்ளார்.”கடவுளுக்கும், பெற்றோருக்கும், இறுதி வரை என்னை ஆதரித்து வழிநடத்திய ‘மிஸ் இந்தியா’ அமைப்புக்கும், எனக்காக பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி,” என, ஹர்னாஸ் சந்து மகிழ்ச்சி பொங்க தெரிவித்தார்

ஹர்னாஸ் சந்துவின் வெற்றியை பஞ்சாப் மக்கள் கொண்டாடி வருகின்றனர்.மொஹாலியின் கஹ்ரார் என்ற இடத்தில் உள்ள ஹர்னாஸ் வீட்டில் உறவினர்களும், நண்பர்களும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். ஹர்னாஸ் சந்துவின் தந்தை ப்ரீத்தம் சிங் சந்து, மகப்பேறு மருத்துவரான தாய் ரவிந்தர் கவுர் சந்து, சகோதரர் ஹர்னுார் சிங் ஆகியோர் அனைவருக்கும் நன்றி தெரிவித்தனர்.

இறுதிச்சுற்றில் பேசியது என்ன?

இறுதிச்சுற்றின் கேள்வி – பதில் பகுதியில் ‘பல்வேறு விதமான மன அழுத்தங்களை எதிர்கொள்ள வேண்டியுள்ள இன்றைய இளம் பெண்களுக்கு என்ன அறிவுரை கூற விரும்புகிறீர்கள்?’ என, ஹர்னாசிடம் கேட்கப்பட்டது.

இதற்கு ஹர்னாஸ் சந்து அளித்த பதில்:இன்றைய இளைஞர்கள் தங்களை நம்புவதில் தான் மிகப்பெரிய அழுத்தத்தை எதிர்கொள்கின்றனர். நீங்கள் தனித்துவமானவர் என்பதை அறிந்து கொள்ளுங்கள். அது தான் உங்களை அழகாக்குகிறது. மற்றவர்களுடன் உங்களை ஒப்பிட்டுப் பார்ப்பதை நிறுத்துங்கள்; அதை விட உலக அளவில் பேசுவதற்கு பல முக்கியமான விஷயங்கள் உள்ளன. உங்கள் வாழ்க்கைக்கு நீங்கள் தான் தலைவர். எனவே துணிந்து பேசுங்கள். உங்களுக்காக நீங்கள் தான் குரல் கொடுக்க வேண்டும். நான் என் மீது மிகுந்த நம்பிக்கை வைத்தேன்; எனவே தான் இன்றைக்கு இங்கு நிற்கிறேன். இவ்வாறு அவர் பதில் அளித்தார்.

ஹர்னாஸ் சந்து ‘பயோ – டேட்டா’

பஞ்சாபின் சண்டிகரில் பி.ஏ., தகவல் தொழில்நுட்பம் படித்த ஹர்னாஸ் சந்து தற்போது பொது நிர்வாகத்தில் முதுகலை படிப்பு படித்து வருகிறார்

கடந்த 2017ல் ‘மிஸ் சண்டிகர்’ பட்டத்தை வென்றார். ‘பெமினா மிஸ் இந்தியா பஞ்சாப்’ பட்டத்தை 2019ல் வென்றார். ‘பெமினா மிஸ் இந்தியா’ போட்டியில் முதல் 12 போட்டியாளர்களில் ஒருவராக தேர்வானார்

பஞ்சாபி மொழி திரைப்படங்களில் நடித்து வருகிறார்.