பிப்ரவரி மாதம் பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற உள்ள நிலையில், தற்போது சீனாவில் திடீரென கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.
பெய்ஜிங், சீனாவின் தலைநகர் பெய்ஜிங்கில் வரும் பிப்ரவரி 4 முதல் 20 ஆம் தேதி வரை குளிர்கால ஒலிம்பிக் போட்டி நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அங்கு கடந்த சில தினங்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
அந்த வகையில் சீனாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 206 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் அங்கு 140 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருந்தது. புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் 48 பேர் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் என்றும் 158 பேர் வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொள்ளாதவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய பாதிப்புகளின் மூலம் சீனாவில் இதுவரை கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1,00,077 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பால் புதிதாக உயிரிழப்புகள் எதுவும் ஏற்படாத நிலையில், அங்கு இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4,636 ஆக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 76 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் தொடங்குவதற்கு இன்னும் ஓரிரு மாதங்களே உள்ள நிலையில், தற்போது அங்கு திடீரென அதிகரித்து வரும் கொரோனா காரணமாக, போட்டிகள் திட்டமிட்டபடி நடத்தப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதற்கிடையில் சினாவில் மனித உரிமை மீறல்கள் நடைபெறுவதாக குற்றம் சாட்டி அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக் போட்டியை தூதரக ரீதியில் புறக்கணிப்பதாக அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.