பிலோமினா தமிழ்ப்பள்ளி, மலேசியாவில் புகழ் பெற்ற ஒரு தமிழ்ப்பள்ளி. அதன் உண்மையான பெயர் செயிண்ட் பிலோமினா கான்வெண்ட் தமிழ்ப்பள்ளி ஆகும். இப்பள்ளி ஈப்போவில் உள்ள கான்வெண்ட் ஆங்கிலப் பள்ளியின் கிளைப் பள்ளியாக ஆங்கிலேயர் காலகட்டத்தில் இயங்கி வந்த இது 1938 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 8 ஆம் தேதி அதிகாரப்பூர்வ தமிழ்ப்பள்ளியானது.
பல சிறப்புக்களைத் தமிழ்மொழி ஆர்வலர்களின் வழி அன்று தொட்டே இந்தப்பள்ளியும் பெற்று வருவது பெருமைக்குரியது. அப்பள்ளியின் ஆழமான வளர்ச்சிக்கு அடித்தளம் அமைக்க அன்று தொட்டே ஈடுபட்ட அவ்வட்டார மக்களைப் பாராட்ட வேண்டும்.
அப்போது அப்பள்ளியில் 21 மாணவிகளும் 3 ஆசிரியர்களும் இருந்தனர். முதலாம் வகுப்பிலிருந்து மூன்றாம் வகுப்பு வரை மூன்று வகுப்புகள் மட்டுமே இருந்தன. 1941 ஆம் ஆண்டு மாணவிகளின் எண்ணிக்கை 90 ஆக உயர்ந்தது. தற்போது 377 மாணவிகளும் 26 ஆசிரியர்களும் உள்ளனர். (இணையத்தகவல்கள்)
அரசாங்க தேர்வுகளில் சிறப்பாக விளங்கிவரும் இப்பள்ளி, 2013-இல் யுபிஎஸ்ஆர் தேர்வில் பேரக் மாநிலத்தின் சிறந்த தமிழ்ப்பள்ளியாகத் தேர்வானது.
1990 ஆம் ஆண்டுகளில் கரையான்கள் அரிப்பினால் பள்ளி சரிந்து விழும் ஒரு நிலைமை ஏற்பட்ட போது பொது மக்களின் ஈடுபாடும் அரசியல் கட்சித் தலைவர்களின் ஈடுபாடும் 1997-ஆண்டில் ஒரு புதிய பள்ளி உருவாகக் காரணமாக அமைந்தன.
இன்று ஒரு மூன்று மாடிக் கட்டடம் உள்ள இப்பள்ளியில் 12 வகுப்பறைகள், ஓர் அரங்கம், ஒரு கணினி அறை உள்ளன. இருப்பினும் இப்பள்ளி மேலும் மேம்படைய அரசாங்கத்தின் நிதியுதவி கோரப்பட்டது.
அப்பள்ளியின் இணைக்கட்டட நிதிக்காக 2018ல் தேர்தலுக்கு முன்பு அன்றைய பாரிசான் ஆட்சியின் போது நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகக் கூறி அதற்காக 26 லட்சம் வெள்ளிக்கான மாதிரிக் காசோலையும் வழங்கப்பட்டது. நாட்டின் ஆறாவது பிரதமரான நஜிப் ரசாக் தமிழ்ப்பள்ளிக்கான நிதி உதவிகளை அதிகமாக அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
அதன் பிறகு பாரிசான் ஆட்சி கவிழ்ந்து நம்பிக்கை கூட்டணி ஆட்சி அமைந்தது.
அந்த ஆட்சியின் போது இந்த நிதி தொடர்பாக அப்போதையை துணைக்கல்வி அமைச்சர் தியோ நீ சின் அவர்கள் அரசிடம் இருந்து நிதி பெறுவதற்குப் பெரு முயற்சியும் செய்தார். அந்த நிதியை நிர்வகிப்பதற்காக சில ஆலோசனைகளை வழங்கி பள்ளி நிர்வாகத்திடம் அதற்கேற்ற ஒத்துழைப்பையும் வழங்கும்படி கேட்டுக்கொண்டதாக பேரா தமிழ்ப்பள்ளி மேலாளர் வாரிய சங்கத்தின் தலைவர் முனைவர் ந.முனியாண்டி கூறுகிறார்.
இந்த நிதியின் நிலை சார்பாக 2018ல் நம்பிக்கை கூட்டணி ஆட்சிக்கு வந்த போது அதில் ஒருவராக இருந்தவர் ஆ.சிவசுப்ரமணியம். அவர் தற்போது இந்த நிதி நிலவரம் சார்பாக ஆர்வத்துடன் வினாக்களை எழுப்பி இருப்பதாக முனியாண்டி கூறுகிறார்.
இவரின் கூற்றுப்படி, 2018-இல் ஆட்சியில் சிவசுப்ரமணியம், ஆளும் கட்சியிலிருந்தார். அதன்பிறகு ஆட்சி மாறிய பிறகு, கட்சி தாவுதல் வழி மீண்டும் ஆளும் கட்சியில்தான் உள்ளார்.
இந்த சூழலில், இப்பள்ளிக்கு ஒரு விவேகமான தீர்வை காணா இவர் முற்பட வேண்டும் என்கிறார் முனியாண்டி. இது சார்பாகப் பொறுப்பற்ற வினாக்களைப் பத்திரிக்கை வாயிலாகத் தொடுக்கும் சிவசுப்ரமணியம், சம்பந்தப்பட்ட நபர்களுடன் ஒருங்கிணைந்து செயல்பட முன்வர வேண்டும் என்கிறார் முனைவர் முனியாண்டி. அவரின் நடத்தை வரலாற்று பூர்வமாக வியப்புடன் செயல்படும் பள்ளிக்குத் திகைப்பூட்டுவதாக இருக்கிறது என்கிறார் இந்த தமிழ் ஆர்வலர்.