காங்கோ நாட்டில் சரக்கு ரெயில் தடம் புரண்டு 60 பேர் உயிரிழப்பு – 50 க்கும் மேற்பட்டோர் படுகாயம்

மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோ குடியரசில்,  போதிய பயணிகள் ரெயில் சேவை இல்லாமல் மக்கள் சரக்கு ரெயில்களில் பயணிக்கும் சூழல் நிலவி வருகிறது.

அந்நாட்டின் லூயன் மாகாணத்தில் இருந்து டென்கி நகருக்கு சரக்கு ரெயில் ஒன்று புறப்பட்டுச் சென்றுள்ளது.  இதில் 100-க்கும் மேற்பட்டோர் சட்ட விரோதமாக பயணம் மேற்கொண்டிருந்தனர்.

காங்கோவின் தெற்கில் உள்ள லுவாலாபா மாகாணத்தில் கிடென்டா மற்றும் பையோஃப்வே கிராமங்களுக்கு இடையே அந்த ரயில் சென்ற போது தடம் புரண்டது.

பள்ளத்தாக்கு பகுதியில் சென்ற போது தண்டவாளத்தை விட்டு சாய்வாகச் சென்று ரெயில்  விபத்துக்குள்ளானதாக உள்ளூர் நிர்வாகி க்ளெமென்டைன் லுடாண்டா தெரிவித்தார். இதில் 60 பேர் உயிரிழந்தனர். மேலும் 50க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மீட்புக்குழுவினர் ரெயில் பெட்டி இடிபாடுகளில் கிடந்த உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டனர். காயமடைந்தவர்களை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

 

Malaimalar