‘அகதிகள்’ நாட்டை விட்டு வெளியேற வேண்டும் – இது சரியான அனுகு முறையல்ல, ஹம்சா அவசரபடக்கூடாது

ரோஹிங்கியா அகதிகளை நீண்டகாலமாக குடியேற்ற தடுப்புக் கிடங்குகளில் அடைத்து வைக்கும் மலேசிய அரசின் நடவடிக்கை, மற்ற அகதிகள் சட்டவிரோதமாக நாட்டிற்குள் நுழையாமல் இருப்பதற்கு முன்னுதாரணமாக அமைவதாக உள்துறை அமைச்சர் ஹம்சா ஜைனுதீன்(Hamzah Zainudin) தெரிவித்துள்ளார்.

அமைச்சர் ஹம்சா ஜைனுதின், தடுப்புக்காவலில் உள்ள அகதிகளை மோசமாக நடத்துவதால், சுங்கை பக்காப் குடியேற்ற தடுப்புக் கிடங்கில் இருந்து 528 அகதிகள் சமீபத்தில் பெருமளவில் வெளியேற வழிவகுத்தது என்ற விமர்சனங்களை மறுத்துள்ளார். மலாய் நாளிதழான Utusan Malaysia, மேற்கோள் காட்டியுள்ளது.

பெண்கள், குழந்தைகள் உட்பட 6 பேர் தப்பிச் செல்லும் போது உயிரிழந்தனர்.

மாறாக, மலேசியா ரோஹிங்கியா அகதிகளை மனிதாபிமான அடிப்படையில் அவர்களுக்கு உணவு மற்றும் தங்குமிடம் அளித்து நல்ல முறையில் நடத்தியதாகவும், அவர்கள் இங்கு மகிழ்ச்சியற்றவர்களாக இருந்தால் “நாட்டை விட்டு வெளியேறலாம்” என்றும் ஹம்சா வலியுறுத்தினார்.

அவர்களை விடுவிக்காத மலேசியாவின் நடவடிக்கை, மற்ற அகதிகள் சட்டவிரோதமாக மலேசியாவிற்குள் நுழையாமல் இருப்பதற்கு முன்மாதிரியாக இருக்கிறது,” என்று லருட் எம்.பி (Larut MP) நேற்று தனது தொகுதியில் நடந்த நிகழ்ச்சிக்குப் பிறகு கூறினார்.

“எனவே தடுப்புக்காவலில் இருப்பது சலிப்பு அடையும் வரை நாங்கள் அவர்களை ‘சிறையில்’ வைக்கிறோம்”.

“அவர்கள் சுதந்திரம் விரும்பினால், மீண்டும் மலேசியாவிற்கு வர வேண்டாம். அவர்கள் நன்றாக நடத்தப்படவில்லை என்று  நினைத்தால், அவர்கள் தங்கள் சொந்த நாட்டிற்கு திரும்ப வேண்டும்,” என்று ஹம்சா மேலும் கூறினார்.

குடிவரவுக் கிடங்கில் இருந்து தப்பிச் சென்ற 528 கைதிகளும் 2020 ஆம் ஆண்டு முதல் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்த ரோஹிங்கியா அகதிகள் என்பதை அமைச்சர் முன்னர் உறுதிப்படுத்தினார். அவர்களில் பெரும்பாலோர் லங்காவி கடற்கரையில் அவர்களது படகுகள் தரையிறங்க முயன்ற இடத்தில் கைது செய்யப்பட்டனர்.

 

கடைசி  நிலவரப்படி, மொத்தம் 432 கைதிகள் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், 96 பேர் இன்னும் தலைமறைவாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மலேசிய குடிவரவு சட்டம் அகதி அந்தஸ்தை அங்கீகரிக்கவில்லை. அதே நேரத்தில் காவலில் உள்ள ஆவணமற்ற பிற புலம்பெயர்ந்தோரை அவர்களின் அந்தந்த தூதரகங்களின் உதவியுடன் நாடு கடத்துவது இங்கு மேற்கொள்ளப்பட்டது.

இந்த சம்பவத்திற்கு பதிலளித்த அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் உயர் ஆணையர், The United Nations High Commissioner for Refugees (UNHCR), ஆகஸ்ட் 2019 முதல் மலேசியாவில் உள்ள குடிவரவு தடுப்பு மையங்களை அணுக குடிவரவு அதிகாரிகளிடம் இருந்து அனுமதி பெறவில்லை என்று கூறினார்.

“இது துரதிருஷ்டவசமாக, சர்வதேச பாதுகாப்பு தேவைப்படுபவர்களை கண்டறியவும், அவர்களின் விடுதலையை ஆதரிப்பதற்காகவும் கைதிகளை சந்திப்பதை தடுக்கிறது,” என்று UNHCR நிறுவனம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

‘இயற்கை நீதியை துஷ்பிரயோகம் செய்தல்’

ஹம்சாவின் அறிக்கை குறித்து கருத்து தெரிவித்த North-South Initiative (NSI) அட்ரியன் பெரேரா (Adrian Pereira), ரோஹிங்கியாக்கள் எதிர்கொள்ளும் சூழ்நிலையை “அடிப்படை நீதியின் கொள்கைகளை தவறாகப் பயன்படுத்துவதாக” விவரித்தார்.

மியான்மர் அரசியல் வன்முறையை அனுபவித்து வருகிறது, குறிப்பாக ரோஹிங்கியா சமூகத்திற்கு எதிராக என்பது தெரிந்த உண்மை.

“அவர்கள் இங்கு வந்தால், UNHCR நடைமுறைகளின்படி புகலிடக் கோரிக்கையாளர்களுக்கான உரிய நடைமுறைகளை மேற்கொள்ள அவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும்,” என்று பெரேரா மலேசியாகினியிடம் கூறினார்.

அவர்கள் விரும்பி இங்கு வரவில்லை, மியான்மாரில் தொடர்ந்து வாழ முடியாததே அதற்கு காரணம்.

இதனால் மலேசியா ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் உறுப்பினராகத் தோற்றமளிக்கவில்லை,” என்று அவர் கூறினார்.

காலவரையற்ற தடுப்புக்காவலில் உள்ளவர்களில், தண்டனைக் காலம் முடிந்து சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட அகதிகளும் அடங்குவர் என்று NSI முன்பு கூறியது . அகதிகளுக்கு தூதரக சேவைகள் அல்லது வேறு நாட்டிற்குச் செல்வதற்கான உதவிகள் இல்லை.

இதற்கிடையில், அகதிகளை உடனடியாக நாடுகடத்தும் திட்டங்கள் எதுவுமின்றி,  குடியேற்ற தடுப்புக் கிடங்கில் கைது செய்து தடுத்து வைத்திருப்பதன் பின்னணியில் உள்ள காரணங்களை விளக்குமாறு சுஹாகம் அரசாங்கத்தை வலியுறுத்தியிருந்தார்.