தமிழக சட்டசபையின் சிறப்புக் கூட்டம், இன்று காலை நடக்கிறது. உச்சநீதிமன்றம் உத்தரவு காரணமாக, முல்லைப் பெரியாறு அணை தொடர்பாக நிறைவேற்றப்படும் தீர்மானம், கடுமையாக இருக்காது என்று கூறப்படுகிறது.
முல்லைப் பெரியாறு பிரச்னை தீவிரமடைந்து வருவதால், தமிழக அரசியல் கட்சிகள் அனைத்தும், இவ்விஷயத்தில் ஒரே கருத்தைக் கொண்டுள்ளன என்பதை நிலைநிறுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டது. கேரள அரசு அனைத்துக் கட்சிக் கூட்டம், சிறப்பு சட்டசபைக் கூட்டம் போன்றவற்றை நடத்தியது.
இந்நிலையில், தமிழகமும் சிறப்பு சட்டசபைக் கூட்டத்தை நடத்தி, ஒருமித்த கருத்துடன் தீர்மானம் நிறைவேற்ற இருப்பதாக, தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். இதன்படி, இன்று காலை 11 மணிக்கு சட்டசபையை கூட்ட, தமிழக ஆளுநர் ரோசய்யா உத்தரவிட்டுள்ளார்.
இக்கூட்டத்தில், முதல்வர் ஜெயலலிதா தீர்மானத்தை முன்மொழிய உள்ளார். அதன் மீது, சட்டசபையில் உள்ள கட்சிகளின் பிரதிநிதிகள் பேச அனுமதிக்கப்படுவர்.