ஆப்கானிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்- பலி எண்ணிக்கை 920-ஆக உயர்வு

நிலநடுக்கம் ஏற்பட்டுள்ள பகுதிகளுக்கு மீட்பு படையினர் விரைந்துள்ளனர். ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நில நடுக்கம் அண்டை நாடான பாகிஸ்தானிலும் உணரப்பட்டது.

ஆப்கானிஸ்தானில் இன்று அதிகாலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. தென்கிழக்கு ஆப்கானிஸ்தானின் கோஸ்ட் நகரில் இருந்து 44 கி.மீ. தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. 51 கி.மீ. ஆழத்தில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது.

இது ரிக்டர் அளவில் 6.1 புள்ளியாக பதிவானது என்று அமெரிக்க நிலநடுக்கவியல் துறை தெரிவித்து இருந்தது. இந்த நிலநடுக்கத்தால் பக்டிகா மாகாணத்தில் வீடுகள் பயங்கரமாக குலுங்கின. அதிகாலையில் தூங்கிக் கொண்டிருந்த மக்கள் நில நடுக்கத்தை உணர்ந்ததும் அதிர்ச்சி அடைந்தனர்.

உடனே அவர்கள் வீடுகளை விட்டு வெளியே வந்தனர். ஆனால் சக்திவாய்ந்த நில நடுக்கத்தால் ஏராளமான வீடுகள் இடிந்து விழுந்தன. இதன் இடிபாடுகளில் பொதுமக்கள் சிக்கி கொண்டனர். அதேபோல் கோஸ்ட், நங்காஹார் மாகாணங்களிலும் வீடுகள் இடிந்தன.

இந்தநிலையில் சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் 255 பேர் உயிரிழந்துள்ளதாக ஆப்கானிஸ்தான் அரசின் செய்தி நிறுவனம் தெரி வித்திருந்தது. இது தற்போது 920ஆக உயர்ந்துள்ளது.

இதில் பக்டிகா மாகாணத்தில் மட்டும் 100-க்கும் மேற்பட்டோர் பலியாகி இருக்கிறார்கள். 250 பேர் காயம் அடைந்துள்ளனர். கோஸ்ட், நங்காஹார் மாகாணங்களில் பலர் உயிரிழந்து உள்ளனர். ஏராளமான வீடுகள் இடிந்துள்ளதாகவும் அதில் பலர் சிக்கி இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது.

நிலநடுக்கம் ஏற்பட்டுள்ள பகுதிகளுக்கு மீட்பு படையினர் விரைந்துள்ளனர். மீட்பு குழுவினர் ஹெலிகாப்டர் மூலம் அங்கு சென்றனர். இடிபாடுகளை அகற்றி அதில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. ஆப்கானிஸ்தான் அரசின் செய்தி நிறுவனத்தின் டைரக்டர் ஜெனரல் அப்துல் வாஹித் டுவிட்டரில் கூறும்போது, “பக்டிவாவில் 90 வீடுகள் இடிந்துள்ளன. ஏராளமான மக்கள் இடிபாடுகளில் சிக்கி உள்ளனர்” என்றார்.

தலிபான் அரசாங்கத்தின் துணை செய்தி தொடர்பாளர் பிலால் கரிமி கூறும் போது, “பக்டிகா மாகாணத்தில் நான்கு மாவட்டங்களில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. நூற்றுக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர். ஏராளமானோர் படுகாயம் அடந்துள்ளனர்.

பேரழிவை தடுக்க உடனடியாக குழுக்களை அனுப்புமாறு அனைத்து உதவி நிறுவனங்களையும் கேட்டு கொள்கிறோம்” என்றார்.

ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கம் அண்டை நாடான பாகிஸ்தானிலும் உணரப்பட்டது. பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத், லாகூர், முல்தான், குவெட்டா உள்ளிட்ட பகுதிகளில் நிலநடுக்கம் உணரப்பட்டது. சில வினாடிகள் நீடித்த இந்த நிலநடுக்கத்தால் அதிர்ச்சி அடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலையில் தஞ்சம் அடைந்தனர். நிலநடுக்கததின் அதிர்வுகள் பாகிஸ்தான் மற்றும் இந்தியாவில் உணரப்பட்ட தாக ஐரோப்பிய நிலநடுக்கம் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் முழுமையாக வெளியேறியதை அடுத்து தலிபான்கள் மீண்டும் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றி புதிய அரசாங்கத்தை அமைத்தனர். ஆப்கன் மக்களுக்கு கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர்.

அந்நாட்டில் பொருளாதார நெருக்கடி யால் சிக்கி தவித்து வரும் மக்கள், தற்போது நில நடுக்கத்தால் மேலும் துயரத்தை சந்தித்துள்ளனர். கடந்த 1998-ம் ஆண்டு ஆப்கானிஸ்தான் வடகிழக்கு பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 4,500 பேர் உயிரிழந்தனர்.

2002-ம் ஆண்டு வடக்கு ஆப்கானிஸ் தானில் ஏற்பட்ட நில நடுக் கத்தில் 1000 பேரும், 2015-ம் ஆண்டு நாட்டின் வட கிழக்கில் ஏற்பட்ட நில நடுக்கத்தில் 200-க்கும் மேற் பட்டோரும் பலியானார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Malaimalar