அமெரிக்காவில் இப்போது டெல்டாவுக்கு பதிலாக ஒமைக்ரான் வைரஸ்தான் ஆதிக்கம் செலுத்தி, அமெரிக்க மக்கள் வாழ்க்கையை சுனாமி போல தாக்கி வருகிறது.
வாஷிங்டன் : வல்லரசு நாடான அமெரிக்காவில் கொரோனா வைரஸ் ருத்ர தாண்டவமாடி வருகிறது. ஒவ்வொரு நாளும் அங்கு தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. நாளும் புதிய உச்சங்களை கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்படுத்தும் நிலை உள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் (திங்கட்கிழமை) அங்கு புதிய உச்சமாக ஒரே நாளில் 10 லட்சத்து 42 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு இந்த தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
4 நாட்களுக்கு முன்பு அங்கு தினசரி பாதிப்பு 5 லட்சத்து 90 ஆயிரமாக இருந்தது. அதைப்போன்று இப்போது இரு மடங்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருப்பது அமெரிக்காவை அதிர வைத்துள்ளது.
இதுவரை வேறு எந்தவொரு உலக நாட்டிலும் தினசரி கொரோனா பாதிப்பு 10 லட்சம் என்ற எண்ணிக்கையைத்தொட்டது கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக அங்கு தினசரி பாதிப்பு விகிதம் 4½ லட்சமாக அதிகரித்துள்ளது.
அமெரிக்காவுக்கு வெளியே இந்தியாவில்தான் கடந்த மே மாதம் 7-ந் தேதி கொரோனா தினசரி பாதிப்பு 4.14 லட்சமாக பதிவாகி இருந்தது.
அமெரிக்காவில் இப்போது டெல்டாவுக்கு பதிலாக ஒமைக்ரான் வைரஸ்தான் ஆதிக்கம் செலுத்தி, அமெரிக்க மக்கள் வாழ்க்கையை சுனாமி போல தாக்கி வருகிறது.
புதிய பாதிப்புகளில் 73 சதவீதம் ஒமைக்ரான்தான் என்று அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.
நியூயார்க், இல்லினாய்ஸ், விஸ்கான்சின் போன்ற வட மாகாணங்களும், புளோரிடா, ஜார்ஜியா, அலபாமா மாகாணங்களிலும் கொரோனா பாதிப்பு மிக மோசமாக உள்ளது.
கடந்த வாரத்தில் அமெரிக்காவில் 100-ல் ஒருவர் கொரோனா பாதிப்புக்குள்ளாகி உள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.
இதன் காரணமாக விமான சேவைகள் ரத்தாகி வருகின்றன. பள்ளி, கல்லூரிகள், அலுவலகங்கள் மூடப்படுகின்றன. நோயாளிகள் வெள்ளத்தால் ஆஸ்பத்திரிகள் மூழ்கடிக்கப்படுகின்றன.
இதற்கு மத்தியில் 12 முதல் 15 வயது வரையிலான சிறுவர், சிறுமியருக்கு பைசர் பூஸ்டர் ‘டோஸ் ’ தடுப்பூசி போடுவதற்கு உணவு மற்றும் மருந்து நிர்வாகம் எப்.டி.ஏ. ஒப்புதல் அளித்துள்ளது.
2-வது ‘டோஸ்’ தடுப்பூசி போட்டு 5 மாதங்கள் ஆன சிறுவர், சிறுமியர் பூஸ்டர் ‘டோஸ்’ தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம்.