வட­கொ­ரியா தலை­மை­யில் ஆயு­தக் களைவு மாநாடு

ஏவு­க­ணைத் தாக்­கு­தல்­களைக் கடந்த வாரம்­கூட நடத்­திய வட­கொ­ரியா ஐக்­கிய நாட்டு நிறு­வ­னத்­தின் முக்­கிய அணு­வா­யு­தக் களைவு மாநாட்­டுக்கு தலைமை ஏற்று இருக்­கிறது. அடுத்த மூன்று வாரங்­க­ளுக்கு வட­கொ­ரியா அந்­தப் பொறுப்பை வகிக்­கும்.

ஆயு­தக் களைவு மாநாடு எனும் அந்த மாநாடு ஆண்­டுக்கு மூன்று முறை ஜெனி­வா­வில் நடக்­கும். தலை­மைப் பொறுப்பை நாடு­கள் மாறி மாறி ஏற்­றுக்­கொள்­ளும்.

இந்த வாரம், வட­கொ­ரியா தலைமை ஏற்­கும் முறை. வட­கொ­ரியா அவ்­வப்­போது ஏவு­கணை, அணு­வா­யு­தச் சோத­னை­களை நடத்தி வரு­வ­தால், ஐக்­கிய நாட்டு நிறு­வ­னம் அதன்­மீது பொரு­ளி­யல் தடை­களை விதித்­துள்­ளது.

அந்­நாடு தனது ஆயு­தங்­க­ளைக் களை­யும் கோரிக்­கை­க­ளுக்­குப் பிடி­கொ­டுக்­கா­ம­லும் பேச்­சு­வார்த்­தை­க­ளைப் புறக்­க­ணித்­தும் வரு­கிறது.

அவ்­வாறு தடை­க­ளுக்கு உள்­ளாகி இருக்­கும் வட­கொ­ரியா, ஐக்­கிய நாட்டு நிறு­வ­னத்­தின் ஆயு­தக் களைவு மாநாட்­டுக்­குத் தலைமை ஏற்­பது முர­ணாக உள்­ளது என்று அமெ­ரிக்க வெளி­யு­றவு அமைச்­சுப் பேச்­சா­ளர் கூறி­னார்.

மாநாடு இந்த முறை தொடங்­கி­ய­போது அதில் அங்­கம் வகிக்­கும் நாடு­கள், வட­கொ­ரி­யா­வைக் கண்­டிக்­கும் கூட்­ட­றிக்­கையை விடுத்­தன.

ஆனால் வட­கொ­ரியா அந்­தக் குறை­கூ­றல்­க­ளைக் கண்­டு­கொள்­ள­வில்லை.

மாநாட்­டில் பேசிய ஐக்­கிய நாட்டு நிறு­வ­னத்­துக்­கான வட­கொ­ரிய தூதர், தமது நாடு அமெ­ரிக்­கா­வு­டன் போர் புரிந்து வரு­வ­தா­க­வும் அத­னால் அது தன்­னைத் தற்­காத்­துக் கொள்ள ஆயு­தங்­க­ளைக் கையில் எடுக்க வேண்டி உள்­ளது என்­றும் கூறி­னார்.

 

Tamilmurasu