டெக்சஸ் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தின்போது காவல்துறையினர் உடனடியாக வகுப்பறைக்குள் செல்லாமல் வெளியில் காத்திருந்தது தவறான முடிவு என்று டெக்சஸ் பொதுப் பாதுகாப்புத் துறையின் இயக்குநர் ஸ்டீவன் மெக்ரா சொன்னார்.
துப்பாக்கிச் சூடு நடந்துகொண்டிருந்தபோது, அங்கிருந்த மாணவர்கள் குறைந்தது ஆறு முறையாவது 911 என்ற அவசர உதவி எண்ணிற்கு அழைத்து உதவி கேட்டுக் கெஞ்சியது தெரிய வந்துள்ளது.
அதேசமயத்தில் கிட்டத்தட்ட 20 அதிகாரிகள் பள்ளியின் கூடத்தில் கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் காத்திருந்தனர்.
18 வயது சல்வடோர் ரமோஸ் என்பவன் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 19 பிள்ளைகள், 2 ஆசிரியர்கள் கொல்லப்பட்டனர்.
துப்பாக்கிக்காரன் உள்ளே தடுத்து வைக்கப்பட்டுவிட்டதாகவும் பிள்ளைகள் ஆபத்தில் இல்லை என்றும் உவால்டி மாவட்ட காவல் துறை அதிகாரி நம்பியதாகவும் அதனால், போலிசார் தயாராக நேரம் அளிக்கப்பட்டதாகவும் மெக்ரா தெரிவித்தார்.
“இது தவறான முடிவு,” என்றார் அவர்.
இதற்கிடையே பேசிய முன்னாள் அதிபர் டிரம்ப், துப்பாக்கிச் சட்டங்களைக் கடுமையாக்குவதற்கான அழைப்புகளை நிராகரித்தார்.
ஹூஸ்டனில் நடைபெற்ற தேசிய துப்பாக்கி சங்கத்தின் கூட்டத்தில் பேசியபோது அவர் இவ்வாறு சொன்னார்.
நல்லவர்கள் ‘தீமைக்கு’ எதிராக தங்களைத் தற்காத்துக்கொள்ள துப்பாக்கிகள் அனுமதிக்கப்பட வேண்டும் என்று கூறினார்.
மாறாக ஒரே நுழைவாயில், ஆயுதமேந்திய போலிஸ் அதிகாரி எனப் பள்ளிக்கூடங்களில் பாதுகாப்பைப் பலப்படுத்த வேண்டும் என்றார் அவர்.
“உக்ரேனுக்கு ராணுவ உதவி செய்வதைவிட, பள்ளிகளில் பாதுகாப்பைப் பலப்படுத்த முன்னுரிமை கொடுக்கவேண்டும்,” என்று அரசியல்வாதிகளை அவர் சாடினார்.
Tamilmurasu