கர்பால்-இராமசாமி மோதல் தீர்க்கப்பட்டது!

டிஎபியின் தேசியத் தலைவர் கர்பால் சிங்குக்கும் கட்சியின் துணைப் பொதுச்செயலாளரும் பினாங்கு மாநில துணை முதலமைச்சர் II பி. இராசாமிக்கும் இடையிலான மோதல் தீர்க்கப்பட்டு விட்டது என்றும் டிஎபி தலைமைத்துவம் ஒன்றிணைந்த அணியாக 13 ஆவது பொதுத்தேர்தல் சவால்களை எதிர்கொள்ள முனோக்கிச் செல்லும் என்றும் இன்று காலையில் வெளியிடப்பட்ட செய்தி அறிக்கை கூறுகிறது.

டிஎபியின் நாடாளுமன்ற மூத்த தலைவர் லிம் கிட் சியாங் தொடர்பு கொண்டபோது இதனை மீண்டும் உறுதிப்படுத்தினார்.

கர்பால்-இராமசாமி ஆகிய இருவருக்கும் இடையிலான வேறுபாடுகளை தீர்ப்பதற்காக டிசம்பர் 13 இல் டிஎபியின் மத்திய செயற்குழு மூவர் அடங்கிய சிறப்புக்குழுவை அமைத்தது. லிம் குவான் எங், டாக்டர் சென் மான் ஹின் மற்றும் லிம் கிட் சியாங் ஆகியோர் அக்குழுவின் உறுப்பினராவர்.

நேற்று புதன்கிழமை டிசம்பர் 14 இல், மக்கள் ஓசை நாளிதழின் தலைமை ஆசிரியர் எம். இராஜன் அந்நாளிதழ் நவம்பர் 28 இல் வெளியிட்டிருந்த செய்தி தவறானது என்பதை ஒப்புக்கொள்ளும் அறிக்கையை வெளியிட்டார். அடுத்த பொதுத்தேர்தலுக்கான டிஎபி வேட்பாளர்கள் பற்றிய அதன் நவம்பர் 28 செய்தி இராமசாமியிடமிருந்து வரவில்லை என்பதைத் தெளிவுபடுத்தியதோடு அந்தச் செய்தி கர்பாலுக்கும் இராமசாமிக்கும் இடையில் ஏற்பட்ட பகிரங்க சர்ச்சைக்கு காரணமாக அமைந்து விட்டதற்காக அவர் வருத்தம் தெரிவித்தார்.

விரைவில் அவ்விருவருகளுக்கிடையிலான வேறுபாடுகள் தீர்க்கப்படும் என்று நம்பிக்கை தெரிவித்த மக்கள் ஓசையின் தலைமை ஆசிரியர், அவர்களின் தலைமையத்துவ சிறப்புகளுக்கு பாராட்டும் தெரிவித்துள்ளார்.

வரவிருக்கும் 13 ஆவது பொதுத்தேர்தலில் ஒரு புதிய அரசியல் வனப்பை ஏற்படுத்தும் என்ற மக்களின் எதிர்பார்ப்புகளையும் டிஎபி இன் தலைமைத்துவம் மீதான அவர்களின் நம்பிக்கையையும் டிஎபி தலைவர்கள், கர்பால் மற்றும் இராமசாமி உட்பட, நன்கு உணர்ந்துள்ளனர். நாடு சுதந்திரம் அடைந்த 54 ஆண்டுகளில் முதன்முறையாக தேசிய அரசியலில் ஓர் உண்மையான இரு-கூட்டணி முறையின் வழி புத்ராஜெயாவில் மத்திய ஆட்சியில் மாற்றத்தை ஏற்படுத்த இயலும் என்று அவர்கள் நம்புகின்றனர்.

மக்கள் ஓசை அளித்த விளக்கம் மற்றும் டிஎபி தலைமத்துவத்தில் ஒற்றுமை, நெருக்கம் மற்றும் ஒற்றுமை உணர்வு ஆகியவை குறித்த மக்களின்  ஈடுபாடு ஆகியவற்றை கருத்தில் கொண்டு இன்னும் ஓரிரு மாதங்கள் நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் 13 ஆவது பொதுத்தேர்தலுக்கு முழுமூச்சாக களம் இறங்குவதற்கு தயார்படுத்திகொள்ள ஒரு திடமான மற்றும் அர்ப்பணிப்பு மிக்க அரசியல் குழுவாக முன்னேறிச் செல்ல டிஎபியின் மத்திய செயற்குழு தீர்மானித்துள்ளது என்று அச்சிறப்புக்குழுவின் மூன்று உறுப்பினர்களும் விடுத்த கூட்டு செய்தியறிக்கை கூறுகிறது.

 

TAGS: