வாஷிங்டன்: உக்ரேன் மீது ரஷ்யா படையெடுத்துவரும் நிலையில், நேட்டோ கூட்டணியில் சேர சுவீடனும் பின்லாந்தும் விண்ணப்பித்துள்ளதைத் தொடர்ந்து, அந்நாட்டுத் தலைவர்களை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் சந்தித்தார்.
சுவீடன் பிரதமர் மெக்டலினா ஆன்டர்சன், பின்லாந்து அதிபர் சாவ்லி நினிஸ்டோவை வெள்ளை மாளிகையில் சந்தித்து நேட்டோ விண்ணப்பம் குறித்து திரு பைடன் கலந்தாலோசித்தார்.
“இது வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வு. ஐரோப்பிய பாதுகாப்பில் இது மிக முக்கியமான தருணம். நீண்டகாலமாக நடுநிலை வகித்து வந்த இரு நாடுகள், உலகின் சக்திவாய்ந்த தற்காப்புக் கூட்டணியில் சேரவிருக்கின்றன,” என்று வெள்ளை மாளிகை தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன் கூறினார்.
உக்ரேன் மீதான ரஷ்யாவின் படையெடுப்புக்கு எதிராக ஐரோப்பாவை ஒன்றுதிரட்டுவதற்கு திரு பைடன் முன்னுரிமை அளித்து வருகிறார். ஆனால், நேட்டோவில் சுவீடனும் பின்லாந்தும் சேருவது குறித்து துருக்கி கேள்வி எழுப்பியுள்ளது. ஆனாலும், இந்த விவகாரத்தில் துருக்கியின் கேள்விக்குப் பதிலளிக்க முடியும் என அமெரிக்க அதிகாரிகள் நம்புவதாக திரு சல்லிவன் செய்தியாளர்களிடம் கூறினார். நேட்டோவில் புதிதாக ஏதாவது ஒரு நாடு சேர, அந்தக் கூட்டணியைச் சேர்ந்த உறுப்பு நாடுகள் அனைத்தும் ஒப்புதல் அளிக்க வேண்டும்.
உக்ரேனுக்கு ஆயுதங்களையும் மனிதாபிமான உதவியையும் வழங்குவதற்காக, $40 பில்லியன் நிதியளிக்க அமெரிக்க காங்கிரசிடம் இருந்து ஒப்புதல் பெறவிருக்கும் வேளையில், திரு பைடனின் இந்தச் சந்திப்பு இடம்பெற்றது.
Tamilmurasu