கொரோனா பாதித்தாலும் தனிமைப்படுத்த தேவையில்லை; இங்கிலாந்தில் அடுத்த வாரம் அமலாகிறது

ஐரோப்பிய நாடுகளில் கொரோனா பாதித்தவர்களை பொது இடங்களுக்கு அனுமதிக்கப் போகும் முதல் நாடாக இங்கிலாந்தே இருக்க உள்ளது.

லண்டன், சீனாவின் உகான் நகரில் கடந்த 2019- ஆம் ஆண்டு  முதன் முதலாக கண்டறியப்பட்ட கொரோனா உலக நாடுகளில் முழுவதும் பரவியது. தொற்று பரவால் கடந்த 2 ஆண்டுகளாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

தொற்று பாதிப்பைக் கட்டுப்படுத்த பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. தற்போது கொரோனா பரவலின் வேகம் உலக அளவில் குறைந்து விட்டாலும், கொரோனா தொற்று பரவல் முழுமையாக கட்டுக்குள் வரவில்லை. இதனால், பல நாடுகளில் இன்னமும் கட்டுப்பாடுகள் அமலில் உள்ளன.  கொரோனா வைரசுக்கு எதிராக தடுப்பூசி போடும் பணியும் நடைபெற்று  வருகிறது.

இதனிடையே,  கொரோனாவுடன் வாழ பழகிக்கொள்ள வேண்டும் என்ற திட்டத்தை செயல்படுத்த இங்கிலாந்து முடிவு செய்துள்ளது. இந்த திட்டத்தின் ஒரு அங்கமாக  அடுத்த வாரம் முதல், கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்கள் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை.

இது தொடர்பாக பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் கூறுகையில், “ கொரோனா பரவலை கட்டுப்படுத்த கொண்டு வரப்பட்ட அனைத்து கட்டுப்பாடுகளும் முடிவுக்கு கொண்டு வரப்பட உள்ளன. இதன் மூலம், நமது சுதந்திரத்தை கட்டுப்படுத்தாத வகையில் மக்கள் தங்களை தாங்களே பாதுகாத்துக்கொள்ள அனுமதி அளிக்கப்படுகிறது” என்றார்.

இந்த திட்டத்தின் முழுமையான வடிவத்தை பாராளுமன்றத்தில் திங்கள் கிழமை போரிஸ் ஜான்சன் வெளியிடுவார் என்று தெரிகிறது. எனினும், இங்கிலாந்து அரசின் இந்த திட்டம் ஆபத்தானது எனவும் தொற்று பாதிப்பு உயரக்கூடும் எனவும் எச்சரித்துள்ளனர்.  ஐரோப்பிய நாடுகளில் கொரோனா பாதித்தவர்களை பொது இடங்களுக்கு அனுமதிக்கப் போகும் முதல் நாடாக இங்கிலாந்தே இருக்க உள்ளது.

dailythanthi