வெளிநாடுகளுக்கு செல்ல பாஸ்போர்ட் வழங்கும் பணியினை ஆப்கானிஸ்தான் அரசு தொடங்கி உள்ளது. இதனால் பலர் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேற முடிவு செய்துள்ளனர்.
காபூல்: ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி நடந்து வருகிறது. கடந்த ஆகஸ்டு மாதம் இந்த ஆட்சி பதவியேற்ற போது ஏராளமான பொதுமக்கள் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேற முயற்சி செய்தனர்.
அப்போது காபூல் விமான நிலையத்தில் நடந்த தாக்குதலில் 150 பேர் வரை கொல்லப்பட்டனர். ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் துப்பாக்கியுடன் ரோந்து சுற்றி வருவதால் பொதுமக்கள் ஒருவித பீதியுடன் வாழ்க்கை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் வெளிநாடுகளுக்கு செல்ல பாஸ்போர்ட் வழங்கும் பணியினை ஆப்கானிஸ்தான் அரசு தொடங்கி உள்ளது. இதனால் பலர் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேற முடிவு செய்துள்ளனர். இதற்காக விண்ணப்பிப்பதற்காக காபூலில் உள்ள பாஸ்போர்ட் அலுவலகம் முன்பு ஏராளமானோர் திரண்டனர்.
நேற்று முன்தினம் இரவு முதல் அவர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து விண்ணப்பித்தனர். அதில் அவர்கள் மருத்துவ சிகிச்சைக்காக மற்ற நாடுகளுக்கு செல்வதாக குறிப்பிட்டு இருந்தனர்.
பாஸ்போர்ட் அலுவலகம் முன்பு நூற்றுக்கணக்கான பொதுமக்கள் திரண்டதால் அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
இருதய நோய் உள்பட பல்வேறு நோயால் பாதிக்கப்பட்ட சிலர் ஆம்புலன்ஸ் வேனுடன் பாஸ் போர்ட் அலுவலகத்திற்கு வந்து காத்திருந்தனர். இது தொடர்பாக முகமது உஸ்மான் (வயது 60) என்பவர் கூறும்போது, ‘‘நான் இருதய நோயால் பாதிக்கப்பட்டுள்ளேன். எனக்கு அவசரமாக ஆபரேஷன் செய்ய வேண்டி உள்ளதால் பாகிஸ்தான் நாட்டுக்கு உடனடியாக செல்ல வேண்டும். அதற்காக விண்ணப்பம் கொடுக்க வந்துள்ளேன்’’ என்று கூறினார்.
இதேபோல் பலரும் மருத்துவ சிகிச்சைக்காக செல்வதாக தெரிவித்தனர்.
பாஸ்போர்ட் அலுவலகம் முன்பு நூற்றுக்கணக்கான பொதுமக்கள் திரண்டதால் அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.