பைசர் நிறுவனத்தின் கொரோனா தடுப்பு மாத்திரை; அமெரிக்கா அனுமதி

வாஷிங்டன்: பைசர் நிறுவனத்தின் 12 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கான கொரோனா நோய் தடுப்பு மாத்திரைக்கு அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. பேக்ஸ்லோவிட் என்ற அழைக்கப்படும் இந்த மாத்திரை கொரோனா உயிரிழப்பை தடுப்பதாக கூறப்படுகிறது.

கொரோனா வைரஸ் தொற்று நோய் சிகிச்சைக்கான மாத்திரையை அமெரிக்காவில் உள்ள பைசர் நிறுவனம் உருவாக்கி இருந்தது. கொரோனா அறிகுறிகள் தென்பட்ட ஐந்து நாட்களுக்குள் இந்த மாத்திரை வழங்கப்பட்டால், மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவோர் மற்றும் உயிரிழப்போரின் விகிதம் 88 சதவீதம் குறைந்துவிடும்.

வீட்டில் இருந்து சிகிச்சை பெறுகிற, அதிக ஆபத்துள்ள கொரோனா நோயாளிகளுக்கும் இந்த மாத்திரையை பரிந்துரைக்கலாம் எனக்கூறப்படுகிறது. இந்த மாத்திரையின் அவசர பயன்பாட்டு அங்கீகாரத்துக்கு எப்.டி.ஏ எனப்படும் உணவு மற்றும் மருந்து நிர்வாகத்திடம் பைசர் நிறுவனம் கடந்த மாதம் விண்ணப்பித்து இருந்தது.

இந்நிலையில் பைசர் நிறுவனத்தின் 12 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கான பேக்ஸ்லோவிட் கொரோனா மாத்திரைக்கு அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் தற்போது அனுமதி அளித்துள்ளது.

இது குறித்து அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் தரப்பில் , ‛பேக்ஸ்லோவிட் மாத்திரையை 12 வயதுக்கு மேற்பட்ட கொரோனா நோயாளிகளுக்கோ அல்லது நோய் அறிகுறிகள் இருப்பவர்களுக்கோ கொடுக்கலாம்,’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

dinamalar