உக்ரைனில் ஏற்பட்டுள்ள பதற்ற நிலையை அடுத்து மாணவர்கள், குடிமக்கள் நாடு திரும்ப வேண்டும் என இந்திய தூதரகம் மீண்டும் அறிவுறுத்தி உள்ளது.
புதுடெல்லி, முன்னாள் சோவியத் ஒன்றிய நாடான உக்ரைனும் அதன் அண்டை நாடான ரஷியாவும் நீண்ட காலமாகவே மோதல் போக்கில் உள்ளன. உக்ரைனை நேட்டோ அமைப்பில் சேர்க்கக்கூடாது என்கிற ரஷியாவின் கோரிக்கையை அமெரிக்கா மற்றும் நேட்டோ அமைப்பு நிராகரித்துவிட்டன. இதன் காரணமாக இந்த மோதல் தற்போது உச்சமடைந்துள்ளது.
உக்ரைன் எல்லையில் ரஷியா சுமாா் 1 லட்சம் படை வீரர்களையும், போர் தளவாடங்களையும் குவித்துள்ளதால் பதற்றம் நிலவி வருகிறது. உக்ரைனை ஆக்கிரமிக்கும் நோக்கத்தில் ரஷியா படைகளை குவித்துள்ளதாக அமெரிக்கா உள்ளிட்ட நேட்டோ நாடுகள் குற்றம்சாட்டி வருகின்றன. இதனை ரஷியா மறுத்து வருகிறது.
உக்ரைன் மீது ரஷியா படையெடுக்கும் என அமெரிக்க உளவுத்துறை அதிகாரிகள் கணித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. உளவுத்துறையின் இந்த எச்சரிக்கையை தொடர்ந்து, உக்ரைனில் இருக்கும் அமெரிக்கர்கள் அனைவரும் அங்கிருந்து வெளியேற வேண்டும் என வெள்ளை மாளிகை அறிவுறுத்தியுள்ளது. மேலும் பல நாடுகள் உக்ரைனில் உள்ள தங்கள் நாட்டு தூதர்களை திரும்ப பெற்றதுடன், தங்கள் நாட்டு மக்களையும் உடனே நாடு திரும்ப வேண்டும் என எச்சரித்துள்ளன.
இதேபோன்று, அந்நாட்டில் இருக்கும் இந்தியர்கள் உடனே வெளியேற வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இதற்கேற்ப உக்ரைனுக்கான இந்திய தூதரகத்தின் டுவிட்டர், முகநூல் பக்கங்களில் தகவல்களை அறிந்து கொள்ளலாம் என இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.
உக்ரைனில் அதிக அளவில் இந்திய மாணவர்கள் தங்கியுள்ளனர். இதனை தொடர்ந்து, உக்ரைனில் தங்கியிருப்பதற்கான அத்தியாவசிய பணி ஏதும் இல்லாதவர்கள் மற்றும் மாணவர்கள் அனைவரும் உடனடியாக வெளியேறும்படி இந்திய தூதரகம் அறிவுறுத்தி உள்ளது.
ரஷ்யா, உக்ரைன் மீது படையெடுக்க கூடிய சாத்தியம் உள்ளது என்ற காரணத்தினால் பதற்ற நிலை காணப்படுகிறது. இதனை முன்னிட்டு, இந்திய குடிமக்கள் கிடைக்க கூடிய ஏதேனும் ஒரு விமானத்தில் நாட்டுக்கு திரும்ப வேண்டும் என டுவிட்டர் வழியே உக்ரைனில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்து உள்ளது.
உக்ரைனில் இருந்து இந்தியாவுக்கு இயக்கப்படும் விமானங்களை பயன்படுத்தி கொள்ள வேண்டும் என அறிவுரையும் வழங்கியுள்ளது. இந்திய மாணவர்கள், உக்ரைனுக்கு தங்களை அழைத்து சென்றவர்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருக்கும்படியும், இந்திய தூதரகத்தின் பேஸ்புக், வலைதளம் மற்றும் டுவிட்டரை தொடர்ந்து பின்பற்றவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
உக்ரைனில் உள்ள தகவல் மற்றும் உதவி தேவைப்படும் இந்தியர்கள், மத்திய வெளிவிவகார அமைச்சகத்திடம் தொடர்பு கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.