தங்கச் சுரங்கம்
செயல்படாத தங்கச்சுரங்கத்திற்குள் அனுமதியின்றி நுழைந்த 50-க்கும் மேற்பட்டோர் சுரங்கத்தை தோண்டும்போது இடிந்து விழுந்துள்ளது.
கர்த்தூம்: சூடான் நாட்டின் மேற்கு கொர்டோபன் மாகாணம் புஜா என்ற கிராமத்தில் அரசு நடத்தும் தங்கச்சுரங்கம் உள்ளது. அந்த தங்கச்சுரங்கம் கடந்த சில மாதங்களாக செயல்படாமல் மூடப்பட்டிருந்தது. இதனால், அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த படையினரும் விலக்கிக்கொள்ளப்பட்டனர். இந்த முடிவை மீறி சுரங்கத் தொழிலாளர்கள் மீண்டும் சுரங்கத்திற்குள் ஊடுருவி வேலை செய்தனர்.
இந்நிலையில், அந்த தங்கச்சுரங்கத்திற்குள் நேற்று அனுமதியின்றி நுழைந்த 50-க்கும் மேற்பட்டோர் தங்கம் எடுக்கும் நோக்கத்தோடு சுரங்கத்தை தோண்டியுள்ளனர். அப்போது, சுரங்கத்தின் மேற்பகுதி திடீரென இடிந்து விழுந்தது. இதில், இடிபாடுகளுக்குள் பலர் சிக்கிக்கொண்டனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மீட்புக்குழுவினர் சுரங்கத்திற்குள் சிக்கி இறந்தவர்களின் உடல்களை மீட்டனர். காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சுரங்க விபத்தில் 38 பேர் உயிரிழந்ததாக மீட்புக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
சூடான் முழுவதும் பாரம்பரிய சுரங்கத் தொழிலில் சுமார் 20 லட்சம் சூடான் ஊழியர்கள் பணிபுரிவதாக சின்ஹுவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. சூடானின் மொத்த தங்க உற்பத்தியில் பாரம்பரிய சுரங்கங்கள் மூலம் கிட்டத்தட்ட 75 சதவீதம் உற்பத்தி செய்யப்படுவதாகவும், 93 டன்களுக்கும் அதிகமாக தங்கம் வெட்டி எடுக்கப்படுவதாகவும் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.