சீனாவின் நன்கொடையை ஏற்கமறுத்த அதிகாரிகள்!

சீனாவில் இருந்து இலங்கையின் வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகளுக்கு விநியோகிக்கப்பட்ட அரிசி, சர்க்கரை, பருப்பு போன்றவற்றை கொண்ட பொதிகள் தொடர்பில், வெளிநாட்டு சேவை அதிகாரிகள் சங்கம், தமது கடுமையான ஆட்சேபனையை வெளியிட்டுள்ளது.

இந்த செயற்பாட்டுக்கு வெளிவிவகார செயலாளர் ஜயநாத் கொலம்பகேவினால் அங்கீகாரம் வழங்கியமையை சங்கம் கண்டித்துள்ளது. சீனத் தூதரகம் இந்த நிதியை சீன நட்புறவு சங்கத்திற்கு வழங்கியுள்ளது.

இதனையடுத்து வெளிவிவகார அமைச்சின் நிர்வாக சேவையைச் சேர்ந்த அதிகாரி ஒருவர், வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகளின் பெயர்கள் மற்றும் முகவரிகளை அறிந்துக்கொள்ள முயற்சித்த போதே இந்த தகவல் வெளியாகியுள்ளது.

இந்தநிலையில், தமது ஆட்சேபனையை வெளியிடும் முகமாக, வெளிநாட்டு சேவை அதிகாரிகள் சங்கத்தின் பிரதிநிதிகள் வெளிவிவகார செயலாளர் கொலம்பகேவை சந்தித்தனர்.

இலங்கை வெளிநாட்டு சேவை உறுப்பினர்கள் அத்தகைய நன்கொடைகளை ஏற்றுக்கொள்வது பொருத்தமானது அல்ல என்றும், இது வெளிநாட்டு சேவையையும் வெளியுறவு அமைச்சகத்தையும் இக்கட்டான சூழ்நிலையில் தள்ளும் என்றும் அவர்கள் வெளிவிவகார செயலாளரிடம் சுட்டிக்காட்டினர்.

நிலைமையை சமாளிக்கும் முயற்சியில், வெளிவிவகார செயலாளர் கொலம்பகே, உணவுப் பொதிகளை வெளிவிவகார அமைச்சின் நலன்புரிச் சங்கம் ஏற்றுக்கொள்ளலாம் என்று தெரிவித்தார். எனினும் கிடைத்த தகவலகளின்படி, வெளிவிவகார அமைச்சின் இராஜதந்திர அதிகாரிகள் மட்டுமல்ல, வெளியுறவு அமைச்சகத்தில் உள்ள மற்ற அனைத்து ஊழியர்களும் சீனாவின் உணவுப் பொதிகளை ஏற்கபோவதில்லை என்று குறிப்பிட்டுள்ளதாக ஆங்கில செய்தித்தாள் ஒன்று கூறுகிறது.

 

 

IBC Tamil