அன்வார் இப்ராஹிம் மீதான இரண்டாவது குதப்புணர்ச்சி வழக்கு விசாரணையில் இன்று, பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் நபரின் குதத்திற்குள் விந்து வைக்கப்பட்டிருக்கும் சாத்தியத்தை அரசு தரப்பு எழுப்பியது.
அரசு தரப்பின் தலைமை வழக்குரைஞர் முகமட் யூசோப் ஜைனல் அபிடின், ஆஸ்திரேலிய தடயவியல் நோய்க் கூறு நிபுணருமான இரண்டாவது பிரதிவாதித் தரப்பு சாட்சி டாக்டர் டேவிட் வெல்ஸையை விசாரணை செய்த போது அந்த விஷயத்தை எழுப்பினார்.
புகார்தாரரான முகமட் சைபுல் புஹாரி அஸ்லானுடைய குதத்தில் காணப்பட்ட விந்து மாதிரிகளின் மூலத்தன்மை குறைந்திருக்கலாம், திருத்தம் செய்யப்பட்டிருக்கலாம் என பிரதிவாதித் தரப்பு ஏற்கனவே வாதிட்டதைக் கருத்தில் கொண்டு முகமட் யூசோப் அந்தக் கேள்வியை எழுப்பினார்.
வழக்கமாக விரைவாகப் பதில் அளித்து வந்த வெல்ஸ் சிறிது நேரம் தாமதித்த பின்னர் தாம் அது குறித்துக் கருத்துக் கூற விரும்பவில்லை என்றார்.
யூசோப்: ஒருவர் விந்துவை வைத்தால் உங்களுக்கு அந்த நபருடைய விந்து அங்கு இருக்க வேண்டும் அல்லாவா?
வெல்ஸ்: (நீண்ட அமைதிக்குப் பின்னர்) நான் அந்த விஷயத்தை மரபணு நிபுணர்களிடம் விட்டு விடுகிறேன்.
சைபுல் குதத்திலிருந்து எடுக்கப்பட்ட விந்து மாதிரிகளில் மரபணுவைக் கண்டு பிடித்ததாக இரசாயன நிபுணரான டாக்டர் சியா லே ஹொங் ஏற்கனவே சாட்சியமளித்துள்ளார்.
தாம் அந்த மரபணுவை அன்வாருடைய மரபணுவுடன் ஒப்பிட்டுப் பார்த்ததாக இன்னொரு ரசாயன நிபுணரான டாக்டர் நோர் அய்டோரா சாடோனும் கூறியிருந்தார்.
திறந்த இடத்தில் வைக்கப்பட்டிருந்தால் விந்து எவ்வளவு காலத்திற்கு மூலத் தன்மை மாறாமல் இருக்கும் என்றும் வெல்ஸிடம் வினவப்பட்டது. அதற்குப் பதில் அளித்த அவர், 36 மணி நேரம் முதல் 48 மணி நேரம் வரை இருக்கலாம் எனச் சொன்னார்.
“36 மணி நேரத்துக்கு அப்பால் எடுக்கப்பட்ட மாதிரிகள் என்னிடம் இருந்தால் அது குறித்து நான் கவலைப்படுவேன்,” என்றார் அவர்.
சைபுல் விவகாரத்தில் 56 மணி நேரம் கழித்து மாதிரி எடுக்கப்பட்டது. அதாவது அன்வார் அவரைக் குதப்புணர்ச்சியில் ஈடுபடுத்தியதாகக் கூறப்பட்ட இரண்டு நாட்களுக்குப் பின்னர். கோலாலம்பூர் மருத்துவமனைக்கு அவர் சென்ற போது அந்த மாதிரிகள் எடுக்கப்பட்டன.
விந்து 65 மணி நேரம் வரையில் மூலத்தன்மை மாறாமல் இருக்கும் என்ற கணிப்பைக் கூறும் 30 ஆண்டுகள் பழமையான மருத்துவப் புத்தகம் ஒன்று வெல்ஸிடம் காண்பிக்கப்பட்டது. அத்தகையை கருத்துக்கள் இருப்பதை வெல்ஸ் ஒப்புக் கொண்டார்.
யூசோப்: விந்து 65 மணி நேரம் வரை கெடாமல் இருக்கும் என ஒர் ஆய்வு கூறுகிறது.
வெல்ஸ்: நான் அந்த ஆய்வு குறித்து எச்சரிக்கிறேன். ஆம் 30 ஆண்டு காலப் புத்தகம் உள்ளது. ஆனால் எல்லாம் அந்த ஒரே ஒரு விவகாரத்தை மட்டும் சார்ந்திருக்க முடியாது. சில சந்தேகங்களும் உள்ளன.