பதற்றமான சூழல்
காயா:மியான்மரில் பொதுமக்கள் சென்ற வாகனத்தின் மீது ராணுவத்தினர் தாக்குதல் நடத்தி, தீ வைத்து எரித்தனர். இதில் குழந்தைகள் உட்பட 30க்கும் மேற்பட்டோர் உடல் கருகி உயிரிழந்தனர்.
நம் அண்டை நாடான மியான்மரில் பிப்., ல் ஆட்சி அதிகாரத்தை ராணுவம் கைப்பற்றியது. மேலும், அரசியல் கட்சித் தலைவர்கள் அனைவரும் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
ராணுவ ஆட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து நாட்டு மக்கள் ஆங்காங்கே போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அப்படி போராட்டம் நடத்துவோரை, பிரிவினைவாதிகள் எனக்கூறி அவர்களுக்கு எதிராக, ராணுவத்தினர் தாக்குதல்களையும் நடத்தி வருகின்றனர்.
இதைத்தவிர ரோஹிங்கியா முஸ்லிம்கள் உள்ளிட்ட சிறுபான்மையினருக்கு எதிரான தாக்குதல் சம்பவங்கள், தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இதனால் நாடு முழுதும் தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
இந்நிலையில் நேற்று இரவு இங்குள்ள காயா மாகாணத்தில் சென்ற சில வாகனங்களை குறிவைத்து ராணுவத்தினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.இதில் குழந்தைகள் உட்பட 30க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதன் பின் அந்த வாகனங்களை ராணுவ வீரர்கள் தீயிட்டு எரித்தனர்.
கருகிய நிலையில் கண்டெடுக்கப்பட்ட உடல்களின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவியது. ராணுவ வீரர்களின் இந்த செயலுக்கு பல தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.இதற்கிடையே, ‘சேவ் தி சில்ரன்’ என்ற தன்னார்வ் தொண்டு நிறுவனம் காயா மாகாணத்தில், தன் செயல்பாடுகளை நிறுத்திக்கொள்வதாக அறிவித்து உள்ளது.
நடவடிக்கை
அந்த அமைப்பின் ஊழியர்கள் இரண்டு பேர், ராணுவம் நடத்திய தாக்குதலுக்குப் பின் மாயமானதால், இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.