ஒமைக்ரான் வைரஸ் ஒரு புதிய மாறுபாட்டினை உருவாக்கும் வாய்ப்புகளை அதிகம் கொண்டுள்ளது என்று ஐரோப்பாவில் உள்ள உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.
ஸ்டாக்ஹோம், உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ், பல பிரிவுகளாக பிரிந்து மனிதனை மிரட்டி வருகிறது.
தற்போது தென் ஆப்பிரிக்காவில் புதிதாக உருவாகி, பல நாடுகளில் உலவிக்கொண்டிருக்கும் கொரோனாவின் மாறுபாடான ஒமைக்ரான் வைரஸ், முதலில் அதிக பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்று கருதப்பட்டது. ஆனால், அது பரவும் வேகம் அதிகமானாலும், டெல்டாவை விட குறைவான பாதிப்பையே ஏற்படுத்தும் என தகவல் வெளியானது.
இந்த நிலையில், ஒமைக்ரான் வைரஸ் புதிய வைரசை உருவாக்கக்கூடும் என்று ஐரோப்பாவில் உள்ள உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. இது குறித்து உலக சுகாதார அமைப்பின் மூத்த அதிகாரி கேத்தரின் ஸ்மால்வுட் கூறுகையில்,
“தற்போது பரவி வரும் ஒமைக்ரான், அதிகம் பரவும் தன்மையை கொண்டதாக உள்ளது. ஆனால் அதன் பாதிப்பு தன்மை டெல்டாவை விட குறைவாகவே உள்ளது. ஆனால், ஒமைக்ரான் வைரஸ் ஒரு புதிய மாறுபாட்டினை உருவாக்கும் வாய்ப்புகளை அதிகம் கொண்டுள்ளது. அந்த புதிய மாறுபாட்டை கொண்ட வைரஸ் மிகவும் ஆபத்தானதாகவும், அதிக பாதிப்பை ஏற்படுத்தக்கூடியதாகவும் இருக்கலாம்”. இவ்வாறு அவர் கூறினார்.