மலேசியாவிலிருந்து 2009ம் ஆண்டு 150 பில்லியன் ரிங்கிட் கள்ளத்தனமா வெளியேறியதாகக் கூறப்படுவது புதிய விஷயமல்ல. அத்தகையக் கசிவுகளைக் கட்டுப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக நிதித் துணை அமைச்சர் டொனால்ட் லிம் கூறுகிறார்.
வாஷிங்டனை தளமாகக் கொண்ட ஜிஎப்ஐ உலக நிதி நேர்மை அமைப்பு வெளியிட்ட விவரங்களை அரசாங்கம் அறியும் என்றும் அவர் சொன்னார்.
அந்த அமைப்பு வெளியிட்ட புள்ளி விவரம், கள்ளத்தனமாக மூலதனம் வெளியே போகும் நாடுகள் பட்டியலில் ஐந்தாவது இடத்தில் இருப்பதைக் காட்டியது.
“இது வரை புதிய விஷயம் எதுவும் கொண்டு வரப்படவில்லை. அந்த விவரத்தை ஏற்கனவே ஜிஎப்ஐ தெரிவித்து விட்டது. அதனை தடுப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து நாடாளுமன்றத்திலும் அறிவிக்கப்பட்டு விட்டது,” என்றும் அவர் தொலைபேசிப் பேட்டி ஒன்றில் கூறினார்.
கள்ளத்தனமாக பணம் வெளியேறுவதற்கு கள்ளப்பணத்தை வெள்ளையாக்கும் நடவடிக்கைகள் காரணம் என தேசிய போலீஸ் படைத் தலைவர் இஸ்மாயில் ஒமார் கடந்த வெள்ளிக்கிழமை வெளியிட்ட கருத்தைப் பிரதிபலிக்கும் வகையில் லிம் அறிக்கை அமைந்துள்ளது. அத்தகைய குற்றங்களில் ஈடுபடுகின்றவர்களுடைய சொத்துக்களை முடக்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாகவும் இஸ்மாயில் ஒமார் அறிவித்தார்.
ஜிஎப்ஐ வெளியிட்ட 150 பில்லியன் ரிங்கிட் மதிப்பீடு பாங்க் நெகாரா மதிப்பீட்டுக்கு இணையாக உள்ளதா என்னும் கேள்விக்குப் பதில் அளித்த லிம் அந்தத் தொகை “உண்மையான புள்ளி விவரமாக இருக்க முடியாது” என்றார்.
“காரணம் யாரும் உண்மையான விவரத்தை உறுதி செய்ய முடியாது. முழு விவரம் இல்லாததால் அது நமக்குத் தெரியாது. எனக்குத் தெரிந்த வரை ஜிஎப்ஐ அது குறித்து பாங்க் நெகாராவுடன் தொடர்பு கொண்டுள்ளது,” என்றார் அவர்.
நிதி அதிகாரிகள் தொடர்ந்து “நிலைமையைக் கண்காணித்து வந்த போதிலும்” திறந்த பொருளாதாரமாக இருப்பதால் மலேசியா எதிகொள்ளும் பிரச்னைகளில் அதுவும் ஒன்று எனவும் லிம் குறிப்பிட்டார்.
2010ம் ஆண்டு நாட்டின் மொத்த வணிக அளவு 1.2 டிரில்லியன் ரிங்கிட் ஆகும். இவ்வாண்டு அது 7 விழுக்காடு வளர்ச்சி காணும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அந்தப் பிரச்னையைச் சமாளிப்பதற்கு பாங்க் நெகாரா இது வரையில் “நல்ல நடவடிக்கைகளை” எடுத்துள்ளது. நாணய மாற்று வணிகர்கள் மீது கடுமையான விதிமுறைகள் அமலாக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
ஜிஎப்ஐ வெளியிட்ட அதிர்ச்சியூட்டும் தகவலின் படி 2009ம் ஆண்டு 150 பில்லியன் ரிங்கிட் கள்ளத்தனமாக நாட்டிலிருந்து வெளியேறியுள்ளது. 2000-2009 கால கட்டத்தில் மொத்தம் 889 பில்லியன் ரிங்கிட் சட்டவிரோதமாக வெளியேறியது.