சிறையில் இருந்தாலும் நீதிக்காக போராடுவேன், அன்வார் சூளுரை

குதப்புணர்ச்சி வழக்கில் தம்மைக் குற்றவாளி என்று தீர்ப்பளித்து கொடுஞ்சிறைக்குள் போட்டுப் பூட்டிவைத்தாலும்  நீதிக்கான தமது போராட்டம் ஓயாது என்கிறார் பிகேஆர் நடப்பில் தலைவர் அன்வார் இப்ராகிம்.

அவ்வழக்கின் தீர்ப்பை ஜனவரி 9-இல் தெரிவிப்பதாக நீதிபதி முகம்மட் சபிடின் முகம்மட் டியா அறிவித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அன்வார், சிறைவாசம் தம் முடிவை மாற்றிவிடாது என்றார்.

 “சிறையில் இருந்தாலும் நீதிக்காக போராடுவேன்”, என்று கோலாலம்பூர் உயர்நீதிமன்ற வளாகத்தில் அன்வார் கூறினார்.

ஜனவரி 9-இல் தீர்ப்பு என்று அறிவிக்கப்பட்டிருப்பதைக் குறிப்பிட்ட அன்வார் அதன் தொடர்பில் ஒரு கேள்வியையும் எழுப்பினார்.

“அந்தத் தேதி நிர்ணயிக்கப்பட்டதற்கான உண்மைக் காரணத்தை தெரிந்துகொள்ள ஆவலாக இருக்கிறது. ஒருவேளை அது நாடாளுமன்றக் கலைப்புக்கு வசதியாக இருக்குமோ?”, என்றார்.

குறுகிய காலத்தில் அதாவது மூன்று வாரங்களில் தீர்ப்பு என்பதை அவரின் வழக்குரைஞர் கர்பால் சிங் “குறிப்பிடத்தக்க ஒன்றாக” நினைக்கவில்லை, ஆனால் அன்வார் “குறிப்புகளே ஆயிரக்கணக்கான பக்கங்களுக்கு இருக்கின்றன”அவற்றை வாசிக்கவே “நீண்ட காலம்”பிடிக்குமே என்று நினைக்கிறார்.

“நுட்பமான விவகாரங்கள் பற்றியெல்லாம் சாட்சியங்கள் அளிக்கப்பட்டன….அவற்றையெல்லாம் படித்துப்பார்க்க பல வாரங்கள் ஆகும்…..அதற்குள் தேர்தலும் நடந்து விடலாம்”, என்றவர் குறிப்பிட்டார்.

தீர்ப்புப்  பற்றிக் குறிப்பிட்ட அன்வார், எதிர்வாதத்தில் நியாயமான ஐயப்பாடு எதுவும் எழுப்பப்படவில்லை என்று கூறப்படுவதை “பொருந்தாத, நியாயமற்ற, கொடூரமான” வாதம் என்றார்.

 “நேரிய தீர்ப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்ப்போம்.”

அன்வார் கூறியதையே கர்பாலும் எடுத்தொலித்தார். “சாட்சியங்களின் அடிப்படையில் பார்த்தால் அன்வாரை விடுவிக்க வேண்டும். குற்றச்சாட்டுமீது நியாயமான ஐயப்பாட்டை நிறையவே எழுப்பியிருக்கிறோம்”, என்றார்.

இன்று நீதிமன்றம் முழுக்க பிகேஆர் தலைவர்களும் ஆதரவாளர்களும் நிரம்பியிருந்தனர். வழக்கின் முடிவைத் தெரிந்துகொள்ள சிலர் அலோர் ஸ்டாரிலிருந்தும் வந்திருந்தனர்.

வழக்கு முடிந்து அன்வார் வெளியில் வந்ததும் அவரைச் சூழ்ந்துகொண்ட சுமார் 150 ஆதரவாளர்கள் “ரிபோர்மாசி” என்று முழக்கமிட்டனர்.